×

கர்நாடகாவில் இளம்பெண்களின் ஆபாச படங்கள் வெளியிட்ட பாஜ மாணவரணி நிர்வாகி கைது

ஷிவமொக்கா: கர்நாடகாவில் இளம்பெண்களின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஷிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்தவர் பிரதீக் கவுடா (23). பாஜ மாணவர் அமைப்பின் தீர்த்தஹள்ளி தாலுகா நிர்வாகி. பாஜ தலைவர்கள் ஈஸ்வரப்பா, எடியூரப்பா உள்பட பல்வேறு முக்கிய தலைவர்களுடன் மிக நெருக்கமானவர். அவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டுள்ளார். இதையொட்டி பிரதீக் கவுடா, மாணவர் அமைப்பில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை சேர்த்துள்ளார். அப்போது அவர்களுக்கு, அமைப்பில் பொறுப்பு வழங்குவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்படி அமைப்பில் சேர்ந்தவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதை காட்டி மிரட்டியுள்ளார்.

அதற்கு, மாணவிகள் சம்மதிக்காததால், பிரதீக் ஆபாச வீடியோக்களை வாட்ஸ்அப்பில் மூலம் பகிர்ந்துள்ளார். அதேபோல் பிரதீக் கவுடா பல இளம்பெண்களுடன் வீடியோ காலில் பேசி அந்தரங்க புகைப்படங்களையும், மாணவிகளுடன் பழகிய ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், பாஜ நிர்வாகி பிரதீக் கவுடா வெளியிட்ட ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த பாஜ மாணவரணி நிர்வாகி பிரதீக் கவுடாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் பல்வேறு கல்லூரி மாணவிகளை ஏமாற்றி இதேபோல் ஆபாச வீடியோ எடுத்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், பிரதீக் கவுடாவின் செல்போன் மற்றும் லேப்டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆய்வு செய்கின்றனர்.

The post கர்நாடகாவில் இளம்பெண்களின் ஆபாச படங்கள் வெளியிட்ட பாஜ மாணவரணி நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Karnataka ,Shivamogga ,Shivmokka District Teerthahalli ,
× RELATED நான் ஜெயிப்பது உறுதி: பாஜவில் இருந்து...