வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த புத்தகரம் கிராமம் உள்ளது. இங்குள்ள, பெருமாள் கோயிலில் புத்தர் சிலை உள்ளதாக அறிந்த வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து ஆய்வு குழுவினர் கூறுகையில், ‘மிகுந்த வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய வடிவில் மெருகூட்டப்பட்ட புத்தரின் கற்சிலை அமர்ந்த நிலையில் உள்ளது. 3/4 அடி உயரமுள்ள இச்சிலையில் நீளமான காதுகள் இரண்டும் தோள் வரை நீண்டுள்ளன. வட்டக் கண்கள் திறந்த நிலையில் உள்ளது.
மூக்கு தடித்த நிலையிலும் சுருள் சுருளான தலை முடியுடனும், இடப்புறத் தோள்பட்டை முதல் இடுப்பு வரை சீவர ஆடையுடனும், இச்சிலையின் பின்பக்கத் தலையில் தாமரை மலர் மீது சக்கரமும், பின்புற மேலாடை (சீவர ஆடை) நேர்த்தியாகத் தெரியும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக புத்தரின் சிலைகளில் மேலாடை தவிர ஆபரணங்கள் இருப்பதில்லை. ஆனால், இச்சிலையில் புத்தரின் கழுத்துப்பகுதியில் மூன்று வளையங்கள் காட்டப்பட்டுள்ளன. தலையில் உள்ள கொண்டை சற்று தள்ளி பின்னோக்கி இருப்பதால் இந்த சிலையின் காலம் கிபி 14ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற, சிலையை பக்தர் கோயிலுக்கு வேண்டுதலுக்காக வழங்கும் வழக்கமும் 14ம் நூற்றாண்டுகளில் மக்களிடையே இருந்துள்ளது. இச்செய்தியை தொல்லியல் துறை உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ், உதவி கல்வெட்டாய்வாளர்கள் நாகராஜன் மற்றும் பிரசன்னா ஆகியோரும் உறுதி செய்தனர்.
1990களில் ஊராட்சி மன்றத்தலைவராக இருந்த கங்கப்பன் என்பவரால் அவ்வூரில் உள்ள விநாயகர் கோயிலுக்கும் அரசுப் பள்ளிக்கும் இடையில் உள்ள பகுதியில் இருந்து இச்சிலையை கண்டெடுத்ததாகவும் அச்சிலையை அன்று முதல் புத்தகரம் பஜனை கோயில் எனப்படுகின்ற பெருமாள் கோயிலில் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அக்கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பவுத்த மத வழக்கமான மாலை 6 மணிக்குள் இரவு உணவை உண்டு முடிக்கும் பழக்கத்தைக் கொண்டு இருந்ததாகவும், 1930ம் ஆண்டு வரை விநாயகர் கோயிலுக்கு வெளியில் ஒரு புத்தர் சிலை வழிபாட்டில் இருந்ததாக செவிவழி செய்தி உள்ளது.புத்தர் சிலை உள்ள இவ்வூரின் பெயர் புத்தகரம் என்பதால், ஊர் பெயர் பற்றி மக்களிடம் விசாரித்தபோது மன்னர்கள் காலத்தில் இவ்வூரில் பவுத்த வழிபாடு இருந்ததாகவும் அதனால் இவ்வூர் பெயர் புத்தர் அகரம் என இருந்து காலப்போக்கில் புத்தகரம் எனத் திரிந்ததாக கூறுகின்றனர். மேலும், ஒருசிலர் இவ்வூரில் புத்த விகாரம் இருந்ததாகவும், எனவே இப்பகுதி புத்தவிகாரம் என வழங்கப்பட்டு பின்னாளில் இப்பெயர் திரிந்து புத்தகரம் என அப்பகுதிகள் கூறுகின்றனர்’ என்றனர்.
The post புத்தகரம் கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் சிலை: வரலாற்று ஆய்வாளர்கள் கள ஆய்வு appeared first on Dinakaran.
