×

இயற்கை தோட்டம், மருத்துவ தாவரங்கள், விளையாட்டு உபகரணங்களுடன் சென்னை மாநகராட்சி பகுதிகளில் புதிதாக 50 பூங்கா, 15 விளையாட்டு மைதானங்கள்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வசதிக்காக, இயற்கை தோட்டங்கள், மருத்துவ தாவரங்கள், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் புதிதாக 50 பூங்காக்கள் மற்றும் 15 விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் தற்போது 786 பூங்காக்கள், 104 சாலை மைய தடுப்புகள், 113 போக்குவரத்து தீவுத்திட்டுகள் மற்றும் 163 சாலையோர பூங்காக்கள் உள்ளன. இந்த 786 பூங்காக்களில் ஒப்பந்த முறையில் 584 பூங்காக்களும், மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக 145 பூங்காக்களும், பொதுமக்கள் தத்தெடுப்பு முறையில் 57 பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் பசுமையாக காட்சியளிக்கும் வகையில் மரக்கன்றுகள் மற்றும் செடிகள் நடுதல், புல்வெளிகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பூங்காவிலும் 50 முதல் 100 எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் நாட்டு மரக்கன்றுகள் நடுதல், அனைத்து மரங்களிலும், சுவர்களிலும் பச்சை, மஞ்சள் நிறங்களில் வர்ணம் பூசுதல், பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் குறைபாடுகள் சரிசெய்தல் மற்றும் உயர்தரத்தில் நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பூங்காக்களில் பொதுமக்கள் அமரும் இருக்கைகளை சீரமைத்தல் மற்றும் வர்ணம் பூசுதல், கூடுதலாக தேவைப்படும் அளவுக்கு பொதுமக்கள் உட்காருவதற்கான இருக்கைகள் அமைத்தல், நடைபயிற்சி பாதைகள் தேவைப்படும் இடங்களில் அமைத்தல், ஏற்கனவே உள்ள நடைபாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு சீரமைத்தல் மற்றும் வர்ணம் பூசுதல், மின்விளக்குகளை சரிசெய்து பூங்காவில் உள்ள அனைத்து விளக்குகளையும் ஒளிரச்செய்தல், பூங்காவின் நுழைவாயிலில் அழகிய நிறத்தில் வர்ணம் பூசுதல், பூங்காக்களில் உள்ள செயற்கை நீரூற்று மற்றும் நீர்வீழ்ச்சி ஆகியவை செயல்படும் வகையில் புனரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக 50 பூங்காக்கள் மற்றும் 15 விளையாட்டு மைதானங்களை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் (பூங்காக்கள்) புவனேஷ்வரன் கூறுகையில், ‘‘சென்னையில் புதிதாக 50 பூங்காக்கள் மற்றும் 15 விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்காக்கள் அனைத்தும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் பசுமையாக உருவாகப்போகிறது.

இயற்கை தோட்டங்கள், மருத்துவ தாவரங்கள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் பிற பூங்காக்களில் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும். இதற்கான முன்மொழிவுகள் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திற்கு அனுப்பப்பட்டு, ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கப்படும். இதையடுத்து, டெண்டர் விடப்படும். கடந்த ஆண்டு, 150 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணியை, மாநகராட்சி துவக்கி, 37 பூங்காக்களின் பணிகள் முடிவடைந்தன. மீதமுள்ளவற்றில் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பல்வேறு கட்டப் பணிகளில் உள்ளன இன்னும் 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும். புதிய பூங்காக்கள் அமைப்பது மட்டுமின்றி, விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்தும், வசதிகள் குறைவாகவும் உள்ள பழைய பூங்காக்களை மாநகராட்சி சீரமைக்கும். இதுதொடர்பா, மண்டலத்திலும் எடுக்கப்படும் முன்மொழிவுகளை அனுப்புமாறு மண்டல அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம்,’’ என்றார்.

பசுமை திட்டுக்கள்
சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பூங்காக்கள் மற்றும் கல்வித் துறை) சரண்யா அரி கூறுகையில், ‘‘தற்போதுள்ள பூங்காக்களை பசுமையாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிய பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் புதுப்பித்தல் ஆகியவை அமைச்சரின் அறிவிப்பின்படி உள்ளன. நாங்கள் விரிவான திட்ட அறிக்கைகளை உருவாக்கி வருகிறோம். திறந்தவெளி மற்றும் பசுமை திட்டுக்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்,’’ என்றார்.

விதிப்படி டெண்டர்
மாநகராட்சி பொறியாளர் புவனேஸ்வரன் கூறுகையில், ‘‘சென்னையில் உள்ள 786 பூங்காக்களில் ஒப்பந்த முறையில் 584 பூங்காக்களும், மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக 145 பூங்காக்களும், பொதுமக்கள் தத்தெடுப்பு முறையில் 57 பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதத்துடன் பூங்கா பராமரிப்புக்கான ஒப்பந்தங்கள் காலாவதியானதால், பராமரிப்புக்காக டெண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம், விரைவில் இறுதி செய்யப்படும். பூங்கா பராமரிப்பு விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி செய்யப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படும்,’’ என்றார்.

விளையாட்டு மைதானங்களில் பராமரிப்பு பணி
சென்னை மாநகராட்சி 2021-22ல் ₹25 கோடியில் 28 பூங்காக்களும், 2022-23ல் ₹29 கோடியில் 84 பூங்காக்களும் சீரமைக்கப்பட்டுள்ளன. தோட்டங்கள், சிறிய தொட்டிகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளுடன் சுமார் 57 பூங்காக்கள் கடற்பாசி பூங்காக்களாக மாற்றப்படுகின்றன. அதே 2 ஆண்டுகளில் 68 விளையாட்டு மைதானங்கள் ₹28 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

The post இயற்கை தோட்டம், மருத்துவ தாவரங்கள், விளையாட்டு உபகரணங்களுடன் சென்னை மாநகராட்சி பகுதிகளில் புதிதாக 50 பூங்கா, 15 விளையாட்டு மைதானங்கள்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chennai ,
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!