×

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 வயது மகனை அடித்து கொன்று புதைத்து விட்டு தாய் தப்பி ஓட்டம்: மாங்காடு அருகே பரபரப்பு

குன்றத்தூர்: சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் செல்வபிரகாசம் (27). இவர், அதே பகுதியை சேர்ந்த லாவண்யா (25) என்ற பெண்ணை காதலித்து, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் இவர்கள், மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு சர்வேஸ்வரன் (3) என்ற மகன் இருந்தான். ஆரம்பத்தில் சந்தோசமாக வாழ்ந்து வந்த, கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், மன வருத்தத்தில் இத்தம்பதிகள் இருவரும் சமீப காலமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அப்பொழுது லாவண்யா, மகன் சர்வேஸ்வரனை தன்னுடன் வைத்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன் செல்வபிரகாசம், கெருகம்பாக்கத்தில் இருக்கும் லாவண்யா வீட்டிற்கு தனது குழந்தையை பார்க்க சென்றார். அப்பொழுது, வீட்டில் லாவண்யா இல்லை. ஆனால் அக்கம் பக்கத்தினர், செல்வபிரகாசனிடம், மகன் சர்வேஸ்வரன் கடந்த 3 தினங்களுக்கு முன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த செல்வபிரகாசம், குழந்தை இறந்த தகவலை தனக்கு தெரிவிக்காமல், நைசாக அடக்கம் செய்துவிட்டு, லாவண்யா எங்கேயோ மாயமாகி சென்று விட்டதாக கருதிய செல்வபிரகாசம், தனது குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாகக்கூறி மாங்காடு காவல் நிலையம் மற்றும் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திலும் செல்வப்பிரகாசம் புகார் அளித்தார்.

இது குறித்து செல்வபிரகாசம் தரப்பினர் கூறுகையில், ‘தன்னை பிரிந்து தனியாக வசித்து வந்த லாவண்யா, தனது வீட்டின் அருகே வசித்து வந்த மற்றொரு நபருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். குழந்தை இறந்தபோது கூட அந்த நபரை அழைத்துச் சென்று தான் லாவண்யா, தனது கணவர் என்று பொய்கூறி, குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்து, உடலை அடக்கம் செய்திருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. எனவே, இவர்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி, தனது குழந்தையை ஏதாவது செய்து விட்டார்களா? என உண்மையை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து போலீசார் கூறுகையில்; குழந்தை சர்வேஸ்வரன் விளையாடும்போது கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு, கடந்த மாதம் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், மீண்டும் சில தினங்களுக்கு முன்பு மயக்கமடைந்த சர்வேஸ்வரனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்து விட்டதாகவும், உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது தாயாரிடம் ஒப்படைத்து விட்டதாகவும், இறப்பிற்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி மகன் இறந்து தகவலை தனக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்தநிலையில், மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது மாங்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 வயது மகனை அடித்து கொன்று புதைத்து விட்டு தாய் தப்பி ஓட்டம்: மாங்காடு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Mangadu ,Kunradthur ,Selvaprakasam ,Nadalkarai ,Chennai ,Lavanya ,
× RELATED மாங்காட்டில் கஞ்சா விற்ற பிரபல ரவுடி உள்ளிட்ட இருவர் கைது