×

வெயிலின் தாக்கத்தால் கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்

திருப்புவனம், ஜூன் 14: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் வெயிலின் தாக்கம் சற்றும் குறையாத நிலையில் வெயிலின் உக்கிரம் தாங்க முடியாமல் கண்மாய்களில் மீன்கள் உயிரிழந்து வருகின்றன. திருப்புவனம் அருகே பூவந்தி கண்மாய் 800 ஏக்கர் பரப்பளவு உள்ளது. சுமார் 1500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக பெய்த மழை காரணமாக கண்மாய் நிரம்பி விவசாயம் நடந்தது. கண்மாயில் நீர் இருப்பு காரணமாக மீன்கள் அதிகளவில் இருந்தன. கடந்த மாதம் பொதுப் பணித்துறை சார்பில் பூவந்தி கண்மாயில் மீன்பிடி குத்தகை ஒரு லட்ச ரூபாய்க்கு விடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போஸ்டர் ஒட்டியதுடன், கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து மீன்பிடி குத்தகை ரத்து செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் வெயிலின் தாக்கம் தாங்காமல் கண்மாய் மீன்கள் தொடர்ச்சியாக செத்து மிதக்கின்றன. சுமார் ஆயிரம் கிலோவிற்கு மேல் மீன்கள் செத்து மிதக்கின்றன.

கெண்டை, ஜிலேபி, கட்லா, குறவை உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் கண்மாய் நீரும் மாசுபட்டு வருகிறது.கிராமத்தினர் கூறுகையில், வெயில் அதிகமாக இருப்பதால் சுவாசிக்க நீர்மட்டத்திற்கு வரும் மீன்கள் இறந்து விடுகின்றன. இறந்த மீன்களை பறவைகள் உண்பதில்லை. எனவே அவை கண்மாய் கரைகளில் ஒதுங்கி வருகின்றன. ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்குவதால் துர்நாற்றம் வீசி வருகிறது என்றனர். இறந்து ஒதுங்கும் மீன்களை அப்புறப்படுத்த பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post வெயிலின் தாக்கத்தால் கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruvuvyam ,Agni ,Tamil Nadu ,
× RELATED கடும் வெப்பம் காரணமாக டெல்லியில் ஜூன் 30 வரை அங்கன்வாடிகள் மூட உத்தரவு