×

தண்ணீர் செல்வதில் சிக்கல் இருப்பதால் கோரை, பாமனி, வெண்ணாற்றை தூர்வார வேண்டும்

நீடாமங்கலம், மே 29: ஆறுகள் கீழேயும், பாசன வாய்க்கால் மேலேயும் உள்ளதால் தண்ணீர் பாய்வதில் சிக்கல் உள்ளது. எனவே கோரையாறு, பாமனியாறு, வெண்ணாற்றை தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ளது கோரையாறு தலைப்பு (மூணாறு தலைப்பு) இங்கு கல்லணையிலிருந்து பிரிந்து வரும் வெண்ணாறு வருகிறது. இந்த ஆறு வந்து சேரும் இடம் கோரையாறு தலைப்பாகும். இங்கிருந்து பாமனியாறு, கோரையாறு, வெண்ணாறு என மூன்று ஆறுகள் பிரிந்து திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பாசன வசதி தருகிறது. இதில் பாமணியாற்றில் 38,357 ஏக்கரிலும், கோரையாற்றில் 1,20,957 ஏக்கரிலும், வெண்ணாற்றில் 94, 219 ஏக்கரிலும் விவசாயிகள் மேட்டூர் அணை திறந்து வரும் தண்ணீரில் ஆண்டுதோறும் சாகுபடி செய்து வருகின்றனர்.

கடந்தாண்டு முன் கூட்டியே பெய்த தென் மேற்கு பருவமழையால் மேட்டூர் அணையில் மூன்று முறை நிறம்பி அதன் தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. அதன் பிறகு தமிழக முதல்வர் மே 24 ம் தேதியே குறுவை சாகுபடிக்கு தண்ணீரை திறந்ததால் விவசாயிகள் சாகுபடி செய்து பயனடைந்தனர்.இந்தாண்டு பருவமழை தாமதமாக தொடங்க உள்ள நிலையில் விவசாயிகள் சாகுபடி செய்ய எப்பவும் போல் ஜுன் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீடாமங்கலம் சுற்றியுள்ள பாமனியாற்றில் சித்தமல்லி, பரப்பனாமேடு, பூவனூர், ராஜப்பையன்சாவடி உள்ளிட்ட பல இடங்களிலும்,கோரையாற்றில் ஒரத்தூர், பெரியார் தெரு, முல்லைவாசல், பெரம்பூர், கண்ணம்பாடி, கீழாளவந்தச்சேரி, கருவேலங்குலம் உள்ளிட்ட பல இடங்களிலும், வெண்ணாற்றில் மேட்டுச்சாலை,நடுப்படுகை,பாப்பையன் தோப்பு,பழைய நீடாமங்கலம், அனுமந்தபுரம், பழங்களத்தூர், ஒட்டக்குடி, களத்தூர் உள்ளிட்ட பல இடங்களிலும் ஆறுகளில் நடுவில் மணல் திட்டுகளும், நாணல், பனை மரம், கருவேல் மரங்கள் மற்றும் காட்டாமணக்கு செடிகள் திட்டு திட்டுகளாக உள்ளதால் மேட்டூரிலிருந்து திறக்கப்படும் தேங்கி விவசாயத்திற்கு அதிகம் பயன்படாத நிலை உள்ளது.

ஆறுகளில் திருடப்பட்ட மணல்களால் ஆறுகள் கீழேயும், பாசன வாய்க்கால் மேலேயும் உள்ளதால் தண்ணீர் எவ்வளவு திறந்தாலும் பாசன மதகிலிருந்து ஏரி பாய தாமதம் ஏற்படுகிறது. இந்த ஆறுகளில் உள்ள திட்டுகள் பல ஆண்டுகளாக உள்ளது.எனவே மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் ஆறுகளில் தங்கு தடையின்றி செல்ல ஆறுகளை தூர் வார வேண்டும் என்றனர்.

The post தண்ணீர் செல்வதில் சிக்கல் இருப்பதால் கோரை, பாமனி, வெண்ணாற்றை தூர்வார வேண்டும் appeared first on Dinakaran.

Tags : pamani ,Needamangalam ,Koraiyar ,Korai ,Bamani ,Vennar ,Dinakaran ,
× RELATED உடல் ஆரோக்கியம் சீராக இருக்க இயற்கை...