×

மண்டல அளவிலான சிறுதானிய திருவிழா

தர்மபுரி, மே 24: தர்மபுரி மாவட்டத்தில், சிறுதானிய பயிர்கள் 1.25 லட்சம் ஏக்கரில் ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படுகிறது. ராகி, மக்காச்சோளம், சாமை, திணை, வரகு உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், ராகி மட்டும் 37 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. பென்னாகரம், நல்லம்பள்ளி, தர்மபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, மொரப்பூர், கடத்தூர், ஏரியூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய வட்டாரங்களில் சிறுதாaனியங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. சிறுதானியங்களிலிருந்து கூழ், களி, அடை, முறுக்கு, பிஸ்கட், சத்துபானங்கள் உள்ளிட்ட மதிப்புகூட்டு பொருட்கள் செய்து விற்பனை செய்யப்படுகிறது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் நேரில் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில் தர்மபுரி, நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி 2 கிலோ வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து, அதற்கான அரசாணை வெளியிட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் ரேஷன்தாரர்களுக்கு ராகி வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 1072 ரேஷன் கடைகள் மூலம் 4.65 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ ராகி விரைவில் வழங்கப்பட உள்ளது. அதற்கான பணிகளை தர்மபுரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மாவட்ட வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சிறுதானியங்களின் பயன்கள் மக்களைச் சென்றடையும் வகையில், வரும் 28, 29ம் தேதிகளில் மண்டல அளவிலான சிறுதானிய திருவிழா பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடக்கிறது. இதில் 9 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கின்றனர். 70 அரங்குகளில் சிறதானியங்கள் கண்காட்சி நடக்கிறது. வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் சிறுதானிய திருவிழாவை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிடுகிறார்.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெகடர் சாந்தி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக முதல்வர் விவசாயிகளின் நலனுக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தர்மபுரி மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைந்து மண்டல அளவிலான சிறுதானிய திருவிழா வரும் 28 மற்றும் 29ம்தேதிகளில் பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடக்கிறது. மண்டல அளவிலான சிறுதானிய திருவிழாவை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் 28ம் தேதி காலை துவக்கி வைக்க உள்ளார். இவ்விழாவில் எம்பி, எம்எல்ஏக்கள், பல்கலைக் கழக துணை வேந்தர், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த திருவிழாவில் 70க்கும் மேற்பட்ட கருத்து கண்காட்சி அரங்குகள், கருத்தரங்குகள், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் உரையாடல், அனுபவம் உள்ள பேராசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் செயல்விளக்கங்கள் இடம்பெறவுள்ளது.

இவ்விழாவில் தொழில் முனைவோர்கள் மற்றும் விவசாய உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் சிறுதானிய மதிப்பூட்டும் குடிசைத்தொழில் நிறுவனங்கள் கண்காட்சியில் இடம்பெறவுள்ளார்கள். சிறுதானிய திருவிழாவில் நாள் ஒன்றுக்கு 2500 விவசாயிகள் பங்கேற்க சிறப்பு வசதியும் மற்றும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில் தர்மபுரி மாவட்டத்தின் பக்கத்து மாவட்டங்களான கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கின்றனர். மேலும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளது போல் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மைத்துறை மூலம் தொடர்ச்சியாக சிறுதானிய விழாக்கள், விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்படும். இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்தார். பேட்டியின்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன், திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா உடனிருந்தனர்.

The post மண்டல அளவிலான சிறுதானிய திருவிழா appeared first on Dinakaran.

Tags : small grain ,Dharmapuri ,Dharmapuri district ,Zone-wide Small Grain Festival ,Dinakaran ,
× RELATED 2 குழந்தைகளுடன் இளம்பெண் மர்ம சாவு விஷம் குடித்த கணவனும் உயிரிழப்பு