×

சென்னையைக் கலக்கும் டப்பாவாலாக்கள்

சென்னை போன்ற பெருநகரங்களில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. எல்லாமே அவசர கதியாக மாறிவிட்ட காலம் இது. நின்று சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் ஓட்டமாக ஓடுகிறது வாழ்வு. காலையில் வேலைக்கு செல்லும்போதே சாப்பிட்டும், சாப்பிடாமலும் அவசரகதியில் பறக்கிறோம். இந்த பரபரப்புக்குள் தான் நாம் உணவையும் உடலையும் கவனிக்க வேண்டும். நம்மில் பலர் வேலை வேலை என சாப்பாட்டை மறக்கிறோம். சில சமயம் கடைகளில் சாப்பிட்டு உடம்பையும் கெடுத்துக் கொள்கிறோம். வீட்டில் சமைத்த சாப்பாட்டை சாப்பிட வேண்டும். அதேவேளையில் அலுவலக வேலையும் பாதிக்காமல் உரிய நேரத்தில் சாப்பிட வேண்டும். இது சாத்தியமா? என்றால் சாத்தியம்தான் என்கிறார்கள் டப்பாவாலாக்கள். காலையில் வீட்டில் இருப்பதை சாப்பிட்டுவிட்டு அவசரம் அவசரமாக அலுவலகம் சென்றுவிடுகிறோம். பின்பு வீட்டில் சாவகாசமாக செய்யும் ருசி மிகுந்த உணவை டிபன் பாக்ஸ்களில் சுமந்துகொண்டு, நாம் வேலை செய்யும் இடம் நோக்கி வந்து தந்துவிட்டு போவார்கள். இவர்களுக்குப் பெயர்தான் டப்பாவாலா.

மும்பையில் கடந்த 1890ம் ஆண்டில் மகாதேயோ ஹவாஜி பச்சே என்பவர்தான் இந்த டப்பாவாலா கான்செட்டை உருவாக்கினார். இந்த கான்செப்ட் மகாராஷ்டிரா மாநில தொழிலாளர்களின் வரலாற்றில் ஒரு ஸ்ட்ராங் முத்திரையை பதித்தது. சைக்கிள், ரயில் என பயணித்து அவரவர் வீட்டில் செய்யும் உணவுகளை அலுங்காமல், குலுங்காமல் அலுவலகம் மற்றும் தொழில் நடக்கும் இடங்களுக்கு சென்று தந்தார்கள். இதனால் மகாராஷ்டிரா மாநிலம் உரிய நேரத்தில் பசியாறியது. டப்பாவாலா கான்செப்ட் நம்ம சென்னை மாநகரிலும் சத்தமின்றி நடைமுறையில் இருந்து வருகிறது. அதுவும் 3 தலைமுறைகளாய். ஆனால் அவர்களுக்கு நாம் செய்யும் டப்பாவாலா தொழில் என தெரியாது. அவர்களாகவே ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களே இன்று தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

மல்லிகாவுக்கு வயது 56. இவர்தான் இன்று சென்னையின் மூத்த டப்பாவாலா. அண்ணா நகரில் அவருக்கு வீடு. அவருக்கு வீட்டில் ஆசுவாசமாக அமர நேரமிருக்காது. வாடிக்கையாளர்களுக்கு உணவை சுமந்து பயணித்த பொழுதொன்றில் பேசினோம்.50 வருடங்களுக்கும் மேலாக இதே தொழிலில் தான் இருக்கிறோம். ஆரம்பத்தில், மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்ப்பவர்களுக்கு மதிய உணவைக் கொண்டு சென்றார் எங்கள் தாத்தா. அதைத் தொடர்ந்து எனது அப்பா, அம்மா, அத்தை என எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருமே இந்த தொழிலை செய்து வந்தனர். எனக்கு 16 வயது இருக்கும்போது எனது அம்மாவோடு இந்த தொழிலுக்கு வந்தேன். இப்போது 56 வயது ஆகிறது. 40 வருடங்களாக இதே தொழில்தான். குடும்பத் தொழிலாக தலைமுறை கடந்தும் தொடருது. அந்த காலத்தில் 50 பைசாதான் மாத சம்பளம். தாத்தா காலத்தில் நடந்து சென்றும், மாட்டுவண்டியைப் பயன்படுத்தியும் உணவை டெலிவரி செய்தார்கள். அப்பா காலத்தில் சைக்கிள்.

சைக்கிளின் பின்னால் ஒரு பெரிய கூடையைக் கட்டி அதில் உணவுப் பைகளை வைத்துக்கொண்டு சென்றோம். இப்போது பைக்கிலும், ஆட்டோவிலும் உணவுகளைக் கொண்டு செல்கிறோம்.காலையில் 11.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றால் மாலை 5 மணிக்குதான் வருகிறோம். முதலில் சாப்பாடு டெலிவரி செய்பவர்களின் வீட்டுக்கு சென்று அவர்களது உணவை வாங்கிக்கொள்வோம். பின்பு அந்த உணவு எங்கு கொடுக்கப்பட வேண்டுமோ, அங்கே டெலிவரி செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டு உணவும் தனித்தனி இடங்களில் டெலிவரி செய்ய வேண்டும்.

ஒரு ஆள் ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் டெலிவரி செய்ய முடியாது என்பதால் ஒவ்வொரு ஏரியாவிற்கென்று தனித்தனி ஆளாக பிரிந்து செல்கிறோம். மதிய உணவை வாங்கிய பிறகு நாங்கள் வழக்கமாக ஒன்றுகூடும் இடம் ஒன்று இருக்கிறது. அங்குதான் டெலிவரி செய்கிற உணவு அனைத்தையும் ஒன்று சேர்த்து தனித்தனியாக பிரித்து எடுத்து செல்கிறோம். பேரீஸ், ஹைக்கோர்ட், செளக்கார்பேட்டை, எக்மோர், படாளம், சூளை, மவுண்ட் ரோட், வண்ணாரப்பேட்டை என வட சென்னையில் பெரும்பான்மையான இடத்திற்கு உணவுகளை சுமந்து செல்கிறோம். யார், யார் எந்தெந்த ஏரியாவிற்கு செல்ல வேண்டுமோ அவர்கள் அந்த ஏரியாவிற்கு டெலிவரி செய்ய வேண்டிய பைகளை எடுத்துக்கொண்டு செல்வார்கள்.

இப்படித்தான் ஒரு நாளைக்கு 200 வீட்டு உணவுகளை சரியான இடத்திற்கு சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கிறோம். எங்கள் குடும்பத்தில் உள்ள ஆட்கள் மட்டும்தான் இந்தத் தொழிலை செய்து வருகிறோம். வெளி ஆட்கள் யாரையும் சேர்ப்பதும் இல்லை, யாரும் வருவதும் இல்லை. விவரம் தெரிந்த வயதில் இருந்து ஒரே தொழில் செய்வதால் இது இப்போது எங்கள் குடும்பத்தொழிலாகவே மாறி இருக்கிறது. எனக்கு நான்கு தம்பிகள் இருக்கிறார்கள். அவர்களது மனைவிகள், அவர்களது பிள்ளைகள் என அனைவருக்குமே இதே தொழில்தான். மொத்தம் 16 பேர் இதே தொழிலில் இருக்கிறோம். 6 ஆண்கள், 10 பெண்கள் என அனைவருக்குமே இதே தொழில்தான். எங்க குடும்பத்திலயே எம்.சி.ஏ படித்தவர்கள், எம்.பி.ஏ படித்தவர்கள், ஏன் வழக்கறிஞர்கள் கூட இருக்கிறார்கள். அவர்களுமே இந்த தொழிலைத்தான் செய்து வருகிறார்கள். வெளியில் வேலை கிடைக்காத காரணத்தால் அவர்களும் எங்களுடன் சேர்ந்து இதே வேலைக்கு வருகிறார்கள். ஒரு நாளைக்கு 200 குடும்பங்களின் மதிய உணவுகளை சுமந்து திரிகிறோம்.

