×

சிறைச்சாலையை சாதனை களமாக மாற்றிய கைதி ஒரே வாரத்தில் சோலார் பேனல் இ-சைக்கிளை உருவாக்கி அசத்தல்: மின்சார ஆட்டோ ரிக்‌ஷா தயாரிக்கும் பணி தீவிரம்; வார்டன்கள் ரோந்து பணிக்கு பயன்படுத்த திட்டம்

வெளி உலகத்தை மறந்து, நான்கு சுவருக்குள் அடைத்து, தனிமை நினைத்து வருத்தி செய்த குற்றச்செயல்களை உணர்ந்து திருத்துவதற்குத்தான் சிறை. இவ்வாறு சிறை வாசம் அனுப்பவிக்கும் ஒவ்வொருவரும் மீண்டும் வெளியே வந்து புதுவாழ்க்கை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில், சிறையிலேயே அவர்களுக்கு தெரிந்த வேலைகளை அளித்து அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் கைதிகளின் புதிய கண்டுபிடிப்புகளும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. பல சிறைகளில் விவசாயம்,கைவினை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து புதிய கண்டுபிடிப்புகளில் கைதிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கொலை வழக்கில் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் உள்ள ஈரோட்டை சேர்ந்த ஒரு இன்ஜினியர் ஒருவர் சோலார் பேனலில் இயங்கும் இ-சைக்கிளை கண்டுபிடித்து அசத்தி உள்ளார்.

அதன் விவரம் வருமாறு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கவுந்தபாடியை சேர்ந்தவர் யுகஆதித்தன் (31). இவர், ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ளார். இவர், கடந்த 2017ம் ஆண்டு சேலம் மாவட்டம் அழகாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யுகஆதித்தன் ஜெயிலில் இருந்தபடியே இ-சைக்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த இ-சைக்கிள் 3 விதமாக இயங்கும் வகையில் அவர் உருவாக்கி உள்ளார். இந்த சைக்கிளை சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் பெறும் சோலார் பேனல் மூலம் இயக்கலாம் அல்லது சைக்கிளை மிதிக்கும் போது டைனமோவில் இருந்து வரும் மின்சாரத்தை கொண்டும் இயக்கலாம் அல்லது பேட்டரியில் சார்ஜ் ஏற்றியும் ஓட்டலாம். தற்போது, இந்த இ-சைக்கிளை ஜெயில் வார்டன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மத்திய சிறைத்துறை டிஐஜி சண்முக சுந்தரம் கூறியதாவது: யுகஆதித்தன் சிறை வளாகத்துக்குள் உள்ள கருவிகளில் பழுது பார்க்கும் பணியில் வார்டனுக்கு உதவியாக இருந்து வருகிறார். அவருக்கு ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என நினைத்து முயற்சித்தார். அப்போது, சிறை வளாகத்தில் பயன்படுத்தாமல் கிடந்த சைக்கிளை பார்த்த அவர், அதனை சூரிய ஒளி மற்றும் பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைக்க முடிவு செய்தார். இதற்காக வார்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து இ-சைக்கிள் செய்ய அவர்கள் உதவினர்.

அதன்படி, இ-சைக்கிளின் நடுவில் தகடுகளை வைத்து அங்கு பேட்டரியை பொருத்தினார். மேலும், பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக டைனமோவையும் பொருத்தினார். சைக்கிளை மிதிக்கும் போது டைனமோ மூலமாக பேட்டரி சார்ஜ் ஏறும் வகையில் வடிவமைத்தார். மின்சாரம் மூலமாகவும் பேட்டரியை சார்ஜ் செய்யலாம். கேரியரில் சோலார் பேனலை பொருத்தி அதன் மூலமாகவும் சைக்கிள் இயங்கும் வகையில் வடிவமைத்து உள்ளார். இதனை செய்ய அவருக்கு ஒரு வாரம் தான் தேவைப்பட்டது. மிகவும் எளிமையாக திறமையாக பணியை செய்த யுக ஆதித்தனை நாங்கள் வெகுவாக பாராட்டினோம்.

இந்த சைக்கிளை தற்போது டவர் பிளாக்கில் ரோந்து செல்லும் வார்டன்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இதுபோல 9 சைக்கிளை தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம். தற்போது யுக ஆதித்தன் இ-ஆட்டோ ரிக்‌ஷாவை தயாரிக்கிறார். ஓரிரு மாதங்களில் இந்த பணி முடிவடையும். அதன் பின்னர் மின்சார ஆட்டோவை ஜெயில் வளாகத்தில் ரோந்து பணியில் பயன்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ள கைதி யுகஆதித்தன் 2017ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைதாகி கடந்த 6 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

The post சிறைச்சாலையை சாதனை களமாக மாற்றிய கைதி ஒரே வாரத்தில் சோலார் பேனல் இ-சைக்கிளை உருவாக்கி அசத்தல்: மின்சார ஆட்டோ ரிக்‌ஷா தயாரிக்கும் பணி தீவிரம்; வார்டன்கள் ரோந்து பணிக்கு பயன்படுத்த திட்டம் appeared first on Dinakaran.

Tags : Wartons ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச்...