×

14 ஏரிகள் இணைப்பு பணி 45 சதவீதம் நிறைவு

தர்மபுரி, ஜூன் 16: பாலக்கோடு அருகே, சின்னாறு அணையின் உபரிநீர் திட்டத்தின் கீழ், ெஜர்தலாவ் -புலிக்கரை உள்ளிட்ட 14 ஏரிகள், பாசன கால்வாய் இணைப்பு பணிகள் 45 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பாறைகளை உடைத்து பாசன கால்வாய் அமைக்கும் பணிகளை, கலெக்டர் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பஞ்சப்பள்ளி அருகே சின்னாறு அணை உள்ளது. தேன்கனிக்கோட்டை, தளி மற்றும் பெட்டமுகிலாளம் உள்ளிட்ட(யானைகள் நடமாட்டம் உள்ள காடு) வனப்பகுதி இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. மழை காலங்களில் இந்த வனப்பகுதிகளில் பெய்யும் மழைநீர், காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்து வந்து சின்னாறு அணையில் கலக்கிறது. சின்னாறு அணை நிரம்பும்போது, அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் பாலக்கோடு, பென்னாகரம் வழியாக ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த உபரிநீரை ஏரிகளுக்கு திருப்பி விட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, சின்னாறு அணையில் இருந்து, ஜெர்தலாவ் ஏரிக்கு தண்ணீரை கொண்டு சென்று புலிக்கரை ஏரியை இணைக்கும் வகையில், 14 கி.மீ., தூரத்திற்கு புதிய கால்வாய் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் வட்டத்தில் உள்ள மேக்கலாம்பட்டி ஏரி, அழகம்பட்டி ஏரி, கம்மநாயக்கம்பட்டி ஏரி, மோதுகுலஅள்ளி ஏரி, சோமனஅள்ளி ஏரி, காட்டேரி, கொல்லஅள்ளி ஏரி, காட்டனஅள்ளி ஏரி, பெத்தலஅள்ளி ஏரி, ஜப்பால்குட்டை, பேகாரஅள்ளி ஏரி, பெத்தன்குட்டை உள்பட 14 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படும். இதன்மூலம் எர்ரனஅள்ளி, கரகதஅள்ளி, காட்டனஅள்ளி, கருக்குமாரனஅள்ளி, மோதுகுலஅள்ளி, பி.கொல்லஅள்ளி, பேகாரஅள்ளி, புலிக்கரை ஆகிய 14 வருவாய் கிராமங்களும் பயனடைகின்றன. இந்த ஏரிகள் மூலம் 432.80 ஏக்கர் பாசன வசதி பெறும். இதன் மூலம் 1572 டன் உணவு உற்பத்தியாகும்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி, பாலக்கோடு எர்ரனஅள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ், ₹30.37 கோடி மதிப்பீட்டில் ெஜர்தலாவ் ஏரி கால்வாய் நெடுகை 5 கிலோ மீட்டரிலிருந்து ஒரு புதிய கால்வாய் அமைத்து எர்ரனஅள்ளி ஏரி, புலிக்கரை ஏரி உட்பட இதர 14 ஏரிகளுக்கு சின்னாறு அணையின் மழை கால வெள்ள உபரிநீர் வழங்கும் திட்டப்பணியை, அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். இந்த பணி தற்போது 45 சதவீதம் முடிவடைந்துள்ளது. கரகதஅள்ளி உள்ளிட்ட சில இடங்களில் பாறைகளை உடைத்து பாசன கால்வாய் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கரகதஅள்ளி பகுதியில் கலெக்டர் சாந்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர்கள் பிரபு, வெங்கடேசன், சாம்ராஜ், பிஆர்ஓ லோகநாதன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதுகுறித்து கலெக்டர் சாந்தி கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் நீர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. நபார்டு திட்டத்தின் கீழ், ஜெர்தலாவ் ஏரி -புலிக்கரை ஏரி உள்ளிட்ட 14 ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டம் ₹30.37 கோடி மதிப்பீட்டில் துவங்கியுள்ளது. கடந்த 11 மாதமாக கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. பாசன கால்வாய் அமைக்கும் பணிகள் 45 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதற்காக பட்டா மற்றும் அரசு புறம்போக்கு நிலம் மொத்தம் 24.18 ஹெக்டர் பரப்பில் நிலம் எடுக்கப்பட்டு பணிகள் நடக்கிறது. இப்பணிகள் வரும் டிசம்பர் மாதத்தில் நிறைவடையும்,’ என்றார். முன்னதாக திருமல்வாடியில், நபார்டு திட்டத்தின் கீழ் கெசர்குலி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள புதிய தடுப்பணை மற்றும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

The post 14 ஏரிகள் இணைப்பு பணி 45 சதவீதம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Ejardalao-Pulikkarai ,Chinnaru Dam ,Palakod ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்