×

டிவிட்டர் கணக்கு முடக்கத்துக்கு கண்டனம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சீமான் நன்றி

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டிவிட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டது. இதற்கு கண்டனத்தை தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளான பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரின் டிவிட்டர் பக்கங்கள் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டன.

சீமானின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கமான @SeemanOfficial முடக்கப்பட்டுள்ளது. சட்டபூர்வ கோரிக்கையை ஏற்று இந்தியாவில் கணக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அந்தப் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் சீமான் வெளியிட்ட பதிவில், ‘கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை (டிவிட்டரை) முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’’ என்று பதிவிட்டுள்ளார்.

* சென்னை போலீசுக்கு தொடர்பு இல்லை
சென்னை காவல் துறை வெளியிட்ட விளக்கம்: நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடகதளங்களை முடக்க வேண்டுமென சென்னை காவல் துறை சார்பில் எந்தவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பதை இதன் மூலம் தெளிவுப்படுத்தப்படுகிறது. எனவே, இவ்விவகாரத்தில் சென்னை காவல் துறையை தொடர்புபடுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தவறான தகவல் பரப்புவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

The post டிவிட்டர் கணக்கு முடக்கத்துக்கு கண்டனம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சீமான் நன்றி appeared first on Dinakaran.

Tags : Seeman ,Chief Minister ,M.K.Stalin ,Twitter ,CHENNAI ,Naam Tamilar Party ,chief coordinator ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை...