×

எல்லையின் நிலையை மாற்றும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் ஐநாவில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்: ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஹிரோஷிமா: ‘‘தற்போதைய உலகின் உண்மை நிலவரங்களை பிரதிபலிக்காத வரையிலும், ஐநா சபையும் பாதுகாப்பு கவுன்சிலும் வெறும் பேச்சுக் களமாக மட்டுமே இருக்கும்’’ என ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி ஆணித்தரமாக வலியுறுத்தி உள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்நாடுகள் தங்களின் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எந்த ஒரு தீர்மானத்தையும் முறியடிக்க முடியும். இது மாற்றப்பட வேண்டும், பாதுகாப்பு கவுன்சிலை சீர்த்திருத்தம் செய்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளை நிரந்தர உறுப்பினராக்க வேண்டுமென பிரதமர் மோடி உலக அரங்கில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

தற்போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 மாநாட்டிலும் அவர், இந்தியா சார்பாக கருத்தை பதிவு செய்துள்ளார். ஜி7 மாநாட்டின் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி தனது உரையில் கூறியதாவது: உலகின் அமைதி, ஸ்திரத்தன்மை குறித்து ஏன் பல்வேறு அமைப்புகளில் பேச வேண்டும்? அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, இன்று மோதல்களை தடுப்பதில் வெற்றி பெறாதது ஏன்? தீவிரவாதத்தின் வரையறை கூட ஐநாவில் ஏன் ஏற்கப்படவில்லை? இதையெல்லாம் சுயபரிசோதனை செய்தால், ஒன்று தெளிவாகும். அதாவது, கடந்த நூற்றாண்டில் தொடங்கப்பட்ட ஐநா அமைப்பு, 21ம் நூற்றாண்டுக்கு ஒத்துப்போகும் வகையில் இல்லை.

இன்றைய உலகின் உண்மையை ஐநா பிரதிபலிக்கவில்லை. தற்போதைய யதார்த்தத்தை அது பிரதிபலிக்கவில்லை. அதனால்தான் ஐநா போன்ற பெரிய அமைப்புகளில் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமாகி உள்ளது. இந்த அமைப்புகள் உலகின் தெற்கின் குரலாகவும் இருக்க வேண்டும். இல்லையெனில், இந்த அமைப்புகளில் போர்களை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி பேச மட்டுமே முடியும். ஐநாவும் பாதுகாப்பு கவுன்சிலும் வெறும் பேச்சுக் களமாகத்தான் இருக்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மேலும், உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, ‘‘இன்றைய உலகில், எந்த ஒரு பிராந்தியத்திலும் ஏற்படும் பதற்றம் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது.

மேலும், குறைந்த வளங்களைக் கொண்ட வளரும் நாடுகள் தான் மிகவும் பாதிக்கப்படுகின்றன. ஐநா சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் மற்ற நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும். எல்லையில் தற்போதைய நிலையை மாற்றுவதற்கான ஒருதலைப்பட்ச முயற்சிகளுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். ஒன்றாக குரல் எழுப்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்’’ என்றார். கிழக்கு லடாக்கில் சீனா தொடர்ந்து இந்தியாவுக்கு குடைச்சல் தரும் நிலையில், பிரதமர் மோடி இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து 3 நாடுகள் பயணத்தின் முதற்கட்டத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி ஜப்பானில் இருந்து பப்புவா நியூ கினியா நாட்டிற்கு விமானத்தில் நேற்று புறப்பட்டுச் சென்றார்.

* மோடிக்காக பாரம்பரிய வழக்கத்தை மாற்றிய பப்பு
தென்மேற்கு பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். அவருக்காக அந்நாடு தனது பாரம்பரிய பழக்கத்தையே மாற்றிக் கொண்டது. பொதுவாக, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வரும் எந்த தலைவர்களுக்கும் அந்நாட்டு சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிப்பதில்லை. ஆனால், பிரதமர் மோடிக்கு சிறப்பு விதிவிலக்கு அளித்து முழு சம்பிரதாயப்படி வரவேற்பு அளித்தது. அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராபி விமான நிலையத்திற்கு நேரில் வந்து வரவேற்றார். இன்று அங்கு நடக்கும் இந்திய-பசிபிக் தீவுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். அதைத் தொடர்ந்து இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்கிறார்.

* மோடியின் மவுசை பார்த்து ஆடிப்போன அதிபர் பைடன்
ஜி7 மாநாட்டின் இடையே, ஹிரோஷிமாவில் குவாட் மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. அதில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பைடன், பிரதமர் மோடிக்கு மக்கள் மத்தியில் உள்ள மவுசைப் பார்த்து ஆடிப்போனதாக பயங்கரமாக புகழ்ந்துள்ளார். பைடன் கூறுகையில், ‘‘ஜனநாயகம் முக்கியம் என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். உண்மையிலேயே நீங்கள் எனக்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டீர்கள். அடுத்த மாதம் வாஷிங்டனில் விருந்துக்காக உங்களை நாங்கள் அழைத்துள்ளோம்.

அதில் ஒட்டுமொத்த அமெரிக்காவும் பங்கேற்க விரும்புகிறது. என்னிடம் உள்ள டிக்கெட் அனைத்தும் தீர்ந்து விட்டது. நான் இதை விளையாட்டுக்கு சொல்லவில்லை. வேண்டுமென்றால் எனது அதிகாரிகளிடம் கேட்டுப் பாருங்கள். இதுவரை ஒருபோதும் இவ்வளவு தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்ததில்லை. பிரபல நடிகர்கள் முதல் எனது உறவினர்கள் வரை உங்களை சந்திக்க ஆர்வமாக உள்ளனர். நீங்கள் ரொம்பவே பிரபலமாக உள்ளீர்கள். உங்களிடம் நான் ஆட்டோகிராப் வாங்கியே தீர வேண்டும்’’ என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* தடையில்லா வர்த்தகம் சுனக்குடன் ஆலோசனை
ஜி7 மாநாட்டின் இடையே, பிரதமர் மோடி நேற்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு தலைவர்களும், தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க ஒப்புக் கொண்டனர். இதே போல, பிரேசில் அதிபர் இனாசியோ லுலா டா சில்வாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

* அமைதி பூங்காவில் அஞ்சலி
ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அமைக்கப்பட்டிருக்கும் அமைதி நினைவு பூங்காவுக்கு ஜி7 தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று சென்றார். அங்கு நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அமைதி நினைவு அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, பார்வையாளர் புத்தகத்திலும் மோடி கையெழுத்திட்டார்

The post எல்லையின் நிலையை மாற்றும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் ஐநாவில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்: ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : UN ,PM Modi ,G7 ,Hiroshima ,Security Council ,
× RELATED சொல்லிட்டாங்க…