×

அழுதலும் அருளலும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வைகாசி மூலம் திருஞானசம்பந்தர் குருபூஜை – 5.6.2023

‘‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்கிறார் ஔவையார். தாய் தந்தையரையே முதல் தெய்வமாகக் காண வேண்டும் என்பது அவரது கருத்து. ஆனால், அந்த தெய்வத்தையே தாயாகவும் தந்தையாகவும் காணும் நிலை என்ற ஒன்றுண்டு. அது சைவசமயத்தில் `சற்புத்திர மார்க்கம்’ என்று அழைக்கப் படுகிறது. இதை `மகன்மை நெறி’ என்கிறது தமிழ். தன்னைப் பிள்ளையாகவும் இறைவனைத் தன் பெற்றோராகவும் நினைந்து போற்றி, சற்புத்திர மார்க்கத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் திருஞானசம்பந்தப் பிள்ளையார்தான். இந்தப் பிள்ளை யார்? என்றால், சீர்காழியில் சிவபாத இருதயர் (சிவனின் பாதத்தை இதயத்தில் தாங்கியவர்) பகவதியார் (பகம் என்றால் ஆறு; ஆறு அற்புதக் குணங்களை உடையவர்) தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

இருந்தாலும், தன் உயிருக்குத் தந்தை தாயாக இறைவனைப் பார்த்தார். இறைவனைத் தன் பெற்றோராகப் போற்றிய இவரை, முருகப் பெருமானின் அவதாரம் என்றே போற்றுவது சான்றோர் மரபு. வடலூர் வள்ளல்பெருமான் முருகனைப் பற்றிப் பாடும்போது, ‘‘சைவம் தழைக்கத் தழைத்தாண்டி – ஞான சம்பந்தன் பேர்கொண்டு அழைத்தாண்டி’’ என்று பாடுகிறார். மூன்று வயதுக் குழந்தையாக ஆளுடைய பிள்ளையார் (பெற்றோர் இட்ட பெயர்) இருக்கும்போது, ஒருநாள் சிவபாத இருதயர் குளத்திற்கு நீராடச் செல்கிறார்.

அப்போது ‘‘நானும் வருவேன்’’ என்று அடம்பிடித்து, குளக்கரைக்குச் சென்றார் பிள்ளையார். அங்கு தந்தையார் நீரில் மூழ்கி மந்திரம் உச்சரித்தார். தந்தையைக் காணவில்லையே என்று நினைக்காமல், ‘‘அவரே ‘உலகியல்’ என்ற நீரில் முழ்கிவிட்டார்; அருளியல் வாழ்விற்கு இனி ஆண்டவன்தான் இனிய வழிகாட்டி என நினைந்து’’ குளத்தில் மூழ்கியிருக்கும் தந்தையாரை விட்டுவிட்டு சீர்காழி திருத்தோணிபுர மலையைப் பார்த்து அழுதார்.

அப்படி, ஆளுடைய பிள்ளையார் அழுததை, தெய்வச் சேக்கிழார், ‘‘அம்மே அப்பா என்று அழைத்தருளி அழுது அருள” என்று குறிப்பிடுகிறார். இதில் ‘‘அழுதார்’’ என்று மட்டுமே சொல்லாமல் ‘‘அழுது அருளினார்’’ என்கிறார்.ஆளுடைய பிள்ளையார் அழுதது அவர் வாழ்வின் பொருட்டு அன்று; நாம் வாழ. ஆகவேதான் அவர் அழுததை, ‘’அழுது அருளினார்’’ என்றார் சேக்கிழார். “குழந்தை பிறக்கும்போது அழுகிறது; அனைவரும் ஆனந்தத்தில் சிரிக்கிறார்கள்.

குழந்தை, அழவில்லையெனில் அனைவரும் அழவேண்டியதுதான்” என்பார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். அதுபோல் ஞானசம்பந்தர் அழுது நம்மை ஆனந்தப்படுத்தினார்; படுத்துகிறார். இறைவனைப் பணத்தினாலோ, பதவியினாலோ அடைய முடியாது. அகம் குழைந்து அழுவதன் மூலம்தான் அடைய முடியும். இதை, அழுது அடியடைந்த அன்பராகிய மாணிக்கவாசகர்,

‘‘யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும்
பொய்ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்பெறலாமே’’

– என்று பாடுகிறார்.

சிரிப்பு செயற்கையாக வரும் (கள்ளச்சிரிப்பு), கோபமும் செயற்கையாக வரும் (பொய்க் கோபம்). ஆனால், அகம் குழைந்து வருகின்ற அழுகையில் கள்ளமும் இருக்காது கபடமும் இருக்காது. கள்ளங்கபடமற்ற இடத்தில்தான் இறைவன் இருப்பார்.அழுது அரன் நாமத்தை உச்சரித்தால் அது நம்மை நல்வழியில் ஆற்றுப்படுத்தும் என்பதை ஆளுடையபிள்ளையாரே,

‘‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஒதுவார் நம்மை நன்னெறிக்கு உய்ப்பது”
– என்கிறார்.

அழுகையும்கூட தன்னலம் சார்ந்ததாக இல்லாமல் பொதுநலம் சார்ந்ததாக இருக்க வேண்டும். வள்ளற் பெருமான் உலக மக்களெல்லாம் மரணமிலாப் பெருவாழ்வு அடைய வேண்டும் என்று ஆண்டவனிடம் அழுதார். அந்த அழுகையால் அவரது உடம்பே நனைந்ததாம் அதை, என்று அவரே பதிவு செய்கிறார்.

‘‘நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றோர்
சொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே’’

மன்னன் முறையாக நாட்டைக் காக்காவிடில், துன்பம் தாங்கமுடியாத பொதுமக்கள், நாட்டு நலனின்பொருட்டுக் கண்ணீர் வடிப்பர். அந்தக்கண்ணீர் மன்னனிடம் இருக்கும் செல்வக் கருவூலத்தையே தேய்க்கும் படையாக மாறும் என்பதை,

‘‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ
செல்வத்தைத் தேய்க்கும் படை’’

என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மன்னன் தன்னாட்டு மக்களை கண்ணீர் வடிக்காமல் காக்க வேண்டும். ஆனந்தக் கண்ணீர் வருமாறு ஆட்சி செய்யலாமே தவிர, அழுகைக் கண்ணீர் ஆகாது. (ஆனந்தக் கண்ணீர் என்பது கண்களின் நுனியில் அரும்பும். அழுகைக் கண்ணீர் என்பது கண்களின் அடியிலிருந்து வருவது; ஆனந்தக் கண்ணீர் இனிக்கும். அழுகைக் கண்ணீர் உப்புக் கரிக்கும்) நீதிகேட்டு வந்த கண்ணகியிடம் பாண்டிய நெடுஞ்செழியன் ‘‘விரித்த கூந்தலுடன் அலங்கோலமாக அரசவைக்கு வந்துள்ளாயே?” என்று கோபப்படவில்லை. மாறாக,

‘‘நீர்வார் கண்ணை எம்முன் வந்தை
யாரையோ நீ”

என்று ‘‘கண்ணீருடன் வருகிறாயே யார் நீ’’ என்று பரிவுடன் பேசியதிலிருந்து மக்களைக் காக்கும் அவனது பொறுப்புணர்ச்சி புரியவருகிறது. ஆக, அழுகை என்பது பொதுநலம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

ஞானசம்பந்தர் அழுதது பொதுநலனுக்காக. அதனால்தான், தெய்வச் சேக்கிழார் பிள்ளையாரின் புராணத்தைத் தொடங்குகிறபோதே ஞானசம்பந்தரின் பிற அற்புதச் செயல்களையெல்லாம் குறிப்பிட்டுப் பாடாமல், அவர் அழுததைக் குறிப்பிட்டு,

‘‘வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்’’

என்று அவரது கால்களைத் தன் தலைமேல் வைத்துக்கொண்டு பாடத் தொடங்குகிறார்.

