×

‘‘ஆபரேஷன் செய்யும் கைகள் அரவணைக்கவும் செய்யும்’ அரசு டாக்டர்கள் வளர்த்த பெண்ணுக்கு இன்று திருமணம்: வீட்டு மனை உள்பட வித, விதமான சீர்வரிசை

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் வளர்த்த பெண்ணுக்கு இன்று சீர்வரிசையுடன் தடபுடலாக திருமணம் நடத்தப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 2 குழந்தைகளுடன், மதுரை ரயில் நிலையம் வந்தார். சோர்வுடன் பிளாட்பாரத்தில் அந்த பெண் மயங்கி விழ முயன்றபோது பயணிகள் சிலர் அந்தபெண்ணை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், பெண்ணுக்கு காசநோய் தீவிரமாக தாக்கி உள்ளதை அறிந்தனர். இதையடுத்து அவரை மேல்சிகிச்சைக்காக மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் தீவிர சிகிச்சையளித்தும் அந்த பெண் இறந்தார். இதனால் அவரின் 2 குழந்தைகளும் ஆதரவற்று பரிதவித்து நின்றனர்.

அந்த பெண்ணின் பெயர் ரொஸ்பெக், பெங்களூருவில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அங்கு சக ஊழியருடன் காதல் மலர்ந்து. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள் ரீட்டா, மகன் அலெக்ஸ். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி பிரிந்தனர். இதனால் ரொஸ்பெக், அடைக்கலம் தேடி சொந்த ஊரான மதுரைக்கு உறவினர்களை தேடி வந்தபோது நோயுடன் போராடி இறந்தார். தாயை இழந்து பரிதவித்து நின்ற 2 குழந்தைகளுக்கும் காசநோய் இருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் காசநோயில் இருந்து விடுபட்டு உடல் நலம் தேறினர்.

தாயை இழந்த இரு குழந்தைகளுக்கும் தோப்பூர் அரசு மருத்துவமனை தாய்வீடாக மாறியது. டாக்டர்கள் அரவணைப்பில் செல்லப் பிள்ளைகளாக வளர்ந்தனர். இருவரும் மைனர் என்பதால் மதுரை திருநகர் கான்வென்டில் தங்கி படித்து வந்தனர். ரீட்டா 18 வயதான நிலையில் மீண்டும் தோப்பூர் அரசு மருத்துவமனைக்கே வந்து தங்கி பணியாற்ற விரும்பினார். மறுப்பு தெரிவிக்க முடியாத நிலையில் மருத்துவமனை நிர்வாகம், ரீட்டாவுக்கு காச நோயாளிகளுக்கு உதவும் தற்காலிக ஊழியர் பணி வழங்கியது. தம்பி அலெக்ஸ் ஐடிஐ படித்து வருகிறார்.

ரீட்டாவுக்கு 22 வயதான நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். மதுரையில் பிரபல ஓட்டலில் பணிபுரியும் ஜோசப்புக்கும், ரீட்டாவுக்கும் திருமணம் செய்து வைக்க முன்வந்தனர். டீன் ரத்தினவேல், தோப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், பணியாளர்கள் ஒன்றிணைந்து இந்த திருமணத்தை நடத்துகின்றனர். ரீட்டா – ஜோசப் திருமணம் மதுரையில் இன்று நடக்கிறது.

மணப்பெண் ரீட்டாவுக்கு தாய் வீட்டு சீதனமாக, அவனியாபுரம் அருகே வளையங்குளத்தில் ஒன்றரை சென்ட் பிளாட், 6 பவுன் நகை, கட்டில், பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை மருத்துவர்கள் வழங்கியுள்ளனர்.மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் கூறும்போது, ‘‘நோயாளிகளுக்கு உயர்தர மருத்துவத்துடன், மனிதநேயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது ரீட்டாவின் திருமண வைபவ நிகழ்வு ஒரு சாட்சியாகும்’’ என்றார்.

The post ‘‘ஆபரேஷன் செய்யும் கைகள் அரவணைக்கவும் செய்யும்’ அரசு டாக்டர்கள் வளர்த்த பெண்ணுக்கு இன்று திருமணம்: வீட்டு மனை உள்பட வித, விதமான சீர்வரிசை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Government Hospital ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை