×

செல்பி எடுத்த போது தவறியது; அணையில் விழுந்த செல்போனை மீட்க 41 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றம்: சட்டீஸ்கர் அரசு அதிகாரி சஸ்பெண்ட்

காங்கர்: செல்பி எடுத்த போது தவறி தண்ணீரில் விழுந்த செல்போனை எடுக்க அணையில் இருந்த 41 லட்சம் லிட்டர் தண்ணீரை அரசு அதிகாரி வெளியேற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை சட்டீஸ்கர் அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் உணவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 21ம் தேதி காங்கர் மாவட்டத்தில் உள்ள கெர்கட்டா அணை பகுதிக்கு சுற்றுலா சென்றார். அப்போது அணையில் மேற்பகுதியில் நின்று கொண்டு வெளியேறும் தண்ணீர் தெரியும்படி செல்பி எடுக்க ராஜேஷ் விஸ்வா முயன்றார். எதிர்பாராதவிதமாக அவரது ரூ1 லட்சம் மதிப்பிலான சாம்சங் கேலக்ஸி எஸ்23 செல்போன் அணைக்குள் விழுந்துவிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்குள்ள கிராம மக்களை தொடர்பு கொண்டு செல்போனை எடுத்து தரும்படி கேட்டார். அணையில் 10 அடி அளவுக்கு 41 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் மூழ்கி பார்த்து தேடியும் எடுக்க முடியவில்லை. இதையடுத்து நீர்வளத்துறையை சேர்ந்த சப்டிவிஷனல் அதிகாரி ஆர்.சி. திவாரை தொடர்பு கொண்ட ராஜேஷ் விஸ்வாஸ் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற அனுமதி கேட்டார். அவரும் அனுமதி கொடுத்து விட்டார். இதையடுத்து 30எச்பி சக்தி கொண்ட 2 டீசல் மோட்டார்களை கொண்டு வந்து அணையில் இருந்த 41 லட்சம் லிட்டர் தண்ணீர் 3 நாட்களாக வெளியேற்றப்பட்டது. அதன்பின் அவர் தண்ணீரில் விழுந்த செல்போனை எடுத்தார்.

1500 ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் அணைத்தண்ணீர் ரூ1 லட்சம் செல்போனுக்காக முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றிய தகவல் அறிந்த கலெக்டர் பிரியங்கா சுக்லா உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும்அணை தண்ணீரை வெளியேற்ற அனுமதி கொடுத்த அதிகாரி ஆர்.சி.திவார் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார். அந்த அறிக்கையில் எந்தவித அனுமதியும் பெறாமல் செல்போனை எடுப்பதற்காக அணையில் இருந்த 41 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கோடை காலத்தில் இப்படி தண்ணீரை வீணாக்கிய உணவு அதிகாரி ராஜேஷ் விஸ்வாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். ஆர்சி திவாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒருநாளுக்குள் அவர் விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி நீர்வளத்துறை செயலாளருக்கு கலெக்டர் பிரியங்கா சுக்லா கடிதம் எழுதி உள்ளார். அதில் அணை தண்ணீரை வெளியேற்ற தன்னிச்சையாக அனுமதி அளித்த திவார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார். இந்த சம்பவம் சட்டீஸ்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post செல்பி எடுத்த போது தவறியது; அணையில் விழுந்த செல்போனை மீட்க 41 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றம்: சட்டீஸ்கர் அரசு அதிகாரி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh government ,Kangar ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...