×

மழை பெய்வதால் தொற்று பரவும் அபாயம் சென்னையில் 200 வார்டுகளில் மருத்துவ முகாம் நடத்த திட்டம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதை தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் கட்டிடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட அங்காளம்மன் கோயில் தெருவில் மழை நீர் முழுவதும் அகற்றப்பட்ட நிலையை பார்வையிட்டார். தொடர்ந்து கணேசபுரம் சுரங்கப்பாதை சீர் செய்யப்பட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், இணை ஆணையர் சமீரன், துணை ஆணையர்கள் விஷூ மஹாஜன், சிவகுரு பிரபாகரன், ஷேக் அப்துல் ரஹ்மான், நிலைக்குழுத் தலைவர் சாந்தகுமாரி, மண்டலக் குழு தலைவர்கள் நேதாஜி யு.கணேசன், ஸ்ரீராமுலு, சரிதா மகேஷ்குமார், மூர்த்தி, ஜெயின், தலைமைப் பொறியாளர், மண்டல அலுவலர்கள், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர்கள் உள்பட பலர் இருந்தனர். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் இருந்தாலும் சென்னையில் மழையால் யாரும் பாதிக்க கூடாது என்பதற்காக மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் மீண்டும் இயல்பு நிலை மாறி இருக்கிறது.

கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் தான் நேற்று காலை தண்ணீர் தேக்கம் ஏற்பட்டு போக்குவரத்து தடை ஏற்பட்டது.‌ பின்னர் மீண்டும் காலை 11 மணி அளவில் அங்கும் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளும் கண்காணிக்கப்படுகிறது. ரூ.1220 கோடியில் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் பணி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் நிறைவடையும். மழையால் 30 இடங்களில் மரம் விழுந்தது, அதுவும் சரி செய்யப்பட்டது. இந்த பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழை வெள்ளத்தில் பாதுகாப்பதற்கு ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் 1913 புகார் எண் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மழையின் போது துரிதமான பணிகளை மேற்கொண்டதால் மக்கள் பாராட்டி உள்ளனர்.

சென்னை வியாசர்பாடி உள்ள கணேசபுரத்தில் ரயில்வேயிடம் பணிகள் மேற்கொள்ள ரயில்வே அனுமதி பெற வேண்டும். அதுவும் விரைவில் பெற்று பணிகள் நிறைவடையும். ஜூன் மாதத்தில் இந்த மழை எதிர்பாராத மழை, மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படும். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் யானைகளை வாங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில் அந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. தற்போது சென்னையில் மழை பெய்து வருவதால் சில இடங்களில் தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு தொடர்ச்சியாக இன்று கொளத்தூர் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெறும். இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

The post மழை பெய்வதால் தொற்று பரவும் அபாயம் சென்னையில் 200 வார்டுகளில் மருத்துவ முகாம் நடத்த திட்டம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,PK Shekharbabu ,Chennai Municipal Corporation Thandaiyarpet ,Rayapuram ,V.K. Nagar ,Ambattur ,Annanagar ,Dinakaran ,
× RELATED வாயால் மட்டுமே வடை சுட்டுக்கொண்டு...