×

கீழ்பவானி வாய்க்கால் விவகாரம்; சென்னிமலை, பெருந்துறையில் கடைகள் அடைப்பு: விசைத்தறி கூடங்களும் மூடல்

ஈரோடு: கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் தளமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று பெருந்துறை, சென்னிமலையில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன பெற்று வருகிறது. மண்ணால் கட்டப்பட்ட இந்த வாய்க்கால் காங்கிரீட் கால்வாயாக மாற்ற கடந்த அதிமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது. வாய்க்காலில் காங்கிரீட் போடப்பட்டால், கசிவுநீர் முழுமையாக தடுக்கப்பட்டு பாசன பகுதி முழுமையாக பாதிக்கப்படும் என்றும், இதனால் கசிவுநீர் திட்டங்கள் பாதிக்கப்படுவதோடு, குளம், குட்டைகள், ஏரிகள் முழுமையாக வறண்டு விடும் என்பதால், இத்திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், பணிகள் எதையும் தொடங்காமல் அதிமுக அரசு காலம்தாழ்த்தி வந்தது. இந்நிலையில், விவசாயிகளில் ஒரு தரப்பினர் மட்டும் வாய்க்கால் சீரமைக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து வாய்க்கால் சீரமைக்க கோர்ட் அரசுக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஆனால் கீழ்பவானி பாசன பகுதிகள் அமைந்துள்ள கிராமங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, கீழ்பவானி வாய்க்கால் தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 276ஐ ரத்து செய்ய வேண்டும், பழுதடைந்துள்ள பழைய கட்டுமானங்களை மட்டும் சீரமைக்க வேண்டும், மண் கால்வாயை மண்ணைக்கொண்டு மட்டுமே சீரமைக்க வேண்டும், பாசன பகுதியில் உள்ள 95 சதவீத விவசாயிகளின் கருத்துபடி பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் அடங்கிய கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், பெருந்துறை அருகே உள்ள கூரப்பாளையத்தில் கடந்த 6 நாட்களாக விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு வணிகர்கள் கங்கத்தின் பேரவை சார்பில், கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பெருந்துறை, சென்னிமலை, நசியனூர், காஞ்சிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் உண்ணாவிரத பந்தலுக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர். இதே போல சென்னிமலையில் செயல்பட்டு வரும் விசைத்தறி கூடங்களும் முழுமையாக மூடப்பட்டன. பெருந்துறை தினசரி மார்க்கெட் வியாபாரிகளும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்திருந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாவட்ட தலைவர் மோகன் கூறியதாவது: ‘‘கீழ்பவானி பாசன விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடையடைப்பு போராட்டத்திற்கு எங்கள் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று பெருந்துறை, சென்னிமலை, காஞ்சிக்கோவில், நசியனூர் மற்றும் பாசன பகுதிகள் அடங்கிய இடங்களில் உள்ள கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு தலைவர் மோகன் கூறினார். இதனிடையே 6வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

கோபி: கோபி அருகே உள்ள அளுக்குளி, கரட்டுப்பாளையம், குருமந்தூர், கோட்டுப்புள்ளாம்பாளைம்,
கரட்டுப்பாளையம், கூடக்கரை, உக்கரம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக கோபியில் 10 ஊராட்சிகளிலும் முழு அளவில் கடைகளை அடைக்கப்பட்டு உள்ளதால், இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

The post கீழ்பவானி வாய்க்கால் விவகாரம்; சென்னிமலை, பெருந்துறையில் கடைகள் அடைப்பு: விசைத்தறி கூடங்களும் மூடல் appeared first on Dinakaran.

Tags : Kilpawani ,Chennimalai, Perundhurai ,Erode ,Kilibhavani ,Perundurai, Chennimalai ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்