ஊட்டி, ஜூன் 9: பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்கள், சிறந்த சமூக நல சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான விருது-2023 பெற விண்ணப்பிக்கலாம். இவ்விருது பெறுவதற்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கை பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, ெமாழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருதுக்கு விண்ணப்பிக்கும் தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் சுதந்திர தின விழாவின் போது தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படுகிறது. இவ்விருது பெறுவோருக்கு 10 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்று வழங்கப்படும். சிறந்த நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசுடன், 10 கிராம் தங்கப்பதக்கம், சான்று வழங்கப்படும். தகுதியான நபர்கள் மற்றும் நிறுவனங்கள் http://awards.tn.gov.in என்ற இணைய தளத்தின் வாயிலாக வரும் 10ம் தேதிக்குள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
The post பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை சிறந்த சமூக நல சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.