இப்படிச் சொல்கிறார் பிரியங்கா ஆறுமுகம். பிடித்த வேலைக்காக தனக்குக் கிடைக்கவிருந்த மிகப்பெரும் வாய்ப்புகளையும் கூட வேண்டாம் என ஒதுக்கியவர் பிரியங்கா. இப்போது மனதுக்குப் பிடித்த மேக்கப் கலையில் ஆச்சர்யம் ஏற்படுத்தும் அளவிற்கும் சம்பாதித்து வருகிறார். ‘சொந்த ஊர் ராஜபாளையம், அப்பா பி.ஆறுமுகம், விளையாட்டுத்துறையில் ஆசிரியர், அம்மா டாக்டர். எம். அருள்செல்வி, அவங்களும் விளையாட்டு டீச்சர், மேலும் விருதுநகர் மாவட்ட டெபுட்டி கமாண்டர். சின்ன வயதிலிருந்தே நல்லா படிப்பேன். நான் படிச்சது இன்ஜினியரிங், மூணு, நாலு மாதங்களில் என்னுடைய எம்.எஸ் படிப்பிற்காக நான் வெளிநாடு போறதுக்கான எல்லாம் வேலைகளும் முடிஞ்சு தயாராகிட்டு இருந்த வேளை, திடீர்ன்னு கொரோனா, ஊரடங்கு இப்படி இடி மாதிரி வந்து விழுந்தது. இதற்கிடையிலே நான் படிச்ச படிப்பிற்காக ஒரு தனியார் கம்பெனியிலே நல்ல சம்பளத்தில் ஹெச். ஆராகவும் வேலை செய்திட்டு
இருந்தேன். ஆனால் கனவு வெளிநாட்டுப் படிப்பாக இருந்துச்சு’ என்னும் பிரியங்காவிற்கு ஊரடங்கு காலம் அவரை வேறு விதமாக திசை மாற்றியிருக்கிறது. ‘வீட்டில் சும்மா இருக்க வேண்டிய சூழல் உருவானது, மேலும் எல்லா கம்பெனிகளும் மூடிட்டாங்க, என் வேலையும் வீட்டிலிருந்தே பார்க்கலாம்ன்னு சொல்லிட்டாங்க. ஹெச்.ஆர், வேலையிலே பெரும்பாலும் சம்பளத் தேதிகளில்தான் வேலை இருக்கும். மற்ற நாட்கள்ல எனக்கு குறிப்பா பெரிய அளவில் வேலை இல்லாதது போலவும், அதிக நேரம் சும்மாகவே பொழுதைக் கழிக்கற மாதிரியும் ஒரு எண்ணம் உண்டாச்சு. சரி எதாவது பயனுள்ளதா கத்துக்கலாமேன்னு யோசிச்சேன். சின்ன வயதில் இருந்தே என்னையும் சரி என்னைச் சுற்றி இருக்கறவங்களையும் சரி அழகுப் படுத்தவும், அழகுப் படுத்திக்கவும் பிடிக்கும். அப்படித்தான் யோசிச்சு ஏன் மேக்கப் கத்துக்கக் கூடாதுன்னு நினைச்சுக் கத்துக்கிட்டேன். மேக்கப் பேசிக் வகுப்பு முடிஞ்சது. அப்போதான் என்னுடைய ஃபிரெண்ட் கல்யாணம், அந்த வேளை நிறைய கட்டுப்பாடுகள், ஊரடங்கு கல்யாணங்கள் வேற நிறைய இருந்துச்சு. மேலும் நம்ம காரணம் சொல்லி இ-பாஸ் வேற எடுத்தாதான் கல்யாணத்துக்கு போக முடியும், மேலும் வெளியூர் மேக்கப் மக்களுக்கும் பெரிய அளவிலே வர்றதுக்கான வாய்ப்புகள் இல்லை, அல்லது அனுமதி இல்லை. அப்படியான வேளைதான் என்னுடைய தோழி ஒருத்தங்க கல்யாணம், அவங்களுக்கு மேக்கப் செய்ய செய்ய வேண்டிய ஆர்டிஸ்ட்டும் எனக்கு சீனியர்தான். அவங்க வர முடியாம, இ-பாஸ் கிடைக்காம என்னையே செய்யச் சொன்னாங்க. ‘நீதான் படிச்சிருக்கியே, சர்டிபிகேட் வாங்கியிருக்கியே, என் சார்பா இந்தக் கல்யாணம் நீயே மேக்கப் போட்டுடு அப்படின்னு சொன்னாங்க’ அங்கே ஆரம்பிச்சது இந்த மேக்கப் கெரியர்’ என்னும் பிரியங்கா இன்று பல விஐபிகள், சினிமா பிரபலங்கள் என எங்கும் பிரபலம்.
‘படிச்சிட்டு மேக்கப் ஆர்டிஸ்ட்டா வேலை செய்யப் போறியா? நீ என்ன பைத்தியமா?, அடுத்தவங்க காலு, கை, முகம்ன்னு தொடணும்? இதெல்லாம் தேவையா? நம்ம குடும்பத்துக்கு இந்த வேலை எல்லாம் எப்படி செட் ஆகும். இப்படி என் மேக்கப் வேலையை பலரும் கிண்டல் செய்தாங்க. குறிப்பா சொந்தக் காரங்க பலரும் அடக்கம். நான் மனம் தளரவே இல்லை. ஆனால் என் அம்மாவும், அப்பாவும் செம சப்போர்ட். உனக்கு என்ன பிடிக்கிதோ அதைச் செய் அப்படின்னு சொல்லிட்டாங்க.
தொடர்ந்து நிறைய கல்யாணங்கள், விழாக்கள்ன்னு என்னுடைய கெரியர் போயிட்டு இருக்கு. அப்போதான் சென்னை போயி அடுத்தடுத்து விஐபிகளுக்கு வேலை செய்யலாம்ன்னு தோணுச்சு. மேலும் ஒரு தனியார் சேனல்ல இருந்து கூட வாய்ப்பு வந்தது. ஆனால் இந்த முறை அப்பா கொஞ்சம் முரண்டு பிடிச்சார், ஒரு கட்டத்தில் என் பேச்சை மீறிப் போகக்கூடாது, இதனால் எனக்கு எதாவது கூட நடக்கும்ன்னு கூட மிரட்டினார். இருந்தாலும் பிடிச்ச வேலை, கெரியருக்காக எல்லாத்தையும் எதிர்த்துக் கிளம்பினேன். அப்படி வெளியே வந்ததின் விளைவுதான் இன்னைக்கு பல சினிமா பிரபலங்கள், பல விஐபிகள் வரைக்குமே என்னுடைய மேக்கப் பரவ ஆரம்பிச்சது. நடிகை மிருணல் தாக்கர், பிரபல பாலிவுட் மியூசிக் கலைஞர் பவ்யா பண்டிட், வாரிசு பட நடிகை சஞ்சனா ரெட்டி, நமிதா மாரிமுத்து, டாக்டர் சஞ்சனா ஜெய்குமார்(எஜுகேஷனல் சைக்காலஜிஸ்ட்), இப்படி என்னுடைய மேக்கப் பாலிவுட் வரைக்கும் போயிடுச்சு’ என்னும் பிரியங்கா இப்போது மேக்கப் கலைக்காக வெளிநாடு செல்லும் முயற்சியில் இருக்கிறார்.
‘மேல்படிப்புக்காக வெளிநாடு போகணும்னு யோசிச்சு எம்.எஸ் திட்டமிட்டேன். ஆனால் கடவுள் எனக்கு வேற யோசிச்சிருக்கார். இப்போ எனக்குப் பிடிச்ச வேலை, பிடிச்ச கலையான மேக்கப் கலைக்கான அட்வான்ஸ் கோர்ஸ் செய்யறதுக்காக மலேசியா போகப்போறேன். இன்னும் நிறைய கத்துக்கணும். மேக்கப்பில் அடுத்தடுத்து அப்டேட் ஆகணும். மேக்கப்பில் எதிர்பார்த்ததை விடவும் வருமானமும் அதிகரிச்சதால் வீட்டிலும் சந்தோஷமா இருக்காங்க. மேலும் மேக்கப் பத்தி என்னுடைய சொந்தக் காரர்கள் சிலர் பார்வையும் மாறியிருக்கு. மேக்கப்பிலே இவ்வளவு விஷயம் இருக்கான்னு இப்போ கேட்கவே ஆரம்பிச்சிட்டாங்க’ உற்சாகமாக பேசுகிறார் பிரியங்கா ஆறுமுகம்.
எந்த வேலையுமே மேலே, கீழே அப்படின்னு எதுவும் கிடையாது. எல்லாமே திறமை சார்ந்ததுதான். எவ்வளவு வருமானம் வந்தாலும் சரி மனதுக்கு பிடிக்காத வேலை மனநிம்மதியையே கெடுத்திடும். பிடிச்ச படிப்பை படிங்க, பிடிச்ச வேலையிலே குறைவான சம்பளமா இருந்தாலும் சரி யோசிக்காம செய்யுங்க. இல்லைன்னா மெஷின் மாதிரி வாழ்கிறோமோ? அப்படின்னு நினைக்க ஆரம்பிச்சிடுவோம்.பிரியங்காவின் வார்த்தைகள் இவை.
– ஷாலினி நியூட்டன்
The post பிடித்த வேலையை செய்வதுதான் மனதுக்கு நிறைவு! appeared first on Dinakaran.
