×
Saravana Stores

தகாத உறவுக்கு தடையாக இருந்ததால் கூலிப்படை ஏவி கணவனை கொல்ல முயற்சி: மனைவி, காதலன் உள்பட 3 பேர் கைது

விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த நாகலாபுரம் அருகே உள்ள கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகு சுந்தரபாண்டி(32). விவசாயியான இவரும் வல்லநாடு பகுதியை சேர்ந்த புனிதஆனி எப்சிபா(29) என்பவரும் கடந்த 2014ம் ஆண்டு காதல் திருமணம் செய்தனர் இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது அழகுசுந்தரபாண்டியும், புனித ஆனி எப்சிபாவும் சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வந்தனர். கடந்த 8ம் தேதி அழகுசுந்தரபாண்டி, இதே பகுதியில் உள்ள குத்தகை நிலத்தில் வேலை முடித்துவிட்டு இரவில் பைக்கில் வீட்டுக்கு சென்றார்.

சங்கரலிங்கபுரம் விலக்கு பகுதியில் வந்தபோது கவுண்டம்பட்டியை சேர்ந்த மாரிராஜ்(31) என்பவர் மற்றொரு பைக்கில் வந்துள்ளார். அவரை பார்த்ததும் அவருடன் பேசிக் கொண்டே வந்துள்ளார். மாரிராஜ் திடீரென தனது பைக்கை நிறுத்திவிட்டு சாலையோரம் நின்றுவிடவே, அழகு சுந்தரபாண்டி மட்டும் தனியாக பைக்கில் சென்றுள்ளார். இதன்பிறகு சல்லிசெட்டிப்பட்டி அருகே அழகு சுந்தரபாண்டி வரும்போது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் இருவர் அவரை அரிவாளால் தாக்க முயன்றனர்.

சுதாரித்துக் கொண்ட அழகு சுந்தரபாண்டி வேகமாக பைக்கை ஓட்டவே, அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் உயிர் தப்பி சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தை சென்றடைந்தார். அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் மர்மநபர்கள், பைக்கில் தப்பிச் சென்றனர். கிராம மக்கள், அழகு சுந்தரபாண்டியை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அழகு சுந்தரபாண்டி கொடுத்த புகாரின்படி, சங்கரலிங்கபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் தெரியவந்திருப்பதாவது; புனித ஆனி எப்சிபா, கடந்த 2014ம் ஆண்டு கவுண்டம்பட்டியில் நடந்த கைத்தொழில் பயிற்சி முகாமிற்காக வந்துள்ளார். அப்போது அழகு சுந்தரபாண்டி, மாரிராஜ் உள்ளிட்டோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அழகு சுந்தரபாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் மாரிராஜுடன் இருந்த பழக்கம், தகாத தொடர்பாக மாறியுள்ளது. அவ்வப்போது இருவரும் தனிமையில் சந்தித்துள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு அழகு சுந்தரபாண்டிக்கு தெரியவரவே, மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களது பழக்கம் தொடரவே, சின்னவநாயக்கன்பட்டிக்கு தனிக்குடித்தனம் சென்றுள்ளார்.

இதனால் காதலனை அடிக்கடி சந்திக்க முடியாமல் தவித்துவந்த புனித ஆனி எப்சிபா, தகாத தொடர்புக்கு இடையூறாக இருக்கும் அழகு சுந்தரபாண்டியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதுகுறித்து மாரிராஜிடம் தெரிவித்து இருவரும் சேர்ந்து திட்டமிட்டு இதற்காக மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த இருவரிடம் ரூ.3.40 லட்சத்துக்கு பேசி கூலிப்படையாக தயார் செய்துள்ளனர். மேலும் ரூ.1.20 லட்சம் முன்பணமாக கொடுத்துள்ளனர்.

இந்த திட்டத்திற்கு கவுண்டம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். சம்பவத்தன்று அழகு சுந்தரபாண்டியை மாரிராஜ், கூலிப்படைக்கு அடையாளம் காட்டிய நிலையில், திட்டம் தோல்வி அடைந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதையடுத்து மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புனித ஆனி எப்சிபாவை நெல்லை கொக்கிரகுளம் சிறையிலும் மாரிராஜ், சரவணன் ஆகியோரை பாளை மத்திய சிறையிலும் அடைத்தனர். இதுதொடர்பாக கூலிப்படையை சேர்ந்த இருவரை தேடி வருகின்றனர்.

கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கணவனை கொல்ல முயற்சி: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் கவுண்டர் மேட்டு தெருவை சேர்ந்த கணேசன் (55). இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்து (49). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. கணேசன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். நேற்றும் குடிபோதையில் வந்த மனைவியிடம் மேலும் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். இதன்காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அதன்பிறகு போதையில் அவர் வீட்டில் தூங்கிவிட்டார். இதன்பிறகு ஆத்திரம் அடைந்த முத்து, தூங்கிக் கொண்டிருந்த கணேசன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொல்ல முயன்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கணேசனை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.

The post தகாத உறவுக்கு தடையாக இருந்ததால் கூலிப்படை ஏவி கணவனை கொல்ல முயற்சி: மனைவி, காதலன் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mercenary AV ,Vlathikulam ,Akku Sundarabandi ,Kaundampatti ,Nagalapuram ,Thoothukudi district ,
× RELATED வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் பயிற்சி வகுப்பு