![]()
வாலாஜாபாத்: வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செல்லும் குவாரி லாரிகளில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக விதிமுறைகளை மீறி சவுடு மண் எடுத்து செல்லப்படுகிறது. மேலும், அவ்வாறு எடுத்து செல்லும் லாரிகளில் மண் மீது தார்ப்பாய் போடாமல் எடுத்து செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இவ்வாறு செல்லும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வாலாஜாபாத் ரவுண்டானாவிலிருந்து அவளூர் வரை செல்லும் பாலாற்று தரை பாலம் வழியாக நாள்தோறும் தம்மனூர், கன்னடியன் குடிசை, அவளூர், ஆசூர், காமராஜபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களில் வாலாஜாபாத் வந்து இங்கிருந்து நாள்தோறும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், செங்கல்பட்டு, ஓரகடம், மறைமலைநகர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் செயல்படும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் அதிகம். இதேபோல், சுற்று வட்டார கிராமங்களை சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும் வாலாஜாபாத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், நாள்தோறும் பள்ளிக்கு சைக்கிள் மற்றும் பெற்றோர், உறவினர்களுடன் பைக்கில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் இந்த தரைப்பாளத்தின் வழியாக நாள்தோறும் சுற்றுவட்டார கிராமங்களில் செயல்படும் கல்குவாரிகள் மற்றும் நெய்யாடுப்பாக்கம் கிராமத்தில் ஏரி சவுடு மண் எடுத்து செல்ல நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் இரவு, பகலாக இந்த தரைப்பாளத்தின் வழியாக சென்று வருகின்றன. இதனால், தரைபாலம் முழுவதும் ஆங்காங்கே சிதலமடைந்து காணப்பட்டன. இதனை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் கனரக லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இருப்பினும் இதுநாள் வரை கனரக வாகனங்களின் அச்சுறுத்தல் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘அவளூர்-வாலாஜாபாத் ரவுண்டானா வரை செல்லும் பாலாற்று தரைபாலம் இந்த பாலத்தின் வழியாக 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.இது தரைப்பாலத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக லாரிகள் அதிகப்படியான சவுடு மண் ஏற்றிக்கொண்டு செல்கின்றன. இதனால், லாரியின் பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சூழல் நாள்தோறும் நிலவுகின்றன.
மேலும், வாகன விதிப்படி லாரிகளில் எந்தவித தார்ப்பாயும் கட்டப்படவில்லை. இதனால், மணல் கட்டிகள் அருகே சொல்லும் வாகனங்களின் மேல் விழும் சுழல் நிலவுகின்றன. இதுகுறித்து பலமுறை போலீசாரிடமும், போக்குவரத்து துறை அதிகாரியிடம் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் ஆபத்தான முறையில் செல்லும் கனரக வாகனங்கள் மீது வழக்குப்பதிவு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post வாலாஜாபாத்தில் விதிமுறைகளை மீறி அதிக அளவில் சவுடு மண் ஏற்றி செல்லும் லாரிகள்:தார்பாய் போடாததால் வானக ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.