அதுமட்டுமன்று, அவர் நமக்காக அழுததால் அவ்வழுகையில், அவரது ஒவ்வொரு உறுப்பு களையும் ‘மலர், மலர்’ என்று மலர்வைத்து வணங்குகிறார் தெய்வச் சேக்கிழார். கண்மலர்களில் நீர்வர, அதைக் கையாகிய மலர்களின் மூலமாகப் பிசைந்து, வண்ணமிகு சிவப்பு மலராகிய இதழ்கள் துடிக்க, அழுதருளினார் என்பதை,

‘‘கண்மலர்கள் நீர்ததும்பக்
கைம்மலர்க ளாற்பிசைந்து
வண்ணமலர்ச் செங்கனிவாய்
மணியதரம் புடைதுடிப்ப
எண்ணில்மறை ஒலிபெருக
எவ்வுயிரும் குதூகலிப்பப்
புண்ணியக்கன் றனையவர்தாம்
பொருமிஅழு தருளினார்’’

என்று பாடுகிற தெய்வச் சேக்கிழார், ஆளுடைய பிள்ளையார் அழுததை ‘‘அழுதார்’’ என்று மட்டும் சொல்லாமல் ‘‘அழுது அருளினார்’’ என்கிறார். அந்த அழுகை திருத்தோணிபுரம் இறைவனுக்குக் கேட்டது. உடனே சிவபெருமான் உமையம்மையுடன் தோன்றிப் பால் கொடுத்தார். ‘‘அழுத பிள்ளைக்குத்தானே பால்கிடைக்கும்’’ அவ்வகையில், அழுத நம் ஆளுடைய பிள்ளைக்காக உமையம்மை யாருமே இதுவரை வாய்வைத்து அருந்தாத, ஏன்? முருகப்பெருமானே வாய் வைத்து அருந்தாத தன் திருமுலையிலிருந்து பால்கரந்து பொற்கிண்ணத்தில் தர, இறைவன் அதை வாங்கி, அதில் சிவஞானம் என்னும் இனிப்பைக் கலந்து பிள்ளையாருக்கு ஊட்டினார். அம்பிகை தந்தது ஞானப்பால்; அதில் சிவபெருமான் கலந்ததும் சிவஞானம். இரண்டையும் ஒரே நேரத்தில் அருந்தியதால் அவருக்கு இருபெரும் ஞானங்கள் கிடைத்தனவாம். இதை,

‘‘சிவனடியே சிந்திக்குந்
திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாற்றும்
பாங்கினில்ஓங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம்
உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர்
தாம்உணர்ந்தார் அந்நிலையில்’’

– என்று பதிவு செய்துள்ளார் தெய்வச் சேக்கிழார்.

அதாவது, கலைஞானம் மற்றும் மெய்ஞ் ஞானம் ஆகிய இரண்டையும் பெற்றார். பால் அருந்தும்வரைதான் அவர் ஆளுடைய பிள்ளையார். அந்தியதும் அவர் திருஞானசம்பந்தர். ‘திரு’ என்றால் இறைவன்; ‘ஞானம்’ என்றால் நல்லறிவு. ‘சம்’ என்றால் நல்ல; ‘பந்தம்’ என்றால் உறவு; இறைவனிடம் சேர்க்கும் ஞானத்துடன் அவர் நல்ல உறவு கொண்டதால் அவர் திருஞான சம்பந்தர் ஆகினார்.இன்று நம் வீட்டுப்பிள்ளைகள் அழுவது அடுத்த அறையில் இருக்கும் தாயிற்கே கேட்பதில்லை; இதைக் கேட்பாருமில்லை; ஆனால், குளக்கரையில் அவர் அழுத அழுகை தோணிபுரத்து இறைவன் காதுகளுக்கு ஏணி இல்லாமலேயே எட்டியிருக்கிறது. அதற்குக் காரணம், அவர் தனக்காக அழவில்லை; தரணிக்காக அழுதார். அதனால்தான் அழுத அந்தவாயை ‘‘மனிதவாய்’’ என்றுசொல்லி மாண்பைக் குறைக்காமல் ‘‘புனிதவாய்” என்று போற்றிப் புகழ்கிறார் தெய்வச்சேக்கிழார்.

