×

கோட்டூர் மாநகராட்சி விளையாட்டு திடலை ₹5 கோடியில் மேம்படுத்தும் பணி ஓராண்டுக்குள் முடிவடையும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: கோட்டூர் மாநகராட்சி விளையாட்டு திடலை ₹5 கோடியில் மேம்படுத்தும் பணி ஓராண்டுக்குள் முடிவடையும் என்று ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோட்டூரில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலை ₹5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த நிதி ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 50 அறிவிப்புகளை அறிவிக்கப்பட்டது. அதில் ஒன்றான சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோட்டூரில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலை ₹5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது. இது தொடர்பாக இன்று கள ஆய்வு மேற்கொண்டோம். அறிவித்த அனைத்து திட்டங்களையும் இந்த ஆண்டு பணிகளை செய்வதற்குரிய வேகத்தில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஈடுபட்டிருக்கிறது. அந்த வகையில், கோட்டூர் விளையாட்டு திடலை மேம்படுத்த உள்ளோம். கோட்டூர் விளையாட்டு திடலை பொறுத்தவரை பல விளையாட்டு வீரர்களை உருவாக்கி, இன்றைக்கு ரயில்வே, ஐசிஎப் போன்ற பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பையும் பெற்றுத்தந்திருக்கின்ற மைதானமாக அமைந்திருக்கிறது.

எனவே, இந்த மைதானத்தை மேம்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்தது. இதை ₹5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு வரைபடமும் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. 1.16 ஏக்கர் நில பரப்பிலான இந்த விளையாட்டு மைதானத்தில் சுற்றிலும் நடைபயிற்சிக்கான பாதை அமைப்பது, சிறுவர்களுக்கான விளையாட்டு திடல் ஏற்படுத்துவது, மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்துவதற்குரிய கேலரி ஒன்றை உருவாக்குவது, அதேபோல் ஏற்கனவே இம்மைதானத்தில் இருக்கின்ற உடற்பயிற்சி கூடத்தை நவீனமயமாக்குவது போன்ற பல்வேறு பணிகளை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

உடனடியாக இதற்கான திட்ட மதிப்பீடுகளை தயாரிக்க சொல்லி ஒரு மாத காலத்திற்குள் அந்த ஒப்பந்தங்கள் விட அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியிருக்கிறார். எனவே, அறிவித்த ஓராண்டிற்குள்ளாகவே இப்பணி செய்து முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, சென்னைப் பெருநகர வளர்ச்சி‌க் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, முதன்மை செயல் அலுவலர் கவிதா ராமு, சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அமித், அடையாறு மண்டலக் குழுத் தலைவர் துரைராஜ், சி.எம்.டி.ஏ தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் பெரியசாமி, ருத்ரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கோட்டூர் மாநகராட்சி விளையாட்டு திடலை ₹5 கோடியில் மேம்படுத்தும் பணி ஓராண்டுக்குள் முடிவடையும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kottur Corporation ,Minister ,Ma. Subharamanyan ,Chennai ,Ma. The ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...