×

தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்துவதா? ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்: மம்தா, கெஜ்ரிவால், கார்கே, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு

சென்னை: அமலாக்கத்துறை மூலம் தாக்குதல்களை தலைமை செயலகத்தின் மீதே தொடுப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கே களங்கம் ஏற்படுத்தும் செயல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜ பழிவாங்கும். அவர்களுக்கு தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சமீப காலங்களில் பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ளன.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் இன்று(நேற்று) காலை முதல் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். ‘சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம், எந்தச் சோதனையாக இருந்தாலும் ஒத்துழைப்பு தருவேன், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாலும் அதற்கு உரிய விளக்கம் அளிக்கத் தயார்’ என்று அமைச்சர் செந்தில் பாலாஜியே பேட்டியும் அளித்துள்ளார். விசாரணை நடைபெறும் இடத்தில் இருந்து முழு ஒத்துழைப்பைத் தந்து வருகிறார். இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரது அறைக்குச் சென்று தேடுதல் நடத்த வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது என்று தெரியவில்லை. தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்துவோம் என்று காட்டவோ, அல்லது அதனைக் காட்டி மிரட்டவோ விரும்புகிறார்களா எனத் தெரியவில்லை.

இவை எல்லாம் விசாரணை அமைப்பானது அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதையே எடுத்துக் காட்டுகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாட்டுக்கு வந்து சென்ற நிலையில் உடனடியாக இதுபோன்ற காரியங்கள் நடக்கிறது என்றால் என்ன பொருள். பொதுமேடைகளில் திமுகவையும் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்துச் சென்றார் ஒன்றிய அமைச்சர். அதற்குத் தகுந்த விளக்கத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம். ஆனால் இதுபோன்ற அமலாக்கத்துறை தாக்குதல்களைத் தலைமைச் செயலகத்தின் மீதே தொடுப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கே களங்கம் ஏற்படுத்துவது ஆகும். ஒரு மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய காவல் படையை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை நடத்துவது தான் அரசியல்சட்ட மாண்பைக் காப்பதா?

“தலைமைச் செயலகம் என்பது மாநில அரசின் மூளை போன்ற முக்கியப் பகுதி. 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கூட்டுறவு-கூட்டாட்சி பேசிக் கொண்டே அந்த தலைமைச் செயலகத்தில் மத்திய போலீஸ் படையை அனுப்பி, தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன்ராவ் அலுவலகத்துக்குள்ளேயே ரெய்டு நடத்துமாறு வருமான வரித்துறையை இயக்கியது ஒன்றிய அரசு. இது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது’’ என்று, அன்றைய ஆட்சியாளர்கள் கண்டிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருந்தபோது, அதனைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டேன்.

எனவே, யாருக்கு நடந்தது என்பதல்ல முக்கியம். எங்கு நடத்தப்பட்டது என்பதே முக்கியம். மிகத்தவறான முன்னுதாரணங்களைத் தொடர்ந்து பாஜ உருவாக்கி வருகிறது. பாஜவின் மிரட்டல் அரசியலை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, இதுபோன்ற புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் அரசியல் செல்லுபடியாகாது என்பதை பாஜ தலைமை உணர வேண்டும். அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* மோடி அரசின் வெட்கக்கேடான முயற்சி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: இன்று திமுகவுக்கு எதிராக பாஜ மேற்கொண்டு வரும் அரசியல் பழிவாங்கலை நான் கண்டிக்கிறேன். விசாரணை அமைப்புகளை பா.ஜ அரசு தவறாக பயன்படுத்துவது தொடர்கிறது. தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரின் அலுவலகம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது பாஜவின் அவநம்பிக்கையான செயல்கள் ஆகும்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்: எதிர்க்கட்சிகளைத் துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்கும் ஒன்றிய விசாரணை அமைப்புகளை பாஜ தவறாகப் பயன்படுத்துகிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் பழிவாங்கலால் பாராமுகமாகி, நமது ஜனநாயகத்திற்கு மாற்ற முடியாத சேதத்தை பாஜ ஏற்படுத்துகிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையை அப்பட்டமாக தவறாக பயன்படுத்தி நடத்திய சோதனையை காங்கிரஸ் கண்டிக்கிறது. இவை எல்லாம் மிரட்டுவதற்கும், தொந்தவு செய்வதற்கும் மோடி அரசு மேற்கொள்ளும் வெட்கக்கேடான முயற்சிகள். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை ஒட்டுமொத்தமாக பயன்படுத்துவது மோடி அரசின் முத்திரை. இதுபோன்ற செயல்களால் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சி வெற்றி பெறாது. மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தைத் தொடரும் உறுதியை இவை எல்லாம் வலுப்படுத்துகின்றன.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்: எதிர்க்கட்சிகள் ஆளும் அரசு அமைச்சர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையின் இடைவிடாத நடவடிக்கைகளை நான் கடுமையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம், ஜனநாயக விரோத ஒன்றிய அரசுக்கு எதிரான குரலை நசுக்கும் மோசமான நோக்கத்துடன் அமலாக்கத்துறை இப்போது தென் மாநிலங்களுக்குச் சென்றுள்ளது. இவ்வாறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

The post தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்துவதா? ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்: மம்தா, கெஜ்ரிவால், கார்கே, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Leadership Secretariat ,Union Government of the United States ,G.K. Stalin ,Mamta ,Kejriwal ,Karke ,Saratbavar ,Chennai ,Department of Enforcement ,Sarathbawar ,Dinakaran ,
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...