×

சென்னை பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள 18 மாண்டிசோரி முறை வகுப்பறைகளை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!!

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியுடன் விடியல் மாண்டிசோரி கல்வி அறக்கட்டளையின் சார்பில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 5 சென்னை பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள 8 மாண்டிசோரி முறை வகுப்பறைகளையும், அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சென்னை பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள 10 மாண்டிசோரி முறை வகுப்பறைகளையும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , வி.க. நகர் மண்டலம், கோபாலபுரம், சென்னை நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின்போது, அமைச்சர் மாண்டிசோரி முறை வகுப்பறைகளுக்கான உபகரணங்களை வழங்கி, மாண்டிசோரி முறையில் கற்பித்தல் நிகழ்வதையும் பார்வையிட்டு, மாண்டிசோரி முறைகளில் பயிற்சி பெற்ற 37 மழலையர் ஆசிரியர்களுக்கு மாண்டிசோரி பயிற்சி சான்றிதழ்களையும் வழங்கினார்.இந்நிகழ்வில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் பேசும்பொழுது தெரிவித்ததாவது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்காக அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பள்ளிகளின் மேம்பாடு, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் என கல்வி வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், மாணவர்களின் கல்விக்கு பெரிதும் உறுதுணையாக, 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கான கல்வி மற்றும் அறிவுத்திறனை வளர்க்கும் கற்றல், கற்பித்தல் உபகரணங்களை விடியல் மாண்டிசோரி கல்வி அறக்கட்டளை கொளத்தூர் மற்றும் அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 11 பள்ளிகளில் உள்ள 18 வகுப்பறைகளுக்கு வழங்கி, 37 மழலை ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளது.

இவர்களின் சிறப்பான இந்தப் பணியினை பாராட்டுகிறேன். ஆசிரியர்கள் தாங்கள் கற்ற கற்பித்தல் முறையினை பயன்படுத்தி குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியினை வழங்கிட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த மாண்டிசோரி கல்வி முறையின் மூலம் குழந்தைகள் கற்றல் மேற்கொள்ளும் பொழுது, அவர்கள் சுயமேம்பாடு அடைகிறார்கள்.ஆசிரியர் உபகரணங்களைப் பயன்படுத்தி எவ்வாறு செயல்படுவது என்று கற்பித்தவுடன், குழந்தைகள் தங்களுடைய கவனத்தை ஒருமுகப்படுத்தி அந்த உபகரணங்களுடன் ஒருமுறை அல்ல, பலமுறை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து தனக்குத் தானே கற்றலை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.

மேலும், குழந்தைகள் தாங்களாகவே சுதந்திரமாக கற்றல் உபகரணங்களை தேர்ந்தெடுத்து, அந்த உபகரணங்களுடன் ஐம்புலன்கள் மற்றும் கைகளை பயன்படுத்தி கற்கும் பொழுது, தங்களை உடல்ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் மேம்படுத்திக் கொள்கிறார்கள். 2 வயது முதல் 6 வயதுக்குள் ஒரு குழந்தைக்கு இந்தக் கல்வி முறையை கற்பிக்கும்போது, அந்தக் குழந்தைக்கு கல்வி என்பது மிகவும் எளிதான ஒரு விஷயமாகி விடுகிறது.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோபாலபுரம் சென்னை நடுநிலைப் பள்ளியில் 3 மாண்டிசோரி வகுப்பறைகள், மடுமா நகர் சென்னை நடுநிலைப்பள்ளியில் 2 மாண்டிசோரி வகுப்பறைகள், செம்பியம், டி.வி.கே. நகர் மற்றும் கே.சி. கார்டன் சென்னை ஆரம்பப் பள்ளிகளில் தலா 1 மாண்டிசோரி வகுப்பறைகள் என மொத்தம் 8 மாண்டிசோரி முறை வகுப்பறைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எம்.எம்.டி.ஏ. பாடசாலை தெரு சென்னை நடுநிலைப் பள்ளியில் 3 மாண்டிசோரி வகுப்பறைகள், மஞ்சக்கொல்லை சென்னை ஆரம்பப் பள்ளியில் 3 மாண்டிசோரி வகுப்பறைகள், தியாகப்பா தெரு, பாரதிபுரம் மற்றும் என்.எஸ்.கே. நகரில் உள்ள சென்னை ஆரம்பப் பள்ளிகள் மற்றும் அமைந்தகரை சென்னை நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் தலா 1 மாண்டிசோரி வகுப்பறைகள் என மொத்தம் 10 மாண்டிசோரி முறை வகுப்பறைகள் என கொளத்தூர் மற்றும் அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 11 சென்னை பள்ளிகளில் மொத்தம் 18 மாண்டிசோரி முறை வகுப்பறைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிகளில், மேயர் ஆர்.பிரியா, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம். கே. மோகன், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, இ.ஆ.ப.,, மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர்.ந.இராமலிங்கம் , விடியல் மாண்டிசோரி அறக்கட்டளை செயலாளர் ஸ்ருதி கார்த்திக், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சென்னை பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள 18 மாண்டிசோரி முறை வகுப்பறைகளை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Segarbabu ,Chennai ,Dawn Montessori Educational Foundation ,Metropolitan Chennai Corporation ,Kolathur ,Assembly ,
× RELATED மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு...