அண்ணாநகர்: ஓசியில் ஐஸ் தர மறுத்த குல்பி ஐஸ் வியாபாரியை அடித்து படுகொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பாபு (52). இவர், பெரம்பூர் ஜி.கே.எம். காலனியில் வாடகை வீட்டில் தங்கி, வீதி வீதியாக சென்று குல்பி ஐஸ் வியாபாரம் செய்துவந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இவர், அண்ணாநகர் அன்னை சத்யாநகர் பகுதியில், வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த அஸ்வின் (19) என்பவர், பணம் கொடுக்காமல், அவரிடம் குல்பி ஐஸ் கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘‘காசு கொடுத்தால், ஐஸ் தருகிறேன்,’’ என கூறியுள்ளார். இதன் காரணமாக, அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த அஸ்வின், அருகில் இருந்த பெரிய உருட்டுக்கட்டையை எடுத்து, ராம்பாபு தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு, அங்கு இருந்து தப்பியுள்ளார். படுகாயமடைந்த அவர், ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராம்பாபு பரிதாபமாக உயிரிழந்தார். காரின்பேரில், அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராம்பாபு சடலத்தை மீட்டு, அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், தலைமறைவாக இருந்த அஸ்வினை நேற்று முன்தினம் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர். ஓசியில் ஐஸ் தர மறுத்த வியாபாரி அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
The post ஓசியில் ஐஸ் தர மறுத்ததால் ஆத்திரம் குல்பி ஐஸ் வியாபாரி அடித்துக்கொலை: வாலிபர் கைது appeared first on Dinakaran.