×

விராலிமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி

விராலிமலை, ஜூன்.16: விராலிமலை தாலுகா அலுவலகத்தில் 1432ம் பசலி ஆண்டு வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கணக்குகளை சரிபார்த்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கிராம கணக்குகளை ஒவ்வொரு வருடமும் அந்தந்த பசலியின் (வருடம்) இறுதி மாதத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று, நடப்பு பசலி (1432) வருடத்திற்கு விராலிமலை வட்டம், கொடும்பாளூர் உள்வட்ட கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்றைய தினம் விராலிமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வு பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதில் கொடும்பாளூர் வருவாய் கிராம சரகத்திற்குட்பட்ட கிராமங்களான ராஜாளிபட்டி, நம்பம்பட்டி,மீனவேலி, அகரப்பட்டி, பொய்யாமணி, தேராவூர், ராஜகிரி, கொடும்பாளூர், தென்னம்பாடி, கசவனூர், தேங்காய்தின்னி பட்டி ஆகிய பகுதிகளுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.

மேலும் 16ம் தேதி நீர்பழனி உள் வட்டத்திற்கும், 20ம் தேதி விராலிமலை உள் வட்டத்திற்கும் வருவாய்த் தீர்வாயம் நடைபெற உள்ளது. இந்த ஜமாபந்தி நிகழ்வில் பொதுமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.இந்நிகழ்வில், தாசில்தார் சதீஸ், சதீஸ் சரவணகுமார் (தனி தாசில்தார்), மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் முருகப்பன் (பொ), திருச்சிராப்பள்ளி மண்டல துணை இயக்குநர் ராஜாமணி (நிலஅளவை), கோட்ட ஆய்வாளர் சண்முகராஜா (நில அளவை), மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post விராலிமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி appeared first on Dinakaran.

Tags : Jamabandhi ,Viralimalai Taluk Office ,Viralimalai ,Viralimalai Taluk Office District ,Collector ,Mercy Ramya ,Jamabandi ,Dinakaran ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா