×

சவுகார்பேட்டையில் மக்கள் நடமாட்டம் நிறைந்த வணிக வளாகத்தில் தீ விபத்து: அமைச்சர், மேயர் நேரில் ஆய்வு

சென்னை, ஜூன் 13: சென்னை சவுகார்பேட்டை மின்ட் தெருவில் தனியார் வணிக வளாகம் உள்ளது. 2 மாடிகள் கொண்ட இந்த வணிக வளாகத்தில் துணிக்கடை, நகைக் கடை, பேன்சி ஸ்டோர் உள்பட 13 கடைகள் உள்ளன. இந்த வளாகத்தின் வாசலில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்த நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்து, அருகிலுள்ள வணிக வளாகத்துக்கும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. அப்போது, அந்த பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் கண் எரிச்சல் காரணமாக எழுந்தனர்.

அப்போதுதான் அவர்களுக்கு தீ விபத்து குறித்து தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே எஸ்பிளனேடு, வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஏழுகிணறு, தண்டையார்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 8 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 5 மெட்ரோ வாட்டர் வண்டிகள் சம்பவ இடத்துக்கு வந்தன. 50 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். இதில், 4 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து காரணமாக மின்ட் தெரு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

தீ விபத்து எதிரொலியாக அந்த பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வணிக வளாகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. தகவலறிந்து, துறைமுக சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று தீ விபத்து குறித்து கேட்டறிந்தனர்.

The post சவுகார்பேட்டையில் மக்கள் நடமாட்டம் நிறைந்த வணிக வளாகத்தில் தீ விபத்து: அமைச்சர், மேயர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Saukarpettai ,CHENNAI ,Mint Street, Choukarpet, Chennai ,Saugarpetai ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...