×

ஜமாபந்தியில் 665 மனுக்கள் குவிந்தன

தர்மபுரி, மே 25: தர்மபுரி மாவட்டத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) 7 தாலுகாக்களில் நேற்று 2வது நாளாக நடந்தது. தர்மபுரி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் ஜமாபந்தி நடந்தது. நேற்று கிருஷ்ணாபுரம் உள்வட்டத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம், புளுதிக்கரை, ஆண்டிஅள்ளி, கொண்டம்பட்டி, கோணங்கிநாயக்கனஅள்ளி, வெள்ளாளப்பட்டி, அக்கமணஅள்ளி, நாய்க்கனஅள்ளி, வெள்ளோலை, மூக்கனூர், திப்பிரெட்டிஅள்ளி, கொண்டகரஅள்ளி, வேப்பிலைமுத்தம்பட்டி, கோடுஅள்ளி ஆகிய 14 வருவாய் கிராமத்திற்கான ஜமாபந்தி நடந்தது. முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று மற்றும் இருப்பிட சான்று என 665 கோரிக்கை மனுக்கள் பொதுமக்கள் வழங்கினர்.

ஜமாபந்தியில் பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களையும் முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டும் என கலெக்டர், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, உடனடியாக 42 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, 42 பயனாளிகளுக்கு இலவச வீட்டுனை பட்டாக்கள், பட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதிய தொகை, குடும்ப அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) பழனிதேவி, தர்மபுரி தாசில்தார் ஜெயசெல்வன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஜமாபந்தியில் 665 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.

Tags : Jamabandhi ,Dharmapuri ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்