மதுரையில் சமணம் ஓங்கி, சைவம் தாழ்ந்து, மன்னனும் மதியின்றித் தவித்தபோது மங்கையர்க்கரசியாகிய பாண்டியநாட்டு அரசியாரிடம், அவரின் அமைச்சராகிய குலச்சிறையார், ஞானசம்பந்தரைப் பாண்டிய நாட்டிற்கு அழைக்க வேண்டும் என்ற நோக்கில், பிள்ளையார் ஞானப் பாலுண்ட நலமிகு வரலாற்றை எடுத்துச் சொல்கிறார்.

அப்போது, சம்பந்தர் அழுதார்; அம்பிகை வந்தார்; பால் தந்தார் என்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மங்கையர்க்கரசியாரின் மார்பகத்தில் பால் சுரந்தது. ஆம், பிள்ளை அழுவதைக் கேட்டால் தாய்க்குப் பால் சுரக்காமல் இருக்குமா? இவ்வரலாற்றை வைத்துக்கொண்டே ஒரு பட்டிமண்டபத்தை நடத்திக் காட்டுகிறார் துறைமங்கலம் சிவப்பிரகாசர் பின்வரும் பாடலில்,

‘‘இலைபடர்ந்த பொய்கை இடத்து அழுதல்கண்டு
முலைசுரந்த அன்னையோ முன்னின் – நிலை விளம்பத்
கொங்கை சுரந்த கோமகளோ சம்பந்தா இங்கார் சொல் எனக்கு’’

அதாவது அழுகையைக் கேட்டு, அதனால் பால் தந்த உமையம்மை உயர்ந்தவளா? இல்லை, அழுதார் என்ற செய்தியை மட்டுமே கேட்டு, அதனால் பால்சுரந்த மங்கையர்க்கரசி உயர்ந்தவளா? நீயே சொல் சம்பந்தா? என்று, யாரிடமோ கேட்காமல் இதில் சம்பந்தப்பட்ட சம்பந்தரிடமே கேட்கிறார் சிவப்பிரகாசர்.இது ஒருபுறம் இருக்க, மதுரையில் சமணம் தழைத்து, சைவம் தாழ்ந்திருந்திருந்தபோது, ஞானசம்பந்தரை மதுரைக்கு அழைக்க, மங்கையர்க்கரசியாரிடம் குலச்சிறையார் ஞானசம்பந்தர் உமையிடம் பாலுண்ட வரலாற்றைச் சொல்ல, அப்போது மங்கையர்க்கரசியாருக்குப் பால் சுரந்தது என்று பெரிய புராணம் தெரிவிக்கிறது.

ஒருமுறை தேமொழியார் சுவாமிகள் பெரியபுராணச் சொற்பொழிவு செய்யும்போது நாள்தோறும் இரு பெண்மணிகள் சொற்பொழிவு கேட்க வருகிறார்கள். ஒருநாள் மேற்கண்ட பால்சுரந்த வரலாற்றைச் சொல்கிறார். அந்த இருபெண்மணிகளும் சட்டென்று எழுந்து வெளியே சென்று விடுகிறார்கள். தேமொழியார் சுவாமிகளுக்கு ஒரே வியப்பு.அடுத்த நாள் அதே பெண்மணிகள் குறித்த நேரத்திற்கு முன்பாகவே சொற்பொழிவு கேட்க வந்துவிடுகின்றனர். அவர்களிடம் தேமொழியார் சுவாமிகள் ‘‘ஏன் நேற்று திடீரென எழுந்து சென்றீர்கள்?” என்று கேட்க, ‘‘சுவாமி! தாங்கள், ஞானசம்பந்தர் அழுததால் உமையம்மைக்குப் பால்சுரந்தது என்றும் அதைக்கேட்ட மங்கையர்க்கரசியார்க்குப் பால்சுரந்தது என்றும் குறிப்பிட்டீர்கள்.

அதைக் கேட்ட போது எனக்கும் பால் சுரந்து விட்டது. அதனால்தான் வெளியே சென்றேன்’’ என்று ஒருபெண் சொல்ல, மற்றொரு பெண் ‘‘நான் அவருக்குத் துணையாகச் சென்றேன்” என்று சென்னார்கள் என்பது வரலாறு.ஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் அழுத அழுகை இருபதாம் நூற்றாண்டில் ஒரு பெண்ணுக்குப் பல்சுரக்க வைக்கிறது. எனில் அவரது வாய் மனித வாயன்று; புனித வாய்.ஞானசம்பந்தர் தன் புனித வாய் மலர்ந்து அழுததும் அம்மையும்அப்பனும் பாலூட்டி மறைகின்றனர்.

குளத்தில் நீராடிவிட்டு வந்த தந்தையார் ‘‘யார் தந்த எச்சில் பாலை உண்டாய்?’’ என்று சிறிய கோல்கொண்டு ஒச்சி (மிரட்டி)க் கேட்டார். அப்போது ஞானசம்பந்தர்,‘‘தோடுடைய’’ என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி, இறைவன் எப்படி எழுந்தருளினார் என்பதை விரித்துரைத்தார். இந்நிகழ்வைச் சற்று சிந்திக்க வேண்டும். தந்தையார் கேட்ட கேள்வி, ‘‘யார் தந்த பாலை உண்டாய்?’’ என்பதுதான். ஆனால், ஞானசம்பந்தரோ, பதிகத்தின் எந்த இடத்திலும் பாலைப்பற்றிச் சொல்லவில்லை. மாறாக, தனக்குப் பாலூட்டிய பரமனின் அடையாளங்களை மட்டுமே பதிவு செய்தார். கேள்வி உணவிலே தொடங்கினாலும் பதிலானது உணர்வாக அமைந்தது. இதுதான் அற்புதம். அப்படி, ஆண்டவனை அடையாளப்படுத்திப் பாடும்போதும் கூட, தன் அழுகைக்காகப் பால்சுரந்த அம்பிகையின் அடையாளங்களைச் சொல்லி இறைவன் இறைவியுடன் எழுந்தருளிய தன்மையை விரித்துரைத்துள்ளார்.

எடுத்த எடுப்பிலேயே ‘தோடுடைய’ என்று பெண்கள் அணியும் அணிகலனான தோட்டைக் கூறித் தொடங்கினார். பன்னிரு திருமுறையில் முதல் திருமுறையின் முதற் பாடலான இப்பாடல் த்+ஓ என்று ‘ஓங்காரத்துடன்’ தொடங்குவது இன்னுமோர் சிறப்பாகும்.இந்தத் தோடுடைய செவியன் என்ற பதிகத்தின்மீது தீராக்காதல் கொண்டு, தன்னைக் காண வருவோரிடம் ‘’தோடுடைய செவியன் பதிகம் பாடு’’ என்று கேட்டவர் ‘தோ.பா’ சுவாமிகள் என்றே அழைக்கப்பட்டார். இந்த ஒரு பதிகத்தின் ஒரு பாடலின் மூலமாக ஒரு ஞானியே உருவாகியிருக்கிறார் என்பது ஒரு பெரும்சிறப்பாகும்.

ஞானசம்பந்தர் சமணர்களுடன் வாதிடுகிறார். அப்போது அனல்வாதம் நடைபெறுகிறது. அனல்வாதம் என்றால் அவரவர் ஏட்டை நெருப்பில் போட வேண்டும். யாருடைய ஏடு பச்சையாக எரியாமல் இருக்கிறதோ அவர்கள்தான் வெற்றிபெற்றவர்கள் ஆவர்.அவ்வகையில், எரியும் நெருப்பில் சமணர்கள் ஒரு பச்சையான ஓலையில் மந்திரம் எழுதி இடுகின்றனர், அப்போது திருஞான சம்பந்தர் புதிதாக எழுதாமல் முன்பே எழுதிவைத்திருந்த ஏட்டுச்சுவடியில் ஒரு பதிக ஓலையை எடுத்து இடுகிறார். அது ‘’போகமார்த்த’’ என்று தொடங்கும் திருநள்ளாற்றுப் பதிகமாகும். சமணர்கள் இடுவதோ பச்சை ஓலை.

ஆனால், சம்பந்தர் இடுவதோ முன்பே பதப்படுத்தப்பட்ட காய்ந்த ஓலை. சுற்றியிருந்தோரெல்லாம் சம்பந்தர் காய்ந்த இலையை இடுகிறாரே. அது உடனே எரிந்துவிடும். ஆனால், சமணர் களின் பச்சோலையே நெருப்பில் சற்று நேரம் எரியாமல் இருக்கும் என்று நினைக்கிறார்கள்.அவர்களுக்குத் தெரியவில்லை. திருஞானசம்பந்தருக்குத் துணையாக இருப்பது தீநிறக்கடவுளான சிவபெருமான் என்று. அவர் தீயில் வெம்மையைச் செய்தவர். பெருந்தீயாக உள்ள சூரியன் எரிவதற்கே அவர்தானே காரணம். ‘‘அருக்கனில் சோதி அமைத்தோன்; தீயில் வெம்மை செய்தோன்’’ என்கிறார் மாணிக்க வாசகர். ஆனாலும், ஞானசம்பந்தர் தன் காய்ந்த ஓலை, பச்சோலையாக இருக்க பரமனைப்போற்றிப் பதிகம் பாடுகிறார்.

அப்படிப் பாடும்போதும் கூட, அந்தப் பதிகம் முழுவதிலும் தான் அழுதபோது தனக்குப் பால் சுரந்த அம்பிகையின் திருமுலையைச் சிறப்பித்தே பாடுகிறார். அப்போது பாடப்பட்டதே ‘‘தளிரிள வளமுலை’’ என்று தொடங்கும் பதிகமாகும்.பதிகத்தின் முதற்பாடலில் தளிர்போன்றதும் செம்மையான ஒளிபொருந்திய பேரழகு மிக்க அன்னையின் திருமுலைகள் குளிர்ச்சியும் இளமையும் அழகும் மிக்கது என்றும், இரண்டாம் பாடலில் குளிர்ச்சி பொருந்திய தாமரையின் மொட்டைப் போன்றது என்றும், மூன்றாம் பாடலில் முத்துமாலைகள் அணிவிக்கப்பட்டு அழகு மிக்கவை என்றும், நான்காம் பாடலில் வார்கச்சுகளால் கட்டப்பட்ட வனப்பு மிக்கவை என்றும், ஐந்தாம் பாடலில் சுடர்விடும் மணிகள் பதிக்கப்பட்ட பாற்கலசங்களைப் போன்றது என்றும், ஆறாம் பாடலில் இளமை மிக்கதும் பொன்னால் செய்யப்பட்டதும் மாந்தளிரைப் போன்றதும் என்றும் ஏழாவது பாடலில் சிறப்பு மிக்கதும் செல்வவளம் சான்றதுமான மணிகளால் அழகு செய்யப்பட்டவை என்றும், எட்டாம் பாடலில்பாலால் நிறையப்பெற்றது கதிர் விடும் பழுத்த தன்மையுடையவை என்றும் ஒன்பதாம் பாடலில் தளிர்போன்ற நிறமும் மான்மதமாகிய கஸ்தூரிச் சாந்து அணிந்தாலும் மணிகள் பொதித்த கலசம் ஒத்து இருப்பதும் என்றும் பத்தாம் பாடலில் ஒளிவிடுகின்ற பருத்த பால் சுரப்பன என்றும் பதினோராம் பாடலில் இத்தகு திருமுலைகளை உடைய அம்பிகையோடு இறைவன் உறைகிறார் என்றதும் இப்பதிகம் முழுக்கு இறைவியின் இனிய தனங்களைப் பாடினார் சம்பந்தர்.

பச்சோலையைத் தீயில் இடும் தறுவாயில் ஏன் சம்பந்தர் இப்பதிகத்தைப் பாட வேண்டும்? முளைத்து மூன்று வயதுகூட ஆகாத தனக்கு, யாருக்கும் தராத உண்ணாமுலையம்மை ஞானப்பால் தந்து பக்குவப்படுத்தினாள். பச்சைக் குழந்தையான தன்னைப் பக்குவப்படுத்தியது அன்னையின் திருமுலைப்பால். அதுபோல் காய்ந்த ஓலையையும் தீயில் பச்சையாக இருக்க, கருணையின் குறியீடாகிய அன்னையின் திருமுலைகளை இங்கு சிறப்பித்துப் பாடினார். அப்போது தீயில் இடப்பட்ட பதிகமும் பச்சையாக இருந்தது. அது ‘பச்சைப் பதிகம்’ என்றே போற்றப்படுகிறது. அந்தப் பதிகமும்கூட ‘‘போகமார்த்த பூண்முலையாள்’’ என்று அன்னையின் திருமுலையைச் சிறப்பித்தே தொடங்குகிறது.

ஞானசம்பந்தர் அழுதபோது அவரது அன்னையாகிய பகவதியாரை வரவழைத்துக்கூட பால் தரச்செய்திருக்க இறைவனால் முடியும். அப்படியிருக்க ஏன் உமையம்மையையே பால் தரச்செய்தார் என்று சிந்தித்தல் வேண்டும். ஞானசம்பந்தருக்கு அவர் அன்னை அளித்திருந்தால் அது மனிதப்பால்; அன்னை அம்பிகை அளித்ததோ புனிதப்பால், மேலும், ஞானசம்பந்தர் தனக்காக அழுதிருத்தால் அவரின் தாய் பாலூட்டியிருக்கலாம். தரணிக்காக அழுததால் தரணியின் தாய் ஊட்டுவதே உத்தமம்.

ஞானசம்பந்தர் தன்வாழ்வு முழுவதும் பிறருக்காகவே வாழ்த்தார். ஏதேனும் அழுகை ஒலி கேட்டால் அதை மாற்றும் மனம் கொண்டிருந்தார். திருமருகல் என்ற ஊரில் ஒரு பெண்ணும் ஆணும் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்ளலாம் என்று இரவு நேரத்தில் வெளியே வந்து கோயிலில் தங்குகின்றனர். அந்த ஆண்மகனைப் பாம்பு தீண்டி அவன் இறந்துவிடுகிறான். அப்போது அந்தப் பெண் தனக்குக் கணவனாகப்போகிற முறை மாமனாகவே இருந்தாலும், இன்னும் திருமணமாகாததால் அவன் சடலத்தைத் தொடாமல் அழுகிறாள். அதுவும் ‘‘பாம்பு தீண்ட முடிகிறது; ஆனால், என்னால் தீண்ட முடியவில்லையே” என்று அழுகிறாள்.

இதை, ‘‘வாளரவு தீண்டவும் தான் தீண்டகில்லாள்’’ என்று பதிவு செய்திருக்கிறார் தெய்வச் சேக்கிழார். இந்த ஒழுக்கம்மிகு அழுகையொலி சம்பந்தரின் செவிக்குக் கேட்டவுடனே அழுகையின் அற்புதம் உணர்ந்த நம் அற்புதர், ‘‘சடையா” என்று தொடங்கும் பதிகத்தைப்பாடி இறந்த ஆண்மகனை எழுப்பித் தருகிறார்.பின் மயிலையில் தனக்காக வளர்த்த பூம்பாவை இறந்துவிட, அவளை எரித்த சாம்பல் குடத்தை சம்பந்தர் முன் வைத்து அழுகிறார் சிவநேசஞ் செட்டியார்.

உடனே ‘‘மட்டிட்ட புன்னை’’ என்ற பதிகத்தைப் பாடி அந்தப் பூம்பாவையை எழுப்பித் தருகிறார். மற்றவர் அழுகைக்காக அருளியவர் சம்பந்தர். தனக்காக மட்டுமே அழுபவர்கள் சுயநல மனம் உடையவர்கள். தன்னைச் சார்ந்தவர்களுக்காக அழுபவர்கள் அன்பு மனம் படைத்தவர்கள். தன்னைச் சார்ந்தவர்களுக்காக மட்டுமின்றி உலகோர்க்காகவும் அழுபவர்கள்தான் அருள்மனம் படைத்தவர்கள். யாவர்க்குமாக இரங்கி பிறர் செய்யும் தவறுகளைக் கண்டு அடிக்கடி அழும் சித்தர் ஒருவர் இருந்தார்.

அவர்கள் கண்களில் எப்போதும் அழுகண்ணீர் இருந்ததால் அவர், ‘அழும் கண்ணீர்ச் சித்தர்’ என்று அழைக்கப்பட்டார். அப்பெயர் தற்போது அழுகணிச் சித்தர் என்று மருவிவிட்டது. திங்களூரில் தன்வீட்டிற்கு திருநாவுக்கரசர் உணவுண்ண வந்தபோது, தன் மகன் பாம்பு தீண்டி இறந்துபட, அவல அழுகையை வெளிக்காட்டாமல் உணவு பரிமாறினார் அப்பூதி அடிகளார். உண்மையை அறிந்த திருநாவுக்கரசர் இறைவனிடம் அழுது பாடி அப்புதல்வனை உயிர்ப்பித்தார்.

அவினாசிக்கு வரும்வழியில் ஒருவீட்டில் மங்கல ஒலியும் மற்றொரு வீட்டில் அழுகை ஒலியும் கேட்டார் சுந்தரர். ஒரு வீட்டில் மகனுக்குப் பூணூல் கல்யாணம் (உபநயனம்) செய்வதால் அங்கு மங்கலஒலியும், மற்றொரு வீட்டில் சில ஆண்டுகளுக்கு முன் கோயில் குளத்திலுள்ள முதலை பிள்ளையை விழுங்கிவிட்டது. அதனால் அப்பெற்றோர், ‘‘நமக்கும் பிள்ளை இருந்திருந்தால் நாமும் பூணூல் கல்யாணம் செய்திருக்கலாமே’’ என்று ஏங்கி, அழுதுகொண்டிருந்தனர். இதையறிந்த சுந்தரர், ‘‘இறைவனை வழிபடுவது இரண்டாவது வேலைதான்.

முதலில் பிள்ளையை எழுப்பி அவர்களின் அழுகையைப் போக்குவது’’ என்று குளக்கரைக்குச் செல்கிறார். அங்கு குளத்தில் நீரும் இல்லை. முதலையும் இல்லை. இறைவனைப் பாடியதும் வறண்ட குளத்தில் நீர் வந்தது. நீரில் முதலை வந்தது, முதலையின் வாயில் அன்றைய தின வளர்ச்சியுடன் பிள்ளை வந்தது. இப்படி ஆண்டவனை விட அடியார்களின் அழுகைக்காக இரங்கியவர்கள் அடியார்கள்.

‘‘தாய் அழ பிறக்க வேண்டும்; ஊர் அழ இறக்க வேண்டும்’’ என்பார்கள். தாய் தனக்குப் பிள்ளை பிறக்கும்போது வலியால் தன்னலத்தால் அழுவாள். ஆனால், இறக்கும்போது ஊரே சேர்த்து இத்தகு மனிதன் போய்விட்டாரே?’ என்ற அழ வேண்டும். அதுதான் சரியான வாழ்க்கை முறை. ஆகவே, அழுகை சுயநலத்தில் தொடங்கினாலும் அது பொதுநலத்தில்தான் முடிய வேண்டும். ஞானசம்பந்தர் அழுதது பொதுநலத்திற்காக.

தொகுப்பு: சிவ.சதீஸ்குமார்

The post அழுதலும் அருளலும் appeared first on Dinakaran.

Tags : Kunkum ,Tirunnasambandar Gurupuja ,Auvaiyar.… ,
× RELATED பிள்ளைகளின் பிடிவாதத்தை பிடிவாதத்தால் சரிசெய்வோம்!