×

101.3 டிகிரி பதிவு; நெல்லையில் மீண்டும் வெப்பம் அதிகரிப்பு

நெல்லை: நெல்லையில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. நேற்று 101.3 டிகிரி வெப்பம் பதிவானது. நெல்ைல மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்கள் கோடை வெப்பம் வாட்டி வதைத்தது. ஏப்ரல் மாதத்தில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது. மே முதல் வாரம் முதல் இந்த நிலை நீடித்தது. அதிகபட்சமாக 106 டிகிரி வரை வெப்பம் பதிவானது. வெப்பக்காற்று வீசியதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்தனர். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் துவங்கிய மறு நாள் முதல் மழை தொடங்கியது.

பரவலாக பெய்து வந்த மழை காரணமாக குளுகுளு காற்று வீசியது. அக்னி நட்சத்திர காலம் முழுவதும் மழைக் காலமாக கழிந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மீண்டும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. நெல்லையில் நேற்று பகலில் வெப்பநிலை 101.3 டிகிரி பதிவானது. இதனால் கடந்த சில நாட்களாக காற்று வாங்கிய இளநீர் விற்பனை மீண்டும் சக்கை போடு போடுகிறது. இளநீர் கடைகளில் உள்ளூர் இளநீர் ரூ.30 முதல் 40 வரை தரத்தை பொறுத்து விற்பனையாகிறது. பொள்ளாச்சி இளநீர் ரூ.40 முதல் 60 வரை விற்பனையாகிறது.

இளநீர் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால் விலை அதிகரித்துள்ளது. இளநீர் கடைகள் மட்டுமல்லாது கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தர்பூசணி பழங்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து தர்பூசணி வாங்கி வரும் வியாபாரிகள் ரோட்டோரம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீண்டும் வெப்பநிலை அதிகரிப்பால் இரவு நேரங்களில் ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் போன்ற மின் சாதனங்களை மின்சார பயன்பாடும்
அதிகரித்துள்ளது.

The post 101.3 டிகிரி பதிவு; நெல்லையில் மீண்டும் வெப்பம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai district ,Dinakaran ,
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...