×

மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் விண்ணப்பித்த 94,195 பேரின் ஹால் டிக்கெட்டை ‘டவுன்லோடு’ செய்து மோசடி

மும்பை: மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் விண்ணப்பித்த 94,195 தேர்வர்களின் ஹால் டிக்கெட்டை ‘டவுன்லோடு’ செய்து மோசடியில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (எம்பிஎஸ்சி) சார்பில் அரசுப்பணிக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த தேர்வுக்கான இணையதளம் மர்ம நபரால் ‘ஹேக்’ செய்யப்பட்டது. அதிர்ச்சியடைந்த மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் துரித நடவடிக்கை எடுத்ததில், 94,195 தேர்வர்களின் ஹால் டிக்கெட்டுகள் ‘டவுன்லோடு’ செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து புனேவைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் ரோஹித் காம்ப்ளேவை, நவி மும்பை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அவரிடம் இருந்து டெஸ்க்டாப், லேப்டாப் மற்றும் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நவி மும்பை போலீஸ் கமிஷனர் மிலிந்த் பரம்பே கூறுகையில், ‘மகாராஷ்டிரா மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இணையதள முகவரின் ஐபி முகவரியைக் கண்டுபிடித்து, அதனை ஹேக் ெசய்துள்ளனர். மகாராஷ்டிரா முழுவதும் 1,475 மையங்களில் 4,66,455 தேர்வரின் விபரங்கள் அந்த இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. அவர்களில் 94,195 தேர்வர்களின் ஹால் டிக்கெட்டுகளை ஹேக்கர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். பின்னர் 94,195 தேர்வர்களின் முகவரியை தொடர்பு கொண்டு, அவர்களிடம் தங்களிடம் மகாராஷ்டிரா மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவித்துள்ள தேர்வின் வினாத் தாள் உள்ளது என்றும், அதற்காக ஒவ்வொரு வினாத்தாளுக்கும் ரூ.33,000 செலுத்த வேண்டும் என்றும் பேசியுள்ளனர்.

இதற்காக ‘எம்பிஎஸ்சி 2023 ஏ’ என்ற டெலிகிராம் சேனலை பயன்படுத்தி உள்ளனர். மகாராஷ்டிரா மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அளித்த புகாரின் அடிப்படையில், இவ்விகாரத்தில் தொடர்புடைய கல்லூரி மாணவர் ரோஹித் காம்ப்ளேவை கைது செய்துள்ளோம். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பல ஹேக்கர் குழுக்களுடன் தொடர்பு கொண்டு, மகாராஷ்டிரா மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் இணையதளத்தை ஹேக் செய்துள்ளார். தலைமறைவாக உள்ள காம்ப்ளேயின் உதவியாளரை தேடிவருகிறோம். ஹால் டிக்கெட்டுகளை மட்டுமே ‘டவுன்லோடு’ செய்துள்ளனர். மற்றபடி தேர்வு வினாத்தாளை அவர்களால் டவுன்லோடு செய்யவில்லை. இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்களை தேடி வருகிறோம்’ என்றார்.

The post மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் விண்ணப்பித்த 94,195 பேரின் ஹால் டிக்கெட்டை ‘டவுன்லோடு’ செய்து மோசடி appeared first on Dinakaran.

Tags : Maharashtra Public Serving Commission ,Mumbai ,Dinakaran ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்