×

சிவகாசியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

சிவகாசி, ஜூன் 18: சிவகாசி வட்டாரப் பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மூலம் பயனடைந்து வரும் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று, மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். அதன்படி, வடபட்டி கிராமத்தில் தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் மகாகனி மரக்கன்றுகள் பெற்று வளர்த்து வருவதையும், புதுக்கோட்டை ஊராட்சியில் உள்ள கம்பு விதை பண்ணையினையும், புதுக்கோட்டை கிராமத்தில் உணவு மற்றும் சத்து தானியங்கள் (பயறு) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுழற் கலப்பை மூலம் பயன்பெற்று வருவதையும், செவலூர் கிராமத்தில் தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் நடவு செய்யப்பட்ட தேக்கு மரக்கன்றுகளையும், செவலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டு வளர்ச்சி துறை பண்ணையினையும், நடையனேரி கிராமத்தில் கோடைகாலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 100 ஏக்கர் கோவில்பட்டி-4 ரக சோளம் பயிரிடப்பட்டுள்ள (கே4 ரகம்) வயலினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடி, பயிர் வளர்ப்பு முறைகள், அரசின் மூலம் வழங்கப்படும் உதவிகள், மகசூல் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, விவசாயிகளுக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பண்ணைக் கருவிகளும், இதர பொருட்களான உளுந்து, நிலக்கடலை மினி கிட் மற்றும் பேட்டரி தெளிப்பான்களையும் வழங்கினார். ஆய்வின்போது, வேளாண்மை துணை இயக்குனர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) சுமதி, சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரவள்ளி, வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post சிவகாசியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Department of Agriculture and Farmers' Welfare ,District Collector Inspection ,Dinakaran ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை