×

கோவை மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு-உஷாராக இருக்க எஸ்பி அறிவுறுத்தல்

கோவை : கோவை மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட செல்போன்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதில் மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன், கூடுதல் எஸ்பி கரீமா, ஏடிஎஸ்பிக்கள் ஆறுமுகம், சுரேஷ் பங்கேற்றனர். மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் கொலை, ஆதாய கொலை, கொள்ளை. திருட்டு, நகை பறிப்பு, சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போதைப்பொருட்கள் விற்பனை, மது விற்பனை, குண்டர் தடுப்பு சட்டம், சூதாட்டம், லாட்டரி விற்பனை மற்றும் செல்போன் திருட்டு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக 4,551 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 5,150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் 22 கொலை குற்ற வழக்கு பதிவானது. கடந்த ஆண்டில் இதேகால கட்டத்தில் 22 பேர் கொலை செய்யப்பட்டனர். கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 38 பேர் கைது செய்யப்பட்டனர். 250 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 235 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 503 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

173 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 183 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 1,934 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3,413 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 3,448 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 5,392 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 197 குற்றவாளிகள் மீது 177 வழக்குகள் பதிவானது. சூதாட்டத்தில் ஈடுபட்ட 594 குற்றவாளிகள் மீது 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

247 திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 285 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 1.30 ேகாடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டது. குழந்தைகளுக்கு எதிராக 84 பாலியல் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 88 குற்றவாளிகள் மீது வழக்குப்பதியப்பட்டது. இதில் 78 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 20 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் காணாமல்போன 2 கோடி ரூபாய் மதிப்பிலான 1,162 செல்போன்கள் மீட்கப்பட்டது. தற்போது 168 செல்போன்கள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீசில் மோசடி குற்றங்கள் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 1,506 புகார்கள் பெறப்பட்டது. 6.5 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதில் 6 ேகாடி ரூபாய் மோசடி கும்பல் எடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சைபர் மோசடி குற்றங்களில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அதிகமாக ஏமாற்றப்படுவதாக தெரியவந்துள்ளது. ஐடி நிறுவனங்களில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். லோன் ஆப், கிரடிட் மற்றும் பல்வேறு லிங்க் மூலமாக தகவல் பெற்று அதில் பணம் முதலீடு செய்வதை தவிர்க்க அறிவுறுத்தி வருகிறோம். நடப்பாண்டில் விபத்து 11 சதவீதம் குறைந்துவிட்டது. விளம்பர பலகைகள் அனுமதியின்றி வைத்தால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 85 வழக்கு போடப்பட்டது.

மதுபான பார், கடைகள் உரிய நேர அனுமதியின்றி விற்கப்படுகிறதா? என கண்காணிக்கும் பணி நடக்கிறது. கடந்த சில நாட்களாக பார், கடைகள் சரியான நேரத்தில் மட்டுமே இயங்கி வருகிறது. கோவை மாவட்ட போலீசில் கடந்த ஜனவரி முதல் இதுவரை மாவட்ட போலீசார் குறை தீர்ப்பு முகாமில் 1,742 மனுக்கள் பெறப்பட்டு அதில் 1,571 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இருக்கும் அங்கீகரிக்கப்படாத கடைகள் அடையாளம் காணப்பட்டு வருவாய்துறை அதிகரிகளுடன் இணைந்து 276 கடைகள் அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கோவை மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு-உஷாராக இருக்க எஸ்பி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore district-SP ,Coimbatore ,Coimbatore Police SP ,Coimbatore district- SP ,Dinakaran ,
× RELATED சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு:...