×

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அதிகபட்ச விலைக்கு கொப்பரை கொள்முதல்-விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், அதிகபட்ச விலைக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது என, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், கடந்த மாதம் நடந்த கூட்டத்தின் போது விவசாயிடமிருந்து பெறப்பட்ட 242 மனுக்களில், 197 மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் பதில் அளித்தனர்.

கூட்டத்தில், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசியதாவது: கிருஷ்ணகிரி- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவேரிப்பட்டணம், பையூர் பகுதிகளில் சாலையோரம் மாம்பழ கடைகளை ஏராளமானோர் வைத்துள்ளனர். இந்த கடைகளில் மாம்பழங்கள் வாங்க வருபவர்கள் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அந்த கடைகளை சாலையில் இருந்து, சுமார் 20 அடி தூரம் தள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு, கடந்த 15 ஆண்டுகளாக ஏக்கருக்கு ₹25 ஆயிரம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. யானை தாக்கி காயம் அடைந்தவர்களுக்கு ₹60ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. எனவே, பாதிப்புக்கான இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க, சோலார் மின்வேலிகள் அமைக்க வேண்டும். மயில்கள், குரங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க, அரசுக்கு கருத்துரு அனுப்ப வேண்டும்.

தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதிகளில், ஆழ்துளை கிணறுகளில் 700 அடிக்கு கீழ் தான் தண்ணீர் கிடைக்கிறது. இதனால், சொட்டுநீர் பாசனம் அமைத்துள்ளோம். சொட்டுநீர் பாசனம் அமைக்க, 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு மானியம் வழங்குவதை, 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். நாராயணன்ராவ் ஏரி கரையை பலப்படுத்த வேண்டும். விவசாயிகள், நுகர்வோர் பயன்பெறும் வகையில், காவேரிப்பட்டணம் உழவர் சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். வாரச்சந்தைகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும். தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். தேங்காய் ₹25, தென்னை நாற்றுகள் ₹160, கொப்பரைக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசி, 240 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். யானைகளால் சேதமாகும் பயிர்களுக்கு இழப்பீடு தொகை உயர்த்தி வழங்குவது குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கொப்பரை தேங்காய் அதிகபட்ச விலைக்கு கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது. தென்னை ஆராய்ச்சி மையம் கோரி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு கருத்துரு அனுப்பபட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள், வாரச்சந்தைகளின் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மாரசந்திரம், படேதலாவ் கால்வாயில் அடைப்பு உள்ள இடங்கள் உடனடியாக சரி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இக்கூட்டத்தில், டிஆர்ஓ ராஜேஸ்வரி, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முகமது அஸ்லாம், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் சங்க பிரதிதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

The post ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அதிகபட்ச விலைக்கு கொப்பரை கொள்முதல்-விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Pochampalli ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...