×

காரியஸித்தி அருளும் வீர ஆஞ்சநேயர்; தீமைகளை அழித்து நன்மைகளை அருள்வார்..!!

வீர ஆஞ்சநேயர் தீமைகளை அழித்து நன்மைகளை அருள்பவராகவும் காரிய ஸித்தி அருள்பவராகவும் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். வேலூரில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 24 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கழனிப்பாக்கம் என்னும் ஊர். இங்குதான் சுமார் 500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட வீரஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது.

பெரும்பாலும் அஞ்சலி ஹஸ்தராகக் காட்சி கொடுக்கும் ஆஞ்சநேயர் இத்தலத்தில் அபய ஹஸ்தராக அருள்பாலிக்கிறார். தூக்கிய அவரது வலது திருக்கரம் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது. கழுத்தில் சாளக்கிராம மாலை அணிந்திருக்கும் இந்த ஆஞ்சநேயர் தன் இடது கையில் சௌகந்திக மலரை ஏந்தியிருக்கிறார். இடுப்பில் ஒரு சிறு வாள் தரித்து வாலில் மணியோடு திகழ்கிறார். திருப்பாதம் ஒன்றால் அரக்கன் போன்ற ஓர் உருவை மிதித்து கம்பீரமாகக் காட்சி தருகிறார். இந்த ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால் மனதில் உள்ள பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் காரிய ஸித்தி அருள்பவர் இந்த ஆஞ்சநேயர்.

இந்த ஆலயம் நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டுப் பெருமையோடு திகழ்ந்தது என்பதை இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இந்த ஆலயத்தின் முகப்பில் இருக்கும் கல்வெட்டில்,

‘ஸ்ரீமுக வருடம், சித்திரை மாதம் இரண்டாம் நாள் வீர வெங்கடபதி ராயர் காலத்தில் கோவிந்தப்ப நாயக்கர் கட்டிய ஆலய மண்டபம். இந்த தர்மத்துக்கும், தண்ணீர் பந்தல் சத்திரத்துக்கும், கழனிபாக்கத்தில், கழனியில் குழி முப்பதும், கொல்லையில் குழி ஐம்பதும், சந்திராதித்தவரை நடத்திக் கொள்ளவும். இதற்கு யாதொரு தீங்கு செய்பவர்கள் கங்கை தீர்த்தத்தில் காராம் பசுவைக் கொன்ற தோஷத்தை அடைவார்கள்’ என்னும் செய்தி காணப்படுகிறது.

கி.பி. 1573 ம் ஆண்டு இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட கோவிந்தப்ப நாயக்கர் என்பவர் இந்தக் கோயிலுக்கு மண்டபம் கட்டி தண்ணீர்பந்தல் அமைத்து திருப்பணி செய்துள்ளார். ஆனால் காலப்போக்கில் இந்த ஆலயம் சிதைவுற்றது. பூஜைகள் வழிபாடுகள் இன்றி சிலகாலம் இருந்தது.

பிறகு இந்தப் பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் எடுத்த முயற்சியின் பயனாக ஆலயம் மீண்டும் வழிபாட்டுக்குள் வந்தது. திருப்பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. ஆலயத்தின் பழைய மண்டபம் பிரிக்கப்பட்டு தற்போது தற்காலிகமாக ஒரு கட்டடம் எழுப்பப்பட்டு அதில் சுவாமியை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறார்கள்.

இந்த ஆஞ்சநேயரின் மகிமையை அறிந்து தற்போது திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். வந்து வணங்கும் பக்தர்களின் குறைகள் தீர்கின்றன. தொழிில் மற்றும் கல்வியில் மேன்மை வேண்டுபவர்கள் அனுமனின் ஆசியில் அவை விரைவில் கிடைக்கின்றன என்கிறார்கள் பக்தர்கள். வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு, இயன்றவர்கள் திருப்பணிகளிலும் பங்களித்து வீர ஆஞ்சநேயரின் அருளுக்குப் பாத்திரர் ஆகலாம்.

The post காரியஸித்தி அருளும் வீர ஆஞ்சநேயர்; தீமைகளை அழித்து நன்மைகளை அருள்வார்..!! appeared first on Dinakaran.

Tags : Anchenair ,Karya ,Sitthi ,Vellore ,Bengaluru ,Gaiyasthi ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாயிகளுக்கு கை...