- திருவள்ளூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி
- திருவள்ளூர்
- நகராட்சி நடுநிலைப்பள்ளி
- வட ராஜா சாலை
- திருவள்ளூர் நகராட்சி
- தஞ்சாவூர் ராம
- தின மலர்
திருவள்ளூர், ஜூன் 19: திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட வடக்கு ராஜ வீதியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. தஞ்சாவூர் ராம நாயக்கன் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இந்த பள்ளி 99 ஆண்டுகால குத்தகை மூலம் கடந்த 13.6.1927 முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடைபெற்று வந்தது. கடந்த 20.6.1940 முதல் திருவள்ளூர் நகராட்சி சார்பில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி ஆரம்பப் பள்ளியாக ஏற்று நடத்தப்பட்டு வருகிறது. தற்போது திருவள்ளூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வரும் இப்பள்ளி கட்டிடத்தில் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை மற்றும் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 180 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் 99 ஆண்டு கால குத்தகை காலம் முடியும் தருவாயில் இருப்பதால் அந்த கட்டிடம் ராம நாயக்கன் டிரஸ்ட்டுக்கு தேவைப்படுவதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. 99 ஆண்டு கால குத்தகைக்கு இந்த கட்டிடத்தை வாடகைக்கு விட்ட அதே நிலையில்தான் தற்போதும் பள்ளி செயல்பட்டு வருகிறது. எந்த மாற்றமும் செய்யாததால் கட்டிடம் மிகவும் பாழடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு பயிலும் 180 மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என நீதிமன்றத்திலும் தனது வாதத்தில் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் அண்ணா யூனிவர்சிட்டி தொழில்நுட்ப கட்டிடப் பிரிவு பார்வையிட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து கடந்த 10 தினங்களுக்கு முன்பு ஆய்வு செய்த அண்ணா யூனிவர்சிட்டி தொழில்நுட்ப கட்டிடப் பிரிவு இந்த கட்டிடம் பள்ளிக் கூடம் நடத்த தகுதியில்லை என அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாற்று இடத்தில் பள்ளிக்கூடம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த கட்டிடத்தை இடித்தால் அதே பகுதியில் மீண்டும் பள்ளி வருமா என கேள்வி எழுப்பிய பெற்றோர் திருவள்ளூர் – செங்குன்றம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையர் கா.ராஜலட்சுமி, சம்பவ இடத்திற்கு சென்று பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 8 பேர், அங்கன்வாடி ஆசிரியர் ஒருவர் என மொத்தம் 9 ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். பள்ளிக்கூடம் நடத்த தகுதியில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் தற்போது மாற்று இடத்தில் பள்ளிக்கூடம் நடத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. திங்கள் முதல் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள தனபால் செட்டியார் திருமண மண்டபத்தில் பள்ளிக்கூடம் நடத்தப்படும் என நகராட்சி ஆணையர் கா.ராஜலட்சுமி சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். அதன்பிறகு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
The post திருவள்ளூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பாழடைந்த கட்டிடம் வகுப்பு நடத்த தகுதியில்லை: நீதிமன்றம் உத்தரவு: சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.