வெயிலிலும் சரி, மழையிலும் சரி சரியான நேரத்திற்கு உணவைக் கொடுப்பது தான் எங்கள் வேலை. ஆரம்பத்தில் பள்ளிக் குழந்தைகளில் இருந்து கல்லூரியில் படிப்பவர்கள் வரை அனைவருக்கும் சாப்பாடு கொண்டு சென்றோம். 12.30 மணிக்குள் மதிய சாப்பாட்டை அவர்களுக்கு கொடுக்க சிரமமாக இருந்ததால் இப்போது அலுவலக பணிகளில் உள்ள ஆட்களுக்கு மட்டும் உணவைக் கொண்டு சென்று தருகிறோம். மற்றவர்களின் பசியைப் போக்குகிறோம். ஆனால் நாங்கள் உரிய நேரத்தில் சாப்பிட முடியாது. மதிய சாப்பாடு கொண்டு செல்வதுதான் எங்கள் வேலை. அதுவும் 1.30 மணிக்குள் சாப்பாடு கொடுத்தாக வேண்டும். சில சமயங்களில் ட்ராபிக் அதிகமாக இருக்கும். சாப்பாடு கொண்டு செல்ல தாமதமாகிவிடும். 10 நிமிடம் லேட்டாக உணவைக் கொண்டு சென்றாலும் திட்டுபவர்கள் இருக்கிறார்கள். எங்கள் சிரமங்களை புரிந்துகொண்டு அனுசரித்து செல்பவர்களும் உண்டு. முடிந்தவரை அனைவருக்குமே சரியான நேரத்தில் உணவைக் கொண்டு செல்கிறோம்.

எங்கள் குடும்பத்தில் பெண்களும் பைக் ஓட்டுகிறார்கள். பைக்கில் டெலிவரி செய்கிறார்கள். பைக் ஓட்ட தெரியாதவர்கள் ஆட்டோவில் உணவைக் கொண்டு செல்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு நபர் குறைந்தது 20 நபர்களுக்கு மதிய உணவை டெலிவரி செய்கிறார்கள். உணவைக் கொண்டு செல்வது மட்டுமில்லை, அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு சாப்பாட்டுப் பையை திரும்ப வாங்கி அவர்களது வீட்டுக்கு கொடுக்க வேண்டும். இதுதான் எங்களது தினசரி வேலை. சில சமயம் தவறுதலாக சாப்பாட்டுப் பையை மாற்றி கொடுத்து விடுவதும் நடக்கும். ஆனால், சில நிமிடங்களிலே அது தெரிய வந்துவிடும். பிறகு அதை மாற்றி சரியான பையைக் கொடுப்போம். ஏனென்றால், சாப்பாடு வாங்குவது ஒரு ஆள் என்றால் அதை கொடுப்பது இன்னொரு ஆள். அதனால் இந்த குழப்பங்கள் வரும்.

வருடம் முழுவதுமே விடுமுறை இல்லாத வேலையைத்தான் இத்தனை ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். நாங்கள் வேலை செய்யாவிட்டால் பலருக்கு வீட்டில் இருந்து சாப்பாடு வராது. பலர் கடைகளில் சாப்பிடுவார்கள். அதனால், முடிந்தவரை எல்லா நாட்களிலும் தவறாமல் உணவு கொண்டு செல்கிறோம். ஒருவருக்கு உணவைக் கொண்டுவந்து கொடுக்க மாதம் 500 ரூபாய் வாங்குகிறோம். மாதக்கடைசியில் அனைவரிடமும் பணத்தை வாங்கி அனைவருக்கும் சம்பளமாக பிரித்து கொடுக்கிறோம். இப்படித்தான் இத்தனை வருடமும் வேலை பார்த்து வருகிறோம். இந்தத் தொழிலை பொறுத்தவரை குடும்பமாக பழகுபவர்கள் என ஏராளமானோர் இருக்கிறார்கள். 20 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே குடும்பத்திற்கு உணவை டெலிவரி செய்து வந்திருக்கிறோம். எங்கள் வீட்டு விசேஷத்திற்கு வருபவர்களும் இருக்கிறார்கள். என்னதான் கஷ்டம் இருந்தாலும் பசியோடு இருப்பவர்களுக்கு உணவை கொண்டுசெல்லும் வேலை செய்வது ஆறுதலாக இருக்கிறது’ எனக் கூறினார்…

– ச.விவேக்
படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

The post சென்னையைக் கலக்கும் டப்பாவாலாக்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...