×

சென்னையில் 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதிநுட்ப நகரம், நிதிநுட்ப கோபுரம் வணிக வளாகம், நட்சத்திர விடுதி, உடற்பயிற்சி கூடம், உணவகங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைகிறது

சென்னை: சென்னையில் நிதிநுட்ப நகரம், நிதிநுட்ப கோபுரம் அமையும் இடத்தில் வணிக வளாகம், நட்சத்திர விடுதி, உடற்பயிற்சி கூடம், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைகிறது. மேலும் அங்கு பணிபுரிபவர்களுக்கான குடியிருப்பும் அங்கேயே அமைக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்படக்கூடிய அதிவேக வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கடந்த 2000ம் ஆண்டு சென்னை ராஜிவ் காந்தி சாலையில் கலைஞரின் தொலைநோக்கு பார்வையோடு டைடல் பார்க் அமைக்கப்பட்டது. இதன்மூலம் அந்த சாலை மட்டுமன்றி, அப்பகுதி முழுவதும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமையப்பெற்று, தற்போது தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமாக விளங்கி வருகிறது. அதேபோன்று, டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், நிதிநுட்ப துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நிதிநுட்ப துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பது முதல்வர் மு.க.ஸ்டாலினின் உயரிய நோக்கமாகும்.

அதை நிறைவேற்றும் வகையில், 2021-22ம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், நிதிநுட்பத் துறை வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் மாபெரும் வாய்ப்புகள் உள்ளதால் அதை முன்னெடுக்கும் வகையில் சென்னை நந்தம்பாக்கத்தில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் சென்னை, ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கத்தில் ரூ.116 கோடி மதிப்பீட்டில், 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்பட உள்ளது. இந்த நகரம், நிதித்துறை சார்ந்த உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை அமைப்பதற்கு ஏதுவாக சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும். மேலும், அங்கு பணிபுரிபவர்களுக்கு அந்நகரத்திலேயே குடியிருப்பு வசதி ஏற்படுத்தப்படுவதுடன், வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், பூங்காக்கள் மற்றும் உணவகங்கள் போன்ற அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும்.

இந்நகரம் அமைவதன் மூலம் ரூ.12,000 கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படும். அதேபோல நிதிநுட்ப நகர திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.254 கோடி மதிப்பீட்டில், 5.6 லட்சம் சதுர அடி கட்டிட பரப்பளவில் சர்வதேச தரத்திலான ஒரு நிதிநுட்ப கோபுரம் என்ற அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படவுள்ளது. நிதி மற்றும் நிதிநுட்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தொடங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள அலுவலகங்கள் இங்கு அமைக்கப்படும். இதில் 250 இருக்கைகள் மற்றும் 50 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கங்கள், குழந்தைகள் காப்பகம், உடற்பயிற்சி கூடம், உணவகங்கள் போன்றவை அமைக்கப்படும். இந்த நிதிநுட்ப கோபுரம் அமைவதன் மூலம், ரூ.1000 கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன் 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சென்னையில் 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதிநுட்ப நகரம், நிதிநுட்ப கோபுரம் வணிக வளாகம், நட்சத்திர விடுதி, உடற்பயிற்சி கூடம், உணவகங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைகிறது appeared first on Dinakaran.

Tags : Nithitechnik City ,Nithitechnik Gopuram ,Chennai ,Nititechnik ,City ,Gopuram ,Nititechnik City ,Nititechnik Tower ,
× RELATED சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு...