×

ஆடுதுறையில் பெட்ரோல் பங்கில் ரூ.2000 நோட்டை வாங்க மறுத்து பைக்கில் போட்ட பெட்ரோலை மீண்டும் வெளியே எடுத்த ஊழியர்கள்

*வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்- பரபரப்பு

திருவிடைமருதூர் : திருவிடைமருதூர் வட்டம்ஆடுதுறையில் பெட்ரோல் பங்க்களில் ரூ.2000 நோட்டை வாங்க மறுத்து பைக்கில் போடப்பட்ட பெட்ரோலை மீண்டும் வெளியே எடுத்த ஊழியர்கள். வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் இறுதி வரை பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.இந்நிலையில் ரூ.2000 நோட்டு பொது இடங்களில் செல்லுமா? செல்லாதா? என்ற விவாதம் தொடர்ந்து நிலவி வருகிறது.

ஒரு சிலர் தாங்கள் வீடுகளில் சேமித்து வைத்திருந்த ரூ.2000 நோட்டுக்களை தற்போது வெளியே எடுத்து செலவு செய்ய தொடங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் ஆடுதுறையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் நேற்று தமது பைக்குக்கு பெட்ரோல் போட்டுவிட்டு அதற்குரிய தொகைக்காக ரூ.2000 நோட்டை வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்துள்ளார்.அப்போது ரூ.2000 நோட்டுகள் வாங்கப்படுவதில்லை. ஜி பே அல்லது வேறு வகையில் பெட்ரோல் போட்டதற்கான பணம் கொடுங்கள் என்று பங்க் ஊழியர் கேட்டுள்ளார். தற்போது வேறு பணம் எதுவும் இல்லை என்று வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார். பணம் கொடுங்கள் அல்லது வண்டியில் போட்ட பெட்ரோலை மீண்டும் எடுத்துக் கொள்கிறோம் என்று பங்க் ஊழியர் தெரிவித்துள்ளார்.

இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பெட்ரோல் போடுவதற்கும் நிறைய வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருந்தனர். பெட்ரோல் பங்க் முன்பு அறிவிப்பு பலகையில் ரூ. 2000 நோட்டு வாங்கப்படாது என்று எழுதி வைத்திருந்தால் முன்னதாக பெட்ரோல் போடாமல் இருந்திருப்போம் என்று வாடிக்கையாளர் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் வாக்குவாதம் முற்றியதில் அவரது பைக்கில் போடப்பட்ட பெட்ரோலை மீண்டும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அளந்து வெளியே எடுத்தனர். இதற்கு வாடிக்கையாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அரசின் டாஸ்மாக் கடையில் ரூ.2000 நோட்டு வாங்கப்படாது என்று எந்த அறிவிப்பும் செய்யவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது பொது இடங்களில் குறிப்பாக பெட்ரோல் பங்க் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் ரூ.2000 நோட்டு வாங்குவதற்கு முன்வராததால் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.

ரூ 2000 நோட்டுக்களை வங்கிகளில் மட்டும்தான் மாற்றிக் கொள்ள முடியுமா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தெளிவான அறிவிப்பினை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வெளியிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post ஆடுதுறையில் பெட்ரோல் பங்கில் ரூ.2000 நோட்டை வாங்க மறுத்து பைக்கில் போட்ட பெட்ரோலை மீண்டும் வெளியே எடுத்த ஊழியர்கள் appeared first on Dinakaran.

Tags : Uditrudur ,Stir ,Thiruvidimarathur ,Thiruvidimarudur ,Dinakaran ,
× RELATED சுற்றுலா வாகனத்தை தாக்கிய காட்டு மாடு: கொடைக்கானலில் பரபரப்பு