நம்ம ஊரு சாமிகள்
செங்கோட்டை
ஆரியங்காவில் இருந்த சுடலைமாடன், மா இசக்கி, புலமாடன் மற்றும் தாய் பேச்சியம்மன் துணையோடு கோட்டைவாசல் கடந்து பாண்டிய நாட்டிற்கு வருகிறார். புளியரையில் நிலையம்கொண்ட அவர் செங்கோட்டை வந்தார். அங்கு நிறைகுளத்தான் கரையின் மேற்குப் பக்கம் அரசமரத்தின் கீழ் வந்தமர்கிறார். சாஸ்தா, அய்யனார், ஐயப்பன் ஆலயங்கள் காவல் தெய்வங்களின் தாய்வீடு போன்றது. எப்போது வேண்டுமானாலும். செல்லும் உரிமை அவர்களுக்கு உண்டு. அந்த வகையில் சாஸ்தா, அய்யனார் ஆலயங்களில் காவல் தெய்வங்கள் இல்லாமல் இருப்பதில்லை என்பது சான்றாக விளங்குகிறது. செங்கோட்டை அன்று சேரநாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் எல்லையாக விளங்கியது.
அத்தகைய செங்கோட்டையில் வற்றாத குளமாக, எப்போதும் நிறைகுளமாக இருந்தமையால் அந்த குளம் நிறைகுளம் என்று அழைக்கப்பட்டது. அந்த குளத்தின் கரையில் அய்யனார் ஆலயம் கொண்டிருந்தமையால், நிறைகுளத்து அய்யனார் என்று அழைக்கப்பட்டார். இந்த ஆலயத்தின் கரையில் இருந்த அரசமரத்தின் கீழ் சுடலைமாடன் அமர்ந்திருக்கிறார்.
குளத்துக்கு தண்ணீர் வரும் ஓடையில் மண் எடுப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மாட்டுவண்டியில் வருகிறார். வண்டியில் மண் ஏற்றிக்கொண்டு புறப்பட்டபோது, வண்டியின் சக்கரம் சகதியில் சிக்கிக்கொண்டது. அவர் எவ்வளவோ முயன்றும் வண்டி நகரவில்லை. அந்த நேரம் சுடலை, 40 வயது மதிக்கத்தக்க ஒரு விவசாயி ரூபத்தில் வருகிறார்.
“என்னப்பா, என்ன ஆச்சு”.
“ஐயா, வண்டி சகதிக்குள்ள மாட்டிகிடக்கு, வண்டி பாரத்தை குறைச்சா, வண்டிய நவுத்துபுடலாம். கொஞ்சம் ஒத்தாசை பண்ணுங்க.’’
“ஏய், நீ பாரத்தை எல்லாம் குறைக்க வேண்டாம். நான் வண்டியைக் கொண்டு வாரேன், வண்டியில மாட்டைப் பூட்டு” என்றார் சுடலை. வண்டியில் மாடு பூட்டப்படுகிறது. சுடலை வண்டி ஓட்டி வருகிறார். மண்பாரத்தின் பின் அமர்ந்து வந்த விவசாயி.
“ஐயா, பெரிய மனுசு உங்களுக்கு, எப்படி நன்றி சொல்லதுன்னே தெரியல, ஆமா, நீங்க எங்க போணும்?’’
“நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும், நான் இறங்கிக்கிறேன்”னு சுடலை சொல்கிறார். இருவரும் பேசிக்கொண்டே வரும் போது ஹரிஹரன் நதிக்கரை அருகே வண்டி வருகிறது. இங்கே நான் இறங்கிக் கொள்கிறேன். என்று கூறி சுடலைமாடன் இறங்குகிறார். விவசாயி வண்டியின் பின்பக்கத்தில் இருந்து இறங்கி, முன்பக்கம் வந்து வண்டியில் ஏறிய பின் பார்க்கிறார். சுடலையை காணவில்லை. கலக்கத்துடன் வீடு திரும்பிய விவசாயி, சுடலை வந்து உதவியதும். மாயமாய் போனதும் குறித்து தன் மனைவியிடம் ஒருவித அச்சத்துடன் கூறியபடி வியக்கிறார்.
