சென்னை: சென்னை விமான நிலைய விரிவாக்கத்தை தொடர்ந்து, புதிதாக எம்ஆர்ஓ எனப்படும், விமானங்கள் பழுதுபார்த்தல், பராமரிப்பு மையம் தொடங்கப்படுகிறது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் விமான சேவைகள் அதிகளவில் இருந்தாலும் விமானங்களை பழுது பார்ப்பது, பராமரிப்பது போன்ற மையங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட 8 சர்வதேச விமான நிலையங்களை தேர்வு செய்தது. இந்த 8 சர்வதேச விமான நிலையங்களிலும், விமானங்களை பழுது பார்த்தல், பராமரித்தல், பழுதடைந்த உபகரணங்களை நீக்கிவிட்டு புதிய உபகரணங்கள் பொருத்துதல், விமானங்களுக்கு வர்ணம் பூசி புதுப்பித்தல் போன்றவைகளுக்காக பராமரிப்பு பழுது நடவடிக்கை மையங்கள் (எம்ஆர்ஓ) அமைக்கப்படுகின்றன.
அதன்படி, சென்னை விமான நிலையத்தில் ஏப்ரான் எனப்படும் விமானங்கள் நிறுத்தும் இடத்திற்கு பின் பகுதியில் எம்ஆர்ஓ மையத்தை அமைக்க முடிவு செய்தது. ஆனால் அதற்கான இடவசதி இல்லை. இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலைய இயக்குனர் இணைந்து தமிழ்நாடு அரசிடம் அதற்கான இடத்தை ஒதுக்கி தரும்படி கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, விமான நிலைய ஓடுபாதை பகுதிக்கு கிழக்கு பகுதியில், கவுல் பஜார் பகுதியை ஒட்டி 32,300 சதுர அடி நிலத்தை, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறை மூலமாக கடந்த 2022, ஜூன் மாதம், சென்னை விமான நிலைய அபிவிருத்தி பணிக்காக ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு நிலம் வழங்கி, ஓராண்டு ஆகியும் சென்னை ஒருங்கிணைந்த புதிய சர்வதேச முனையம் திறப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக இருந்ததால் இந்த பணியில் அக்கறைகாட்டவில்லை. தற்போது, இந்திய விமான நிலைய ஆணையம் டெல்லியில் தலைமை இடமாக இயங்கிக் கொண்டிருக்கும் சவுரியா ஏரோநாட்டிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி, அந்த நிறுவனம் சென்னை விமான நிலையத்தில், எம்ஆர்ஓ மையத்தை விரைவில் அமைக்க இருக்கிறது. அவர்கள், அடுத்த 15 ஆண்டுகள் எம்ஆர்ஓ மையத்தை நிர்வகிப்பார்கள். அதன் மூலம் பழுதடைந்த விமானங்கள் உடனடியாக சீர் செய்யப்படும். அதேபோல், வெளிநாட்டு விமானங்கள் சென்னையில் பழுதடைந்தால் ஓடுபாதையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, அந்த விமான நிறுவனத்திற்கு சொந்தமான நாடுகளில் இருந்து உதிரி பாகங்கள் கொண்டு வரப்பட்டு ஒரு நாள் அல்லது 2 நாளில் சரிசெய்யப்பட்டு, மீண்டும் புறப்பட்டு செல்லும். இதனால் வெளிநாடு பயணிகள், சென்னை நகர ஓட்டல்களில் தங்க வேண்டிய சூழல் ஏற்படாது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையம் இணைந்து, டெல்லியில் உள்ள அந்த தனியார் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது. இந்த எம்ஆர்ஓ மையம் செயல்படும்போது, சென்னை விமான நிலையத்தில் மேலும் பலருக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய விமான சேவை
எம்ஆர்ஓ எனப்படும் விமானங்கள் பழுதுபார்த்தல், பராமரிப்பு மையம் சென்னையில் செயல்பட தொடங்கிய பின்பு, சில மணி நேரங்களில், விமானங்களில் ஏற்படும் இயந்திர கோளாறுகள் சீரமைக்கப்பட்டு, விமானத்தை அனுப்பி விடுவார்கள். இதனால் பல்வேறு வெளிநாட்டு விமான நிறுவனங்கள், சென்னைக்கு புதிதாக விமான சேவைகளை தொடங்க வாய்ப்புகள் உள்ளன.
உதிரிபாகங்கள் ஏற்றுமதி
எம்ஆர்ஓ மையம் மூலம், சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களும் நல்ல முறையில் பழுதுபார்க்கப்பட்டு, புதிதாக வர்ணம் பூசப்பட்டு இயக்கப்படும். பயன்படுத்த முடியாத விமானங்களில் உள்ள நல்ல உதிரிபாகங்களை எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் உள்பட பல்வேறு பணிகளை இந்த நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது.
The post சென்னை விமான நிலையத்தில் விமானம் பழுதுபார்த்தல், பராமரிப்பு மையம் விரைவில் தொடங்கப்படும்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.