×

நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மணவாளநகர் அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் கேஇஎன்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1300 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் இந்த பள்ளியில் பயின்ற தே.உ.மாதேஷ் என்ற மாணவன் 585 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் 10ம் வகுப்பில் கொரோனாவால் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 11ம் வகுப்பினை ஆன் லைன் மூலம் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் பள்ளியில் தினமும் 12ம் வகுப்பு நேரம் முடிந்த பிறகும், சிறப்பு வகுப்புகளை கவனித்து நல்ல முறையில் படித்து வந்துள்ளார்.

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக நீட் தேர்வு எழுதிய மாணவன் மாதேஷ் 720க்கு 636 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் அரசு பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்று திருவள்ளூர் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மாணவன் மாதேஷை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசேகரன், ஆசிரியர்கள் குமாரி குட்டி, பிரபாகரன், பரமேஸ்வரி, கல்பனா, ஹேமலதா, ஜெய்லாவுதீன், ஆனந்தன் ஆகியோர் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும், பூச்செண்டு கொடுத்தும், இனிப்பு வழங்கியும் பாராட்டினர். பிறகு அவரது வெற்றிக்கு காரணமான அவரது தாயாருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மாணவன் தே.உ.மாதேஷ் பள்ளி மாணவர்களிடையே பேசியதாவது: நான் பிளஸ் 2 படிக்கும் போது தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் திறம்பட பயிற்சி அளித்தனர். எனது பெற்றோரும் எனக்காக கடந்த 3 ஆண்டுகளாக செல்போன் உபயோகிக்காமல், டிவி பார்க்காமல் இருந்தனர். நானும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி செயல்பட்டதால் என்னால் அதிகளவில் மதிப்பெண்கள் பெற முடிந்தது. மேலும் மருத்துவம் பயின்று நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்ற வேண்டும் என்பதே எனது லட்சியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மணவாளநகர் அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Manavalanagar Government School ,Tiruvallur ,KENC Government Higher Secondary School ,Manavalanagar ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...