தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் தலைமையில், மாநகராட்சி ஆணையர் அழகுமீனா முன்னிலையில் நேற்று நடைபெற்றது.இதில், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, நியமன குழு உறுப்பினர் பெருங்குளத்தூர் சேகர், எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ் பேசுகையில், ‘‘மாநகராட்சிக்கு சொந்தமான பெரும்பாலான கடைகள் அதிக வாடகை மற்றும் அதிக டெபாசிட் செலுத்த வேண்டும் என்பதால், யாரும் வாடகைக்கு எடுக்காமல் நீண்ட நாட்களாக மூடி கிடக்கிறது. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, வாடகை மற்றும் டெபாசிட் தொகையை குறைத்தால் சம்மந்தப்பட்ட கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்த வியாபாரிகள் முன் வருவார்கள். மாநகராட்சிக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய முடியும். மேலும், அதிகரித்து வரும் கொசு தொல்லையை ஒழிக்க கொசு மருந்து அடிக்கும் கருவிகளை புதிதாக வாங்கி தர வேண்டும். சாலைகளின் சுற்றி தெரியும் மாடுகளை பிடித்து அபராதம் வசூலிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்,’’ என்றார்
5வது மண்டல குழு தலைவர் எஸ்.இந்திரன் பேசுகையில், ‘‘மாநகராட்சியில் நியமிக்கப்பட்டுள்ள உதவி ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். எல்.இ.டி விலக்குகள் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டு இதுவரை பணிகள் நடைபெறவில்லை. எனவே உடனடியாக எல்.இ.டி விளக்குகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்கள் மீது நகரமைப்பு பிரிவினர் நடவடிக்கை எடுப்பதில்லை,’’ என்றார்.
2வது மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை பேசுகையில், ‘‘மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார சுடுகாடுகள் அமைக்க திட்டமிடப்பட்டு 17வது வார்டில் உள்ள சுடுகாட்டை மாநகராட்சி சார்பில் தடை செய்ய திட்டமிட்டு இருக்கிறீர்கள். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட சுடுகாடுகள் உள்ளது. அனைத்து இடங்களிலும் மின்சார சுடுகாடுகள் அமைத்து செயல்பாட்டிற்கு வந்த பின்னர், தற்போது உள்ள சுடுகாட்டில் பயன்பாட்டை நிறுத்தலாம். 2வது மண்டலத்தில் கால்வாய் பணிகள், சாலை சீரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மழைக்காலத்திற்கு முன்னர் முடிக்க வேண்டும்,’’ என்றார்.
இந்நிலையில் கூட்டத்தில் தங்களுக்கு பேச அனுமதி வழங்கவில்லை எனக்கூறி கூட்டத்தில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தாம்பரம் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் உணவுகள் தரமாக இல்லை, அங்கு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளம் பாக்கி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மாநகராட்சியில் டெண்டர் விடப்பட்டு அதற்கான பணம் ஒதுக்கபடாததால் பணிகள் நடைபெறாமல் உள்ளது. எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யாமல் இருக்கும் மாநகராட்சியை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றார்.
The post மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு டெபாசிட் தொகையை குறைக்க வேண்டும்: தாம்பரம் மன்ற கூட்டத்தில் கோரிக்கை appeared first on Dinakaran.