மனைவி, “ஏதோ துஷ்ட ஆவியையோ, அல்லது பேயையோ, பார்த்து நீங்க பயந்திருக்கீங்க’’, என்று கூறி ஆறுதல்படுத்துகிறார். மறுநாள் காலை அந்த இடத்துக்கு வண்டி வரும்போது, நின்றுவிடுகிறது. மாட்டை பலமுறை சாட்டையால் அடித்தும் வண்டி ஒரு அடிகூட நகரவே இல்லை.
வண்டியிலிருந்து இறங்கிநின்ற விவசாயிடம், “என்னை, பார்க்காம போகலாமுன்னு நினைக்கிறியா” ன்னு ஒரு குரல், யாரென்று அக்கம் பக்கம் விவசாயி பார்க்கிறார். அப்போது சுடலை அதே விவசாயி ரூபத்தில் தோன்றி “நான்தான் பேசியது” என்று கூறுகிறார். பயம்கொண்டு நடுக்கத்துடன் விவசாயி, “ஐயா, நேத்து சொல்லாம, கொள்ளாம போயிட்டேளே, இறங்கினது மட்டும் தெரிஞ்சி, அப்புறம் பாத்தா ஆளகாணோம்’’ என்றார். விவசாயியை பார்த்து சுடலை, “என் பேரு சுடலைமாடன், எனக்கு இந்த ஆற்றங்கரையோரம், மயானப்பகுதியில் ஆளுயர பீடம் அமைத்து, என்னை பூஜித்து வந்தால், என்றென்றும் உனக்கு நான் துணை நிற்பேன்.” என்று கூறி மறைந்தார்.
மாதங்கள் பல கடந்த நிலையில், அந்த விவசாயி தை மாத அறுவடை முடிந்ததும், சுடலைக்கு பீடம் எழுப்பி பூஜைசெய்தார். ஆண்டுகள் உருண்டோடின. அந்த விவசாயி நிலக்கிழாரானார். ஆனால், சுடலைக்கு ஆண்டுக்கு ஒரு முறை விழாவும், மாதம் ஒரு நாள் சிறப்புப் பூஜையும் நடத்தி வந்தார். அவரது காலத்திற்குப் பின், அவரது மகன் செய்து வந்தார். அவரை அப்பகுதி மக்கள் அவரது பெயரை கூறி அழைப்பதை மறந்து சுடலை கோயில் மூப்பனார் என்று அழைத்துவந்தனர்.
இந்த நிலையில் செங்கோட்டையிலிருந்து சேரநாட்டுக்கு போக்குவரத்தை ஏற்படுத்தவும், அண்டைப்பகுதி கிராமங்களில் வரிவசூல் செய்யும் பொருட்டு சென்று வர வசதியாகவும், ஹரிஹரன் நதிக்கு குறுக்கே பாலம் கட்ட அப்போதைய ஆங்கிலேயர்கள் ஆட்சியில் முடிவு செய்தனர். அதற்கான ஒப்பந்தத்தை அப்பகுதியில் பிரபல ஒப்பந்தக்காரராக இருந்த சுப்பையன் எடுத்திருந்தார்.
அவர் பாலம் கட்டுமானத்திற்கான முன்னேற்பாடு பணிகளை பார்க்க வந்திருந்தார். அப்போது சாலை விரிவாக்கம் செய்துதான் பாலத்தை கட்ட வேண்டும், என்று திட்டமிட்டார். சாலையை அகலப்படுத்த வேண்டும், அதனால் இந்த மாடன் கோயிலை இங்கிருந்து இடித்துவிட்டு, சற்று தள்ளி கோயில் கட்டிக்கொள்ளுங்கள். என்று கோயிலை நிர்வகித்து வரும் மூப்பனாரிடம், சுப்பையன் சொல்ல, அரசாங்கத் தொடர்புடையவர் சுப்பையன் என்பதால் மூப்பனார், ஒப்புக்கொண்டார். அன்றைய தினம் இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சுப்பையன், கனவு கண்டார். அதில் தனது பங்களா வீட்டை பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வந்து இடிப்பது போல் கண்டார். பயந்து கதறினார்.
