×

5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தீவிர வயிற்றுப் போக்கு தடுப்பு மருத்துவமுகாம்: பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம், புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சுகாதார துறை துணை இயக்குனர் கே.ஆர்.ஜவஹர்லால் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் சுபாஷ், புலியூர் மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் (பொ) சேகர், ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஊராட்சித்தலைவர் பக்தவச்சலம் என்கிற குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ். உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகளை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். பிறகு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளித்து வரும் சேவைகளை பார்வையிட்டு கர்ப்பிணிகளுக்கு வழங்கக்கூடிய ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் ஆகியவற்றையும் வழங்கினார். இம்முகாமில் 5 வயதுள்ள குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கினால் ஏற்படும் நீர் இழப்பை தடுக்கும் பொருட்டு ஓ.ஆர்.எஸ். உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட்டது.

அப்போது சுகாதார துறை துணை இயக்குனர் கே.ஆர்.ஜவஹர்லால் பேசும்போது, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை தடுக்க முதல் ஆறு மாதங்களுக்கு பிரத்யேக தாய்ப்பால் கொடுத்தல், சுத்தமான குடிநீர் பருகுதல், உணவு சமைப்பதற்கு முன்பும், குழந்தைக்கு உணவு ஊட்டுவதற்கு முன்பும் மலம் கழித்த பின்னரும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். வயிற்றுப் போக்கின் போது உணவுடன் ஓ.ஆர்.எஸ். மற்றும் துத்தநாக மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற 25ந் தேதி வரை நடைபெறும் முகாமில் 1355 அங்கன்வாடி பணியாளர்களும், சுகாதாரத்துறையைச் சார்ந்த 632 பணியாளர்களும் என மொத்தம் 1987 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலம் ஓ.ஆர்.எஸ். மற்றும் துத்தநாக மாத்திரை வழங்கப்பட உள்ளது. இந்த முகாமிற்காக 2 லட்சத்து 11 ஆயிரத்து 735 ஓ.ஆர்.எஸ். உப்பு சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகளும், 3 லட்சத்து 3 ஆயிரத்து 23 துத்தநாக மாத்திரைகளும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்புவைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதில் கொல்லை நோய் அலுவலர் டாக்டர் கார்த்திகேயன், மாவட்ட பயிற்சி குழு அலுவலர் டாக்டர் தீபா லட்சுமி, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் தேவி, நலக்கல்வியாளர் கணேஷன், திமுக நிர்வாகி பாக்கம் கு.கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தீவிர வயிற்றுப் போக்கு தடுப்பு மருத்துவமுகாம்: பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Poondamalli ,MLA ,A. Krishnasamy ,Thiruvallur ,Department of Public Health and Preventive Medicine ,Thiruvallur Union ,Puliur Government Initial Health Station ,Severe Diarrhea Hospital for ,Boondulliol ,MLA AG ,Krishnasamy ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...