×

கூடலூர் அருகே சூறாவளிக்கு 2 ஆயிரம் வாழைகள் நாசம்

கூடலூர்: கூடலூர் அருகே வீசிய பலத்த சூறாவளி காற்றுக்கு 2 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமாகின. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். கேரளாவில் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது விற்பனை செய்வதற்காக கதளி, பூவன், ரஸ்தாளி, நேந்திரன் உள்ளிட்ட ரகங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. அறுவடைக்கு 2 மாதங்களே உள்ள நிலையில் வாழைகள் குலை தள்ளி காய்கள் பருக்க துவங்கி இருந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வந்தது.

நேற்று காலை திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்தது. தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்துறை மூச்சுகண்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் உள்ளிட்ட 4 விவசாயிகள் பயிரிட்டிருந்த 2 ஆயிரம் வாழைகள் சூறாவளியில் முறிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் தாசில்தார் சித்தராஜ், வனத்துறை, தோட்டக்கலை துறை மற்றும் வருவாய்த்துறையினர் சேதங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்தனர். சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கூடலூர் அருகே சூறாவளிக்கு 2 ஆயிரம் வாழைகள் நாசம் appeared first on Dinakaran.

Tags : Cyclone ,Kudalur ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED புதிய யானைகள் வழித்தட பிரச்னை செல்போன் டவரில் ஏறி விவசாயி போராட்டம்