×

நான் ஜெயிப்பது உறுதி: பாஜவில் இருந்து நீக்கினால் நான் பயந்து விடுவேனா? ஈஸ்வரப்பா பேச்சு

பெங்களூரு: பாஜவில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கப்பட்ட ஈஸ்வரப்பா, இதற்கெல்லாம் பயப்படுபவன் நான் அல்ல என்றும், ஷிவமொக்கா தொகுதியில் வெற்றி பெற்று பிரதமர் மோடிக்கு வலு சேர்ப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் கர்நாடகாவில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. மாநிலத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஷிவமொக்கா தொகுதியில் மே 7ம் தேதி தான் தேர்தல் நடக்கிறது.

ஷிவமொக்கா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகர் சிவராஜ் குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் போட்டியிடுகிறார். பாஜ சார்பில் அத்தொகுதி எம்.பியும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுமான ராகவேந்திரா போட்டியிடுகிறார். எடியூரப்பா மீதான அதிருப்தியில் அத்தொகுதியில் ராகவேந்திராவை எதிர்த்து பாஜ மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா போட்டியிடுகிறார்.

ஈஸ்வரப்பா கட்சி விதிகளை மீறியதாக 6 ஆண்டுகளுக்கு பா.ஜவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஷிவமொக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரப்பா, ‘கட்சியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுவே எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. இதற்கெல்லாம் பயப்படுபவன் நான் இல்லை. நான் ஷிவமொக்கா தொகுதியில் போட்டியிடுவதும், ஜெயிப்பதும் உறுதி. நான் வெற்றி பெற்று பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவதும் உறுதி’ என்றார்.

The post நான் ஜெயிப்பது உறுதி: பாஜவில் இருந்து நீக்கினால் நான் பயந்து விடுவேனா? ஈஸ்வரப்பா பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Iswarappa ,Bengaluru ,Eshwarappa ,Shivamogga ,Modi ,Lok Sabha ,Karnataka ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...