×

ஊருக்குள் பரவி விளைநிலங்களை சூழ்ந்தது; களக்காடு வனப்பகுதியில் காட்டுத் தீ: 10 ஆயிரம் வாழைகள் கருகி நாசம்

களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் பால்ராஜ் (48). விவசாயி. இவர், களக்காடு மலையடிவாரத்தில் தேங்காய் உருளி அருவி அருகே உள்ள திருவாவடுதுறை மடத்திற்கு சொந்தமான விளைநிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இதில் வாழை, நெல் பயிர் செய்துள்ளார். களக்காடு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் வடகரை பீட் பகுதியில் நேற்று பகலில் காட்டுத் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் களக்காடு வனத்துறை ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் சென்று மர கொப்புகளை வைத்து அடித்தும், மண், கற்களை அள்ளி போட்டும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதனிடையே வனப்பகுதியில் பற்றிய காட்டு தீ திடீரென திசை மாறி கிழக்கு நோக்கி திரும்பியது. அடுத்த சில நிமிடங்களில் மலையடிவாரத்தை தாண்டி, ஊருக்குள் பரவிய காட்டுத் தீ பால்ராஜ் பயிர் செய்து வரும் விளைநிலங்களை சூழ்ந்தது. சுமார் 8 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பற்றி எரிந்தது. இதன்பிறகு விவசாயிகள் சேர்ந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர். இருப்பினும் வாழைகளில் தீ பற்றின. உரிய நேரத்தில் உரமிட்டு, தண்ணீர் பாய்த்து கண் போல் பாதுகாத்து வந்த வாழைகள் கொழுந்து விட்டு எரிவதை பார்த்த பால்ராஜ் மற்றும் தொழிலாளர் கண்ணீர் விட்டு கதறினார். இந்த தீ விபத்தில் 10 ஆயிரம் வாழைகளும், தோட்டத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 8 ஆயிரம் வாழைவாரி கம்புகளும் தீயில் கருகி சாம்பலானது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

‘’தீயில் கருகிய வாழைகள் ஏத்தன், ரசகதலி, மட்டி வகையை சேர்ந்தது. குலை தள்ளி அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து வாழைகள் தீயில் கருகியதால் விவசாயி பால்ராஜ்க்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு பெரும் போராட்டத்திற்கு பின் காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயினால் கருகிய வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று விவசாயிகள் கூறினர். களக்காடு மலையில் பலமுறை காட்டுத் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

ஆனால் காட்டுத் தீ ஊருக்குள் பரவியது கிடையாது. அதற்குள் வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்தி விடுவார்கள். தற்போது தான் முதல் முறையாக வனப்பகுதியில் பற்றிய காட்டு தீ ஊருக்குள் பரவி விளைநிலங்களை கபளீகரம் செய்துள்ளது. முன்னதாக மலையில் பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறை ஊழியர்கள் மற்றொரு பகுதியில் எதிர் தீ வைத்துள்ளனர். இதனால் தீ கட்டுப்படுத்த முடியாமல் மேலும் பரவி விளைநிலங்களுக்குள் ஊடுருவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

The post ஊருக்குள் பரவி விளைநிலங்களை சூழ்ந்தது; களக்காடு வனப்பகுதியில் காட்டுத் தீ: 10 ஆயிரம் வாழைகள் கருகி நாசம் appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Balraj ,Manjuvilai ,Nellai district ,Dinakaran ,
× RELATED களக்காடு அருகே பைக்குகள் திருட்டு