அவர் குரல் கேட்டு, மனைவி மக்கள் வந்தனர். அவர்களிடம், நடந்ததை கூறினார். காலை சூரிய உதயம் ஆனதும், சுடலை நிலையம் கொண்ட கோயிலுக்கு வந்தார். விழுந்து வணங்கினார். கோயிலை இடிக்கும் திட்டத்தை கைவிட்டார். பாலம் காண்ட்ராக்ட்டே கைவிட்டுப்போனாலும் பரவாயில்லை, சுடலைமாட சுவாமி, உன் ஆலயத்தை இடிக்கமாட்டேன். அரசாங்கத்தின் மூலம் வேறெந்த பிரச்னையும் எனக்கு வராமல் நீதான் இந்த அடியேனுக்கு அருள்புரிய வேண்டும். என்று சுடலையின் முன் நின்று கதறினார். சுப்பையனின் ஆள் மூலம் நடந்ததை அறிந்த மூப்பனார், கோயிலுக்கு வருகிறார். “சுப்பையனே.. நீங்க கவலைப்படாதீங்க, என் அப்பன் சுடலை எல்லாத்தையும் பார்த்துக்குவான்.
அவனை நம்பி செல்லுங்கள்’’ என்று ஆறுதல் கூறினார். எடுத்த காண்ட்ராக்ட்ட வேண்டாம் என்று சொன்னால். கொன்னு போடுவானுகளே என்று சுப்பையன் புலம்பினார். மூப்பனார் கூறினார், “மனபயம் வேண்டாம், மயானச்சுடலை இருக்கிறான். தைரியமாகச் செல்லுங்கள்’’. என்று கூறி சுடலைக்கு திருநீறு கொடுத்து அனுப்பி வைத்தார் மூப்பனார்.
சுப்பையன் கூறியதை ஆங்கிலேய அதிகாரியும், பொறியாளரும் கேட்கவில்லை. அவர்கள் பாலம் கட்டும் இடத்திற்கு விரைந்து வருகின்றனர். ஆங்கிலேய அதிகாரி கூறினார், `சாமி, பூமின்னு சொல்லாதே, உடனே வேலையை தொடங்கு’ என்று உத்தரவிட்டார். மறு நிமிடம், அந்த அதிகாரி வந்த குதிரை, உடலை உசுப்பியது, அதன் மேலிருந்த அவர் கீழே விழுந்தார். குதிரை வேகமாக சுடலைமாட சுவாமி பீடம் முன்பு வந்து நின்றது.
அதிகாரி, பொறியாளர், சுப்பையன் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் மெய்மறந்து நின்று பார்த்தனர். விழுந்த அதிகாரி எழுந்து நிற்க முடியவில்லை. தடுமாறினார். வலி தாங்க முடியாமல் கத்தினார். சுப்பையன், அதிகாரியிடம், மூப்பனாரை அழைத்துச் சென்றார். அவர் கோயில் திருநீற்றை வலி இருந்த இடங்களில் இட, வலி நிவாரணம் ஆனது. அதிகாரி மெய் சிலிர்த்தார்.
சுடலை கோயிலை விட்டுவிட்டு, கோயிலுக்கு எந்த பாதிப்பும் வராமல் பாலம் கட்ட உத்தரவிட்டார். பாலம் கட்டப்பட்டது. கோயிலை, பதிபக்தியுடன் சுப்பையன் மற்றும் அவர் வம்சத்தினர் இன்றும் வழிபட்டுவருகிறார்கள். அச்சன்கோயில் – செங்கோட்டை சாலையின்யோரம் அமைந்துள்ள இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி முதல் நாள் கொடைவிழா நடைபெறுகிறது.
தொகுப்பு: சு. இளம் கலைமாறன்
The post மரண பயம் போக்கும் மயானச்சுடலை appeared first on Dinakaran.