*போலீசாருக்கு எஸ்பி பாராட்டு
திருப்பதி : திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து சென்னையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் லாரியில் லோடு ஏற்றி கொண்டு சென்னைக்கு நேற்று முன்தினம் புறப்பட்டார். அப்போது, ஸ்ரீசிட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கத்தியவேடு கிராஸ் சாலை அருகே சென்று கொண்டிருந்த போது 3 நபர்கள் லாரியை வழிமறித்துள்ளனர்.
அதனால் லாரியை நிறுத்திய பார்த்திபனை அந்த நபர்கள் சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த ₹5 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பார்த்திபன் இதுகுறித்து ஸ்ரீசிட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், ஸ்ரீசிட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல வருடங்களாக வழிப்பறி சம்பவம் நடைபெறாமல் இருந்த நிலையில், இதனை விரைந்து தடுக்க எஸ்பி பரமேஸ்வர், டிஎஸ்பி ஜெகதீஷ் நாயக்கிற்கு உத்தரவிட்டார். பின்னர், டிஎஸ்பி ஜெகதீஷ் நாயக் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, ஸ்ரீசிட்டி அருகே ஒரு இடத்தில் பதுங்கி இருந்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட தனுஷ், சரண், நவீன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் 3 பேரையும் நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்த ₹3500 பணம் மற்றும் வழிப்பறிக்காக பயன்படுத்திய 2 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வழிப்பறியில் ஈடுபட்ட 24மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசாரை எஸ்பி பரமேஸ்வர பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
The post திருப்பதி அடுத்த கத்தியவேடு பகுதியில் லாரி டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.