×

வறண்டு வரும் பாப்பாரப்பட்டி ஏரி

ஆட்டையாம்பட்டி, ஜூன் 14: ஆட்டையாம்பட்டி – ராசிபுரம் செல்லும் சாலையில், பாப்பாரப்பட்டி பகுதியில் சாலையோரம் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு ஏற்காட்டில் மழை பெய்யும் போது திருமணிமுத்தாறு வழியாக நீர் வருகிறது. மழை இல்லாத நாட்களில் திருமணிமுத்தாற்றில் வரும் சாக்கடை கழிவுநீர் ஏரியில் தேங்குவதால் ஆண்டு முழுவதும் ஏரியில் தண்ணீர் காணப்படும். இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், ஆண்டு முழுவதுமாக பாசன வசதி பெறுகிறது.

தவிர, ஏரியின் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 3 கி.மீ., தூரத்துக்கு நிலத்தடி நீர் கிடைக்கிறது. விவசாய கிணறுகள், வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதமாக மழையின்றி, கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் ஏரியில் தண்ணீர் வேகமாக வற்றி வருகிறது. பாறைகள் வெளியே தெரிகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் ஏரியில் தண்ணீர் வெப்பமடைவதால் மீன்கள் செத்து மிதக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீன் குத்தகைக்காரர்கள் சிறிது சிறிதாக மீன்களை பிடிக்காமல், மொத்தமாக மீன்களை பிடித்து விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏரியில் தண்ணீர் வற்றியுள்ளதால் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் தாழ்ந்து, ஆழ்துளை கிணறுகளில் நீர் குறைந்துள்ளது. பருவமழை பெய்தால் தான், மீண்டும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்னை தீரும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

The post வறண்டு வரும் பாப்பாரப்பட்டி ஏரி appeared first on Dinakaran.

Tags : Paparapatti Lake ,Attaiyambatti ,Rasipuram ,Paparapatti ,Dinakaran ,
× RELATED சாலை விபத்தில் பெயிண்டர் பலி