×

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கு ஓரிரு மாதங்களில் அரசு ஒப்புதல் கிடைக்கும்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

* சிறப்பு செய்தி
அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான திட்டத்திற்கு இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழக அரசிடமிருந்து ஒப்புதல் கிடைக்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை அண்ணா சாலை சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த சாலையில் காலை, மாலை என எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். மேலும் இந்த சாலையிலேயே ராணுவத்தின் தென்மண்டல தலைமையகம், ஓமந்தூரார் மருத்துவமனை, எல்.ஐ.சி., அமெரிக்க துணை தூதரகம், சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, கணக்கு தணிக்கை அலுவலகம், அண்ணா அறிவாலயம், நட்சத்திர விடுதிகள், பனகல் மாளிகை உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளன. இந்த சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.5 கி.மீ. நீளத்தைக் கடக்கவே சராசரியாக 30 முதல் 40 நிமிடங்கள் ஆகின்றன.

இதனால் நந்தனம் சந்திப்பு, சிஐடி நகர் சந்திப்பு, எல்டாம்ஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றால் காலை, மாலை வேளைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, தி.நகர் சாலை சந்திப்பு, டிடிகே சாலையை அண்ணா சாலையுடன் இணைக்கும் எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சந்திப்பு, கோட்டூர்புரம், போட்கிளப், பசுமைச் சாலை வழிச்சாலை வெங்கட்நாராயாண சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலையை வந்தடையும் நந்தனம் சந்திப்பு, சிஐடி நகர் 3வது மற்றும் முதல் பிரதானச் சாலை சந்திப்பு, சைதாப்பேட்டையிலுள்ள தாடண்டர் நகர்-ஜோன்ஸ் சாலை சந்திப்பு ஆகியவை முக்கிய சாலை சந்திப்புகளாக உள்ளன.

இந்நிலையில் அண்ணா சாலையில் நாள்தோறும் அதிகரித்துவரும் போக்குவரத்தினால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதை கருத்தில்கொண்டு தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றத்தில் அண்ணா சாலையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான 3.5 கி.மீ தொலைவு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். மேலும், வரும் ஆண்டில் ரூ.621 கோடி மதிப்பீட்டில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் 4 வழி மேம்பாலம் கட்டப்படும்.

பன்னாட்டு பொறியியல் நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்று சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளுக்கு மேல் கட்டப்பட உள்ள இந்த மேம்பாலம் ஒரு நவீன பொறியியல் சாதனையாக அமையும். இப்பணிகள் நிறைவுற்றவுடன், பல முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து சாலைப் பாதுகாப்பும் மேம்படும் என சட்ட மன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதனிடையே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அண்ணா சாலை மேம்பாலம் அமைக்கும் பணியை இந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதத்திற்குள் மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தினசரி 2.5 லட்சம் வாகனங்கள் செல்லும் வகையில் உயர்த்தப்பட்ட நான்கு வழிச்சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அண்ணா சாலையை கடக்க 45 நிமிடங்களிலிருந்து 5 நிமிடங்களாகக் குறைக்கப்படும். இந்த பாலம் மாதிரி 3டி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சவாலாக இருந்த மெட்ரோ ரயில் சுரங்கத்திற்கு பாதிப்பு ஏற்படாமல், உயர்மட்ட பாலம் அமைவதற்கு வலுவான தூண்கள் எவ்வாறு கட்டப்படும் உள்ளிட்ட திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை கடந்த மாதத்திற்கு முன்பே தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் திட்ட அறிக்கைக்கான ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. ஒப்புதல் கிடைத்தவுடன் மேம்பால பணிகள் நவம்பர், டிசம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ளப்படும். மேலும், அண்ணா அறிவலாயத்தில் தொடங்கி சைதாப்பேட்டை அடையாறு பாலத்திற்கு அருகில் முடிவடைய உள்ளது என்றனர்.

The post தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கு ஓரிரு மாதங்களில் அரசு ஒப்புதல் கிடைக்கும்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tenampet ,Saithapet ,Teenampet ,Anna Road ,Thenampet ,Saitapet ,Highway ,
× RELATED சென்னை மெட்ரோ பணி காரணமாக 2...