×

உசுரு முக்கியம் குமாரு…

குமரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் மின் கம்பிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் கம்பங்கள் உடைத்து பாதிப்பு ஏற்பட்டது. உடைந்த மின்கம்பங்களை மாற்றுவதற்காக தக்கலை அருகே மூலச்சல் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மினி டெம்போ ஒன்றில் கம்பங்களை ஏற்றிக்கொண்டு செம்பொன்விளை மின்வாரிய அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மின் கம்பங்கள் நடும் பணியை மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். கோழிப்போர்விளை மற்றும் குளச்சல் இடையே அந்த டெம்போ வாகனம் சென்று கொண்டிருந்த போது அதில் ஒப்பந்த பணியாளர் ஒருவர் ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள் மீது படுத்து அசந்து தூங்கிக்கொண்டிருந்தார். இதனை பின்னால் சென்ற ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

* அது நானில்லை…
சேலம் கருப்பூரில் நடந்த அரசு விழாவில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கெங்கவல்லி தாலுகாவைச் சேர்ந்த பயனாளிகளை, நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக, தாசில்தார் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். விழாவில், கடம்பூரில் பணிபுரியும் கிராம உதவியாளர் செந்நிலவன் கலந்து கொண்டார். அவர் முதல்வர் கலந்து கொள்ளும் விழாவுக்கு முறையாக பணி மேற்கொள்ளவில்லை என, தொலைபேசியில் தாசில்தார் ஆபாசமாக திட்டியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ வைரலானது. இதுகுறித்து, கடம்பூர் கிராம உதவியாளர் செந்நிலவனை, பலமுறை தொடர்பு கொண்ட போதும், அவர் போனை எடுக்கவில்லை. பின்னர், அவரது மனைவி, கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தெரிவித்தார். இந்த ஆடியோ குறித்து கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசனிடம் கேட்ட போது, என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் நோக்கத்தில் சிலர் இதுபோன்று அவதூறு பரப்பி வருகின்றனர். அந்த ஆடியோவில் பேசியது நான் இல்லை என மறுத்தார். இந்த ஆடியோ வைரலாவது வருவாய்த்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post உசுரு முக்கியம் குமாரு… appeared first on Dinakaran.

Tags : Usuru ,Kumaru ,Kumari district ,
× RELATED குமரியில் கனமழை எதிரொலி : ரப்பர் பால் வெட்டும் தொழில் நிறுத்தம்