×

நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர்களை தரதரவென இழுத்துச் சென்று கைது: ஜந்தர் மந்தர் கூடாரமும் அகற்றம்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தரதரவென இழுத்துச் சென்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஜந்தர் மந்தர் போராட்டக்களத்தில் இருந்த வீரர்களின் கூடாரங்களும் போலீசாரால் அகற்றப்பட்டது. சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள், அவர்களது சங்கத்தின் தலைவரான பாஜ எம்.பி பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி அதிர வைத்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், பாலியல் புகாருக்குள்ளான பிரிஜ் பூஷண் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் கடந்த ஒரு மாதமாக ஜந்தர் மந்தரில் கூடாரம் அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் நேற்று திறக்கப்பட்டதை தொடர்ந்து பலத்த காதுபாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதேநேரம் புதிய நாடாளுமன்ற கட்டிடம் எதிரே மகளிர் மகா பஞ்சாயத்து நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் அதில் கலந்து கொள்வதற்காக பேரணியாக செல்வோம் என்றும் மல்யுத்த வீரர்கள் அறிவித்து இருந்தனர். அவர்களது இந்த அறிவிப்புக்கு அரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாய சங்க அமைப்புகள் தங்களது ஆதரவை தெரிவித்தன. அதோடு, மகளிர் மகா பஞ்சாயத்து கூட்டத்தில் பங்கேற்க டெல்லி நோக்கி வருவதாகவும் அறிவித்து இருந்தனர். குறிப்பாக, பாரதிய கிசான் சங்க விவசாய அமைப்பின் முன்னணி தலைவரான ராகேஷ் திகைத் டெல்லி போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தார். டெல்லியில் வீரர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் களமிறங்குவார்கள் என்றும், நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர்களின் பேரணியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான விவசாயிகள் காஜிப்பூர் எல்லையில் கூட உள்ளதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில் ஜந்தர் மந்தரில் போடப்பட்டு இருந்த தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு மல்யுத்த வீரர்கள் நேற்று காலை நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்டனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது வினேஷ் போகத், சங்கீதா போகத் மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்டோரை போலீசார் மடக்கினர். அப்போது அவர்களது பிடியில் இருந்து திமிறிக்கொண்டு முன்னேற முயன்றனர். அவர்களை வலுகட்டாயமாக தரதரவென இழுத்தும் குண்டு கட்டாக தூக்கிச்சென்றும் கைது செய்து பேருந்தில் ஏற்றினர். பின்னர் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒன்றுசேர விடாமல் தடுத்து வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். அதன்பின் போராட்டகளத்தில் இருந்த கூடாரங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி அங்கு வீரர்களுக்காக வைக்கப்பட்டு இருந்த கட்டில், மெத்தை, மின்விசிறி, ஏர்கூலர் அனைத்தையும் அங்கிருந்து அகற்றி போலீசார் அள்ளிச்சென்றனர். அதோடு, மீண்டும் போராட்டகளத்திற்கு மல்யுத்த வீரர்கள் வர அனுமதிக்கமாட்டோம். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

* குற்றவாளிக்கு அரசு அடைக்கலம் வினேஷ் போகத் கண்ணீர் கைது செய்யப்பட்ட பின் பேருந்தில் தள்ளப்பட்ட வினேஷ் போகத் கண்ணீர் மல்க பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘நீதி வேண்டும் என்று போராடியதற்காக நாங்கள் தண்டிக்கப்பட்டுள்ளோம். குற்றவாளி சுதந்திரமாக சுற்றி வருகிறார். அவருக்கு அரசு அடைக்கலம் அளித்து வருகிறது. நாட்டிற்காக பதக்கம் வென்ற மகள்களாகிய நாங்கள் நீதி கேட்டதற்காக சிறையில் தள்ளப்படுகிறோம். புதிய இந்தியாவை வரவேற்கிறோம் என்றார்.

* முடிசூட்டு விழா முடிந்துவிட்டது; கொடுங்கோல் மன்னர் மக்கள் குரலை நசுக்க தொடங்கிவிட்டார் மல்யுத்த வீரர்கள் வலுகட்டாயமாக கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி: முடிசூட்டு விழா முடிந்துவிட்டது. கொடுங்கோல் மன்னர் வீதியில் மக்கள் குரலை நசுக்க தொடங்கிவிட்டார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்: நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்களை இப்படி கைது செய்தது தவறானது. கண்டனத்துக்குரியது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: வீரர்களை போலீசார் தரதரவென இழுத்துச் சென்றது வெட்கக்கேடானது. எதிர்ப்பை ஒடுக்குவது சர்வாதிகாரிகளின் வழக்கம்.

The post நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர்களை தரதரவென இழுத்துச் சென்று கைது: ஜந்தர் மந்தர் கூடாரமும் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Jandar Mantar ,New Delhi ,Parliament ,Dadavena ,Jandar Mantar tent ,Dinakaran ,
× RELATED புதிய நாடாளுமன்ற கட்டிடம் அருகே உ.பி வாலிபர் தீக்குளிப